Last Updated : 23 Jun, 2019 09:03 AM

 

Published : 23 Jun 2019 09:03 AM
Last Updated : 23 Jun 2019 09:03 AM

அகாலத்தில் மறையும் முகங்கள்

கோவையில் ஒரு கிராமத்தில் மலையாளப் பெற்றோருக்குப் பிறந்த ஸ்ரீபதி பத்மநாபா, தமிழ், மலையாளம் இரண்டின் மொழி, கலாச்சாரம் சார்ந்த செழுமையைப் பெற்றிருந்தவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நூல் வடிவமைப்பாளர், வரைகலை நிபுணர், இசைப் பாடல்களை எழுதுபவர் என்ற பன்முகங்கள் கொண்ட ஸ்ரீபதி பத்மநாபாவின் பெயர், 1990-களின் இறுதியில் நண்பரும் எழுத்தாளருமான சுதேசமித்திரனோடு இணைந்து கொண்டுவந்த ‘ஆரண்யம்’ நடுநிலை இதழுடன்தான் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பரிச்சயமானது. பெரிதும் வண்ண அட்டையையே பார்த்திராத, சின்னச் சின்ன அளவுகளில் வெளிவந்துகொண்டிருந்த சிறுபத்திரிகைகளின் காலம் அது.

வண்ண அட்டையுடன், ஏ4 அளவில் தீவிரப் படைப்புகள், படைப்பாளர்களின் ஸ்டைலான புகைப்படங்களோடு ‘ஆரண்யம்’ வெளியானபோது உண்டான மனக்கிளர்ச்சி இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. அந்த இதழில்தான் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தனது நண்பர்களுடன் சென்று நடிகர் திலகம் சிவாஜியைப் பார்க்கப் போன அனுபவத்தைக் கட்டுரையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை தமிழ் வாசகச் சூழலைப் பொறுத்தவரை ஒரு நடுக்கத்தையே ஏற்படுத்தியதென்று சொல்லலாம். கமல்ஹாசனின் கவிதைகள், சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பு, இதழ்தோறும் ஒரு திரைக்கதை என்று அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டு நான்கு இதழ்களோடு நின்றும்போனது.

ஸ்ரீபதி பத்மநாபாவின் மலையாளத்தைச் செரித்த தமிழ்நடை நேரடியானதும், மெல்லிய அங்கதம் கொண்டதுமாகும். அவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான குஞ்சுண்ணி கவிதைகள், அவரது சிறந்த பணிகளில் ஒன்று.

‘என்பது போலொரு தேஜாவு’ உள்ளிட்ட இரண்டு கவிதைத் தொகுப்புகள், நடிகை ஷகிலாவின் சுயசரிதை மொழிபெயர்ப்பு, மலையாளக் கரையோரம் உரைநடைக் கட்டுரைகள், குஞ்சுண்ணி கவிதைகள் உள்ளிட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சினிமாவில் இயக்குநராக முயன்றுகொண்டிருந்தார். கனவு நுரைத்த ஒரு காலகட்டத்தில் இளைஞர்களாகவும் நம்பிக்கைகளாகவும் முகம்காட்டியவர்கள் அகாலத்தில் உதிரும்போது தோன்றும் வலியை ஸ்ரீபதியும் உணரவைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x