Last Updated : 16 Jun, 2019 08:54 AM

 

Published : 16 Jun 2019 08:54 AM
Last Updated : 16 Jun 2019 08:54 AM

வைரஸ்

மயூரப்ரியாவின் ‘வைரஸ்’ நாடகம் சென்னை ராமகிருஷ்ணா பள்ளியின் இன்ஃபோசிஸ் அரங்கில் சமீபத்தில் நடந்தது.

இது அமெரிக்காவில் நடக்கும் கதை. மயிலாப்பூரையே பூலோக சொர்க்கமாக நினைக்கும் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் சதாசிவம். அவர் தனது மகன், பேரனோடு சில நாட்கள் தங்கி இருப்பதற்காக அமெ ரிக்கா வருகிறார். அங்கு உள்ள உணவுப் பழக்கம், சீதோஷ்ண நிலை, தான் ஆசையாக கட்டித் தழுவி அன்பு செலுத்தக்கூட அனுமதிக் காத பேரன்.. இதெல்லாம் அவருக்கு அமெ ரிக்கா மீதே வெறுப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா மீதான சதாசிவத்தின் வெறுப்பு மறைந்ததா?

தனக்கு சொந்தமான வீட்டை விற்ற பணத்தை மகனே எடுத்துக்கொண்டு தலை மறைவாகிவிட, பாசத்தையும், பணத்தையும் இழந்து தவிக்கும் ரேவதி மாமிக்கு அவர் பறிகொடுத்த பணம் கிடைத்ததா?

அமெரிக்க மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற தீர்மானத்தோடு அரசுவின் மனைவியா கும் குணவதி, கடவுள் மறுப்பாளராக இருக்கி றார். அவருக்கு கடவுள் மீது நம்பிக்கை வருகிறதா?

இந்த முக்கோண பாத்திரங்கள் எல்லோ ரும் உரையாடும் ஒரு நபராக இருக்கிறார் ஆபத்பாந்தவன். அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் மையம், திருக்கோயில், கலாச்சார மையம் போன்ற வற்றை நிர்வகிக்கும் புரவலராகவும் அவர் இருக்கிறார். இவர்களைச் சுற்றிப் பின்னப் பட்டுள்ள கதைதான் ‘வைரஸ்’.

நாடகத்தின் தயாரிப்பாளரான கணபதி ஷங்கர்தான், பிரதானமான ஆபத்பாந்தவன் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாடகத்தையும் தூக்கிச் சுமக்கும் ஆபத்பாந்த வனாகவும் இருக்கிறார். தாத்தா - பேரன் சண்டையையும், சமாதானத்தையும் காட்சிப் படுத்திய விதம் ரசனை. அதிலும், பேரனாக நடிக்கும் சிறுவன் ஹித்தேஷின் ஆங்கில, தமிழ் உச்சரிப்புகள் பிரமாதம். கடவுள் மறுப்பாளரான குணவதி பாத்திரத்தை ஏன் ‘ஹிஸ்டீரியா’ வந்தவர்போல சித்தரிக்க வேண்டும்?

நாடகத்தில் மதப் பிரச்சார நெடிக்கு பதி லாக, தாத்தா - பேரன் நெருக்கத்தை வளர்க் கும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து, ரேவதி மாமியின் பணத்தை எடுத்துச் சென்ற மகனைத் தேடுவதில் புத்திசாலித்தனமான சில காட்சிகளை புகுத்தியிருந்தால், நாடகத் தின் சுவாரஸ்யம் இன்னும் கூடியிருக்கும்.

சைதை குமார், சண்முகத்தின் கைவண் ணத்தில் அரங்கம் மெருகேறுகிறது.

அதிகப்படியான பாசமும், வெறுப்பும்கூட நம் எல்லோரிடமும் இருக்கும் வைரஸ்தான். அதை எப்படி கையாள வேண்டும் என்ற நேர்மறை சிந்தனையோடு நாடகத்தை எழுதி, இயக்கி, தமிழ் ஆசிரியராக சிறப்பான நடிப்பையும் வழங்கியிருக்கிறார் பி.முத்துக்குமரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x