Published : 29 Sep 2014 10:02 AM
Last Updated : 29 Sep 2014 10:02 AM
எழுத்தாளர் கோணங்கிக்கு 2013-ம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோணங்கி, தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்திய கரிசல் இலக்கியத்தின் தொடர்ச்சி. அதன் மூன்றாம் தலைமுறைக் கதை சொல்லி. கோணங்கியின் கதைகள் கரிசல் மண்ணின் ஈரத்தைக் கொண்டவை. அவரது பாத்திரங்கள் கரிசல் வாழ்க்கையின் அசலான மனிதர்கள். விவசாயம் பொய்த்து மக்கள் தம் அன்றாடப்பாட்டுக்கு ஆலைகளை நம்பிக் கூலிகளாகச் சென்ற காலகட்டத்தின் காட்சிகளை இவரது கதைகள் கூர்மையாகப் பதிவுசெய்தன. இன்றைக்கும் நினைவுகொள்ளப்படும் அவரது கதை மாந்தர்கள், எல்லோருக்கும் பொதுவான காலச் சித்திரங்கள்.
கி.ராஜநாராயணன் தொடங்கிவைத்த கரிசல் இலக்கியத்தை அவருக்குப் பின்னால் வந்த பூமணி நவீனமாக்கினார். கோணங்கி அப்பகுதியின் வாய்மொழிக் கதை மரபின் அற்புதத் தொன்ம அம்சங்களைத் தன் கதைகளாக்கினார். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி மாய மாளிகையில் இருக்கும் மந்திரக் கிளியில் உள்ள அரக்கனின் உயிர் பறிக்கச் செல்லும் இளவரசனின் கதை போன்ற நம் பாட்டிமார்களின் கதைகளின் அம்சங்களைத் தன் கதைகளில் வெளிப்படுத்தினார்.
லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுத்துகளின் தாக்கம் பெற்ற கோணங்கி, எழுத்தாளர் காப்ரியெல் கார்சியா மார்க்கேஸுக்குக் ‘கல்குதிரை’ சிறப்பிதழைக் கொண்டுவந்தார். அதில் பல்வேறு எழுத்தாளர்கள் மார்க்கேஸின் படைப்புகளை மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தியிருந்தனர். இவை தமிழ்ப் படைப்பிலக்கிய வெளியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அடுத்த தலைமுறையில் தமிழ்ப் படைப்பு மொழியில் நிகழ்ந்த மாற்றத்திற்கு இந்த மொழிபெயர்ப்புகளும் காரணமாக இருந்தன.
லத்தீன் அமெரிக்கக் கதைகளுக்கும் நம் வாய்மொழிக் கதைக்கும் உள்ள ஒற்றுமைதான் கோணங்கி இவற்றை மொழிபெயர்க்கக் காரணமாக இருந்திருக்கும். மாக்கேஸின் ‘நூற்றாண்டுக் காலத் தனிமை’யில் வரும் ஊர்சுலா என்னும் மூதாட்டிக்கும் நம்முடைய பாட்டிமாருக்கும் ஒற்றுமைகள் அதிகம். மக்கோந்தோ நகர மனிதர்களின் நம்பிக்கைகள், மாந்திரீகங்கள் எல்லாமும் இந்தியத் தமிழ் மரபின் சடங்குகளை ஒத்தவை. கோணங்கி, வாய்மொழிக் கதை மரபுடன் தொடர்புடைய மற்ற கதைகளையும் தன் மொழியில் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கினார். ஆயிரத்தோரு அரேபிய இரவுகளே இதற்கு உதாரணம்.
கோணங்கி, அந்தக் கதைகளின் மந்திரத் தன்மையைத் தன் மண்ணின் கதை மாந்தார்கள் மூலம் மீண்டும் சிருஷ்டித்தார். புத்தம் புதிய மொழியில் கவிதை எழுதினாலும் தன் நிலத்திற்குரிய கரிசல் மொழியைத் தக்கவைத்திருக்கும் தேவதச்சனைப் போல் தன் புனைவுகளை மண்ணை ஆதாரமாகக் கொண்டே கோணங்கி சிருஷ்டிக்க விரும்புகிறார். அதன் கூறுகளை அவரது ‘த’நாவல்வரைப் பார்க்க முடிகிறது.
நகுலன், மெளனி, ஜி. நாகராஜன், போன்ற பலரும் கோணங்கியின் ஆதர்ச எழுத்தாளார்கள். ஆனால் அவர் தனக்கேயான படைப்பு மொழியை உருவாக்கிக்கொண்டார். கோவில்பட்டியில் வசிக்கும் கோணங்கி, கூட்டுறவு சங்க மொன்றில் அலுவலராகப் பணியாற்றியவர். முழுநேரப் பணியில் நாட்டமில்லாததால் ராஜினாமாசெய்து முழுநேர எழுத்தாளார் ஆனார்.
எழுத்தாளர்களுக்குப் பயணம் முக்கியமானது. நாள்தோறும் மாறும் நிலக் காட்சிகள் அவசியமானவை. கதையின் சித்திரங்களைத் துலக்கமாகச் சிருஷ்டிக்க இவைதாம் அவசியம். ஆகையால்தான் கோணங்கி தேசந்தாந்திர வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். இந்திய தேசம் முழுவதும் தொடர்ந்து பயணம் மேற்கொண்டுவருகிறார். தன் கல்குதிரை இதழில் தொடர்ந்து இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். மு. சுயம்புலிங்கம் போன்ற படைப்பாளிகளை அடையாளப்படுத்தியதும் இவர்தான்.
மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கோணங்கியைக் கவனப்படுத்தியவை. பாழி, பிதிரா உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார்.
விளக்கு விருது அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதின் பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT