Published : 23 Jun 2019 09:04 AM
Last Updated : 23 Jun 2019 09:04 AM
சமகால நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் தனித்துவப் படைப்பு மனம் கொண்ட மா.அரங்கநாதன், அதிகம் அறியப்படாத ஆளுமை. எனினும், அவர் பற்றி அவரது வாழ்நாளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று ஆவணப் பதிவுகள் மிக முக்கியமானவை. ஒன்று, ரவி சுப்பிரமணியன் இயக்கிய ‘மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’ என்ற ஆவணப்படம். மிக நேர்த்தியான இப்பதிவில் ஒரு தெளிந்த மனம் கொள்ளும் கவித்துவ லயிப்பின் சலனங்கள் அழகாகப் பதிவுபெற்றுள்ளன. கவிதைதான் அவரது சமயமாக இருந்திருக்கிறது என எண்ணுமளவுக்குக் கவிதையில் வாழ்வின் சித்தியைத் தரிசிக்கிறார். இந்த முக்திநிலைதான் சமயத் தத்துவ நிலையாகவும் அவருக்கு இருக்கிறது. கடவுளும் கவிதையும் அவரது வாழ்வின் ஆதார சக்திகள்.
இரண்டாவது, அரங்கநாதனுடன் எஸ்.சண்முகம் நிகழ்த்தியிருக்கும் ஒரு விரிவான நேர்காணல். ‘இன்மை – அனுபூதி – இலக்கியம்’ என்ற தலைப்பில் ‘புது எழுத்து’ வெளியீடாக 2012 இறுதியில் வந்தது. மா.அரங்கநாதன் என்ற தொன்மம் படிந்த ஒரு பெரும் மனப்பரப்பின் விசாலமான பதிவு. கேள்விகள் வெவ்வேறு புள்ளிகளாகவும், பதில்கள் அப்புள்ளிகளை இணைக்கும் கோடுகளாகவும் ஒரு மாபெரும் கோலம் விரிகிறது. அரங்கநாதனை ஆழமாகவும் நுட்பமாகவும் நமக்கு அறிமுகப்படுத்தும் ஓர் அழகிய கோலம்.
மூன்றாவது, அரங்கநாதனின் படைப்பாளுமையைப் பல்வேறு பார்வைகள் வழியாகப் புலப்படுத்தியிருக்கும் கட்டுரைத் தொகுப்பான, ‘மா.அரங்கநாதன்: நவீனமான எழுத்துக்கலையின் மேதமை’. கிட்டத்தட்ட முப்பது எழுத்தாளர்களின் அவதானிப்புகளாக இந்நூல் மிக விரிவான தளத்தில் அமைந்திருக்கிறது.
இத்தகைய ஆவணப் பதிவுகள் நிகழ்ந்திருக்கும் அதேசமயத்தில், அவரது வாழ்நாளிலேயே, 2016-ல், ‘மா.அரங்கநாதன் படைப்புகள்’ என அவரது எழுத்துகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு ‘நற்றிணை’ வெளியீடாக வந்துள்ளது. 90 சிறுகதைகள், ‘பறளியாற்று மாந்தர்’, ‘காளியூட்டு’ என்ற இரு நாவல்கள், ‘பொருளின் பொருள் கவிதை’ உட்பட 46 கட்டுரைகள் என முழுமை பெற்ற தொகுப்பு இது. நம் பண்டைய இலக்கியங்கள் மற்றும் சாஸ்திரங்களில் ஞானம்மிக்க இவர், புனைகதை உரைநடையில் தெளிந்த எளிமையைக் கொண்டிருப்பது, இவரது ஞானச் செறிவையும் நவீனத் தன்மையையும் தீர்க்கமாக வெளிப்படுத்துகிறது. காலத்திலிருந்து காலாதீதத்துக்கு நகரும் இவரது படைப்புலகம் நவீன அறிவுத் தளத்தையும் மரபின் சித்தாந்த வளத்தையும் நேசத்துடன் பிணைத்துக்கொண்டிருப்பது. செறிவாக உட்கொண்டிருப்பது.
‘சித்தி’, ‘நசிகேதனும் யமனும் கழிவுப் பணமும்’, ‘மோனாலிசாவும் ஒரு கறுப்புக் குட்டியும்’, ‘மைலாப்பூர்’, ‘ஞானக்கூத்து’, ‘வீடுபேறு’, ‘உவரி’, ‘மெளனி’, ‘காடன் மலை’, ‘எலி’, ‘அசலம்’, ‘காலக்கோடு’, ‘தீவட்டி’, ‘பூசலார்’, ‘தரிசனம்’, ‘முதற்தீ எரிந்த காடு’ எனப் பல கதைகள் பெறுமதியானவை. இவரது பெரும்பாலான கதைகளின் தலைப்புகள் இவரது படைப்புலகின் தன்மையைச் சுட்டிநிற்கின்றன. ஆன்மீகம் சுடரும் கதைகள். அதேசமயம், சமகால வாழ்க்கை நிகழ்வுகளினூடாகத்தான் அவை ஒளி பெறுகின்றன. சைவ சித்தாந்த வெளிச்சத்தையும் நம் தொன்மையான சிந்தனை மரபையும் உள்ளுறையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லாமே மிக மிக மென்மையான குரலிலேயே வெளிப்படுகின்றன. பக்குவப்பட்ட மென்மை. இக்கதைகளின் இக்குணாம்சம்தான் அரங்கநாதனின் குண விஷேசமாகவும் இருக்கிறது.
இவரது கதைகளில் சைவ சமய நூல்கள் பற்றியும் திருக்குறள் பற்றியும் குறிப்புகள் இடம்பெறுகின்றன. திருவள்ளுவர், சேக்கிழார், மெய்கண்டார் வருகிறார்கள். இன்றைய வாழ்வியக்கத்தைப் பன்னெடுங்காலத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார். நிகழ் வாழ்வின் மாயத்தன்மைகளும் புதிர்களும் தொன்மமாகத் தொடரும் ஞானக்கீற்றில் துலங்குகின்றன. அவரது புனைவுப் பயணமென்பது நம் சிந்தனை மரபினூடான நெடும் பயணமன்றி வேறில்லை. மொழிநடையும் மரபிலிருந்து பெறப்பட்ட நவீன நடையாகவே அமைந்திருக்கிறது. மரபும் நவீனமும் என்பதே அரங்கநாதனின் தனித்த அடையாளமாக இருக்கிறது.
அரங்கநாதனின் படைப்பிலக்கிய ஆளுமையின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவருபவர், தமிழவன். 1996-ல் அரங்கநாதனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக ‘காடன் மலை’ வெளிவந்த சமயம், நான் ‘முன்றில்’ புத்தக விற்பனைக்கூடத்தில் தஞ்சமடைந்திருந்த காலம். ஒருநாள் வந்த தபால்களில் இரண்டே வரிகள் எழுதப்பட்ட ஒரு அஞ்சலட்டை இருந்தது: “காடன் மலை கிடைத்தது. தமிழகத்தின் போர்ஹே நீங்கள்”. தமிழவனின் கடிதம்தான் அது. அன்று அந்தக் கடிதம் என்னை மிகுந்த திகைப்புக்குள்ளாக்கியது. ஆனால், தமிழவன் இதைத் தீர்க்கமாகவும் திடமான நம்பிக்கையோடும்தான் முன்வைக்கிறார் என்பது அவர் பின்னாளில் அரங்கநாதன் பற்றி எழுதிய கட்டுரைகள் உறுதிப்படுத்தின.
அரங்கநாதனின் ‘பறளியாற்று மாந்தர்’, ‘காளியூட்டு’ என்ற இரண்டு நாவல்களுமே தமிழகத்தின் தென்கோடி நிலப்பரப்பை மையமாகக் கொண்டவை. அம்மண் சார்ந்தும் மனிதர்கள் சார்ந்தும் இயங்குபவை. ‘பறளியாற்று மாந்தர்’ நாவலில் ஆரல்வாய்மொழி எனும் நிலப்பரப்பில் தொன்மமாகத் தொடரும் நினைவுகளின் வாசம் பரவியிருக்கிறது. பறளியாறு அந்தப் பிரதேசத்தைத் தழுவிக்கொண்டோடுகிறது. மூன்று தலைமுறைக் கதை, கால மாற்றத்தையும் மனித மன மாற்றங்களையும் விரித்துச் செல்கிறது. அதேசமயம், அம்மண்ணின் வளத்துக்குப் பறளியாறுபோல, நம் ஞான மரபின் வற்றாத வளத்தைப் பேணிக் காப்பவராக சாந்தலிங்கத் தம்பிரான் என்ற சித்தர் அங்கு இருந்துகொண்டிருக்கிறார். நிகழ்காலத்திலும் நம்மை வழிநடத்தும் பேராற்றலாக நம் ஞான மரபு பறளியாற்றைப் போல் நாவலில் சலனித்துக்கொண்டிருக்கிறது.
‘காளியூட்டு’ தமிழ் மண்ணில் வைதீகம் நிகழ்த்திய கோரத்தை மிக வீரியமாக வெளிப்படுத்திய நாவல். இந்நாவலிலும் அரங்கநாதனின் முத்துக்கறுப்பனே பிரதான பாத்திரம். அண்ணன், தம்பி என இரு முத்துக்கறுப்பன்கள் இந்நாவலில் வருகின்றனர். மிகச் சிறிய நாவல். ஆனால், மிகுந்த விசாலம் கொண்டது. சைவ ஞான மரபின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் படைப்பு ‘பறளியாற்று மாந்தர்’ எனில், வைதீக எதிர்ப்பை வலியுறுத்தும் படைப்பு ‘காளியூட்டு’.
அரங்கநாதனின் மறைவுக்குப் பின் (ஏப்ரல் 16, 2017), அவரது மகன் மகாதேவன் அவர் நினைவாக, ‘அரங்கநாதன் இலக்கிய விருது’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவரது நினைவு நாளில் இரண்டு படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. இது, அவர் நினைவை மங்காது வைத்திருக்கக்கூடும். இன்றைய இளம் வாசகர்களும் படைப்பாளிகளும் இவரது படைப்புகளோடு கொள்ளும் உறவு நம் தமிழ் வாழ்வு, நிலம், ஞானம் பற்றிய வளமான புரிதல்களுக்கு இட்டுச்செல்லும். சைவமும் தமிழும் என்றான ஒரு ஞான மரபின் நவீனப் படைப்பாளி மா.அரங்கநாதன். அவரைக் கொண்டாடுவதென்பது இந்த ஞான மரபைக் கொண்டாடுவதுதான்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT