Published : 09 Jun 2019 10:51 AM
Last Updated : 09 Jun 2019 10:51 AM

கோவிந்தன்: பதிப்புத் துறையின் பிதாமகன்! ‘விஜயா’ வேலாயுதம் பேட்டி

தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி ஆளுமை ‘சக்தி’ வை. கோவிந்தன். அவர் வெளியிட்ட பல நூல்களின் பதிப்பு நுட்பம் இன்றும் பிரமிக்கத்தக்கது. ‘பாரதியார் கவிதைகள்’ தொகுப்பை ஒன்றரை ரூபாய்க்கு மலிவு விலையில் அவர் வெளியிட்ட பிறகே தமிழ்நாட்டின் சாமானியர் வீடுகளுக்குள் பாரதி நுழைய முடிந்தது. தமிழின் முன்னணிப் பதிப்பகர்களுள் ஒருவரான ‘விஜயா’ வேலாயுதம், கோவிந்தன் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘சக்தி’ வை.கோவிந்தன் உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?

எனது பதின்பருவத்தில் ‘அணில்’ உள்ளிட்ட சிறுவர் பத்திரிகைகளைப் படித்து ‘சக்தி’ வெளியீடுகளுக்குத் தீவிர வாசகனாயிருந்தேன். கோவையில் ‘சக்தி’ காரியாலயம் இருந்தது. உள்ளே போகலாம் என்பதுகூடத் தெரியாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்துவிடுவேன். ராஜம்மாள் தேவதாஸ், வ.விஜயபாஸ்கரன் இருவரும் கோவிந்தனைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். கோவிந்தன் எனக்குள் முழுமையாக உருவேறும்போது அவர் உயிருடன் இல்லை. அவரை சந்திக்க முடியாதது என் துரதிர்ஷ்டம்தான்.

‘சக்தி’ இதழில் யாரெல்லாம் பங்களித்திருக்கிறார்கள்?

அந்தப் பட்டியல் பெரிது. சுத்தானந்த பாரதியை ஆசிரியராகக் கொண்டுதான் முதன்முதலில் இதழைத் தொடங்கினார் கோவிந்தன். பிறகு, தி.ஜ.ர. ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு

சுப.நாராயணன், கு.அழகிரிசாமி ஆசிரியர்களாக இருந்தனர். தொ.மு.சி.ரகுநாதன்,

ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், வலம்புரி சோமநாதன், ம.ரா.போ.குருசாமி, அழ.வள்ளியப்பா என்று பலரும் ‘சக்தி’ ஆசிரியர் குழுவில் இருந்தார்கள். பாரதிதாசன், தேசிக விநாயகம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், டி.கே.சி., வெ.சாமிநாதசர்மா, மு.அருணாசலம், எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்ற ஆளுமைகளெல்லாம் பங்களித்திருக்கிறார்கள்.

பதிப்புத் துறையில் கோவிந்தனின் சாதனைகள் என்று எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?

பதிப்புத் துறையின் பிதாமகன் அவர். ‘பென்குவின்’, ‘பெலிகன்’ போன்ற பதிப்பகங் களுக்கு நிகராகப் புத்தகங்களை வெளியிட்டது, பாரதியார் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவந்து மலிவுவிலையில் வெளியிட்டது, இரண்டாம் உலகப் போர் மும்முரமாக நடந்த காலத்தில் சோவியத் ரஷ்யா, புதிய சீனா, அரசியல் தத்துவங்கள் பற்றி துணிச்சலாக நூல்களை வெளியிட்டது என அவரது சாதனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அன்றைய தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்து ‘சக்தி’ எவ்வாறு வேறுபட்டது?

ஆர்ட் காகிதத்தில் புகைப்படங்களை அழகாக அச்சடித்துப் பல புகைப்படக் கலைஞர்களை அறிமுகப்படுத்தினார் கோவிந்தன். பொழுதுபோக்காக அல்லாமல் சமூக முன்னேற்றத்துக்கான இதழாக இருக்க வேண்டுமென விரும்பி ஆங்கில நூல்களையும், சர்வதேசப் பத்திரிகைகளையும் தருவித்து ஆசிரியர் குழுவுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். இதழின் ஒவ்வொரு அம்சத்திலும் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தினார். ‘ரேஷனில் அரிசி, மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நிற்பதுபோல் ஒருகாலத்தில் புத்தகங்கள் வாங்கவும் வரிசையில் நிற்பார்கள்!’ என்று கனவுகண்டவர் அவர்.

அந்தக் கனவு நனவாகியதா?

1998-ல் கோவையில் வாசகர் திருவிழா நடத்தியபோது அந்த அரங்குக்கு ‘சக்தி வை.கோவிந்தன் அரங்கம்’ என்று பெயரிட்டிருந்தேன். அந்தத் திருவிழாவில் புத்தகங்களைப் பார்க்கத் தனி வரிசை, பில்போடத் தனி வரிசை, பணம் கட்டத் தனி வரிசை என்று மக்கள் நின்றிருந்தார்கள். கோவிந்தனின் புகைப்படத்தை வைத்து மாலையிட்டு, அதன் அருகில் ‘இவரது கனவு நனவாகிவிட்டதற்கு நீங்களே சாட்சி’ என்று எழுதிவைத்திருந்த நிகழ்வு நடந்தது அப்போதுதான்!

தொடர்புக்கு: arunprasath.s@thehindutamil.co.in

(ஜூன் 12, ‘சக்தி’ வை.கோவிந்தனின் 107-வது பிறந்தநாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x