Published : 02 Jun 2019 09:03 AM
Last Updated : 02 Jun 2019 09:03 AM

ஆக்ஸிஜென்: எலெக்ட்ரானிக் இசையில் ஒரு மைல்கல்!

ஆர்.ஸ்ரீனிவாசன்

இசை தனது கலை அந்தஸ்தோடு ஒரு உயரிய இடத்திலோ அல்லது வெறும் பொழுதுபோக்காகவோ மட்டுமே இருப்பதில்லை; உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரிய அளவில் சமூக மாற்றம் ஏற்பட்டபோதெல்லாம், மக்களெல்லாம் ஒன்றுதிரண்டு புரட்சியில் ஈடுபட்டபோதெல்லாம் இசை முக்கியமான பங்காற்றியிருக்கிறது. தொடர் போராட்டங்களில் தளர்ச்சியடையாமல் பயணிக்க இசை புத்துணர்வூட்டியிருக்கிறது.

உதாரணமாக, 1950-1960-களில் அமெரிக்காவில் நடந்த மனித உரிமைப் போராட்டத்தில் காஸ்பல், நாட்டுப்புற இசையின் பங்கு அளப்பரியது. பாடகர்கள், இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள் என்று பலரும் இசை எனும் பிணைப்பில் ஒன்றுகலந்தனர். பீட் சீகர் போன்ற பாடகர்களெல்லாம் இசை நிகழ்ச்சிகள் நடத்தி அதில் கிடைத்த பணத்தை மனித உரிமை இயக்கத்துக்குக் கொடுத்தார்கள். ஆரம்ப கட்டத்தில் கிறிஸ்தவப் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டிருந்த நிலை மாறி நாளடைவில் ஃபோக், சோல், ப்ளூஸ், ஜாஸ் என்று விரிவடைந்தது.

மாணவப் புரட்சியும் கலைஞர்களும்

உள்நாட்டுக் குழப்பம் உலகமெங்கும் வியாபித்திருந்த சமயம் 1968-ல் பிரான்சில் மிகப் பெரும் புரட்சி வெடித்தது. இதை ஆரம்பித்து வைத்தது மாணவர்கள்தான். பிரான்சில் போதுமான அளவில் ஆசிரியர்களும் கல்விக்கூடங்களும் இல்லை என்பதாலும், அவசரகதியில் ஏற்படுத்தப்பட்ட வளாகங்களும் அனுபவமற்ற ஆசிரியர்களும் ஏற்படுத்திய அதிருப்தியும் மாணவர்களைப் புரட்சிப்பாதைக்கு இட்டுச்சென்றது. அப்போது மாணவர்களிடம் செல்வாக்கு செலுத்தியிருந்தவர்கள் யார் தெரியுமா? கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட், ழான்-போல் சார்த்ர்!

இப்போராட்டத்தில் மாணவர்களுடன் 90 லட்சம் தொழிலாளிகள் இணைந்து கொண்டனர். பாரீஸில் தொடங்கிய புரட்சி கொஞ்சம் கொஞ்சமாக பிரான்ஸ் முழுவதும் பரவியது. இதற்குப் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் பிரான்ஸையே மாற்றியது. குறைந்தபட்ச கூலி 35% ஆகவும், கூலி 10% ஆகவும் உயர்ந்தது. வேலை நேரம் வாரத்துக்கு 40 மணி நேரமாக மாறியதும் இதற்குப் பிறகுதான். பெண்ணுரிமை, தன்பால் ஈர்ப்புடையவர்களின் உரிமை போன்ற பல விஷயங்களில் பின்னாட்களில் மாற்றம் ஏற்பட்டதற்கு இந்தப் புரட்சிதான் ஆதாரம்.

இந்தப் பின்னணியில், ‘தை புரட்சி’ என்று நாம் பாசத்துடன் அழைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம். மக்களின் எழுச்சி என்றுமே தோழமையுணர்வுடன் தொற்றிக்கொள்ளும் வசீகரம் கொண்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டமும் வசீகரம் கொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நேர்மறையான பல அம்சங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தத் தை புரட்சிக்கும் கலைச் செயல்பாடுகளுக்கும் பெரியளவில் சம்பந்தம் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். அங்கு தத்துவ அறிஞர் சார்த்ர் போன்றவர்கள் புரட்சியில் கலந்துகொண்டனர்; நம் ஊரில் ‘ஹிஸ்டாரிக் ஸ்பீச்’ யார் யார் கொடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இதைக் கேலிக்குரியதாக நாம் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், புரட்சிகளின்போது வெளிப்படும் ஆரோக்கியமான கலைப் பங்களிப்பு எப்படி சமூக மாற்றத்துக்கு வித்திடுகிறது என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி.

இசைப் புரட்சி

இதுபோன்ற புரட்சிப் பின்னணியிலிருந்து முளைத்தவர்தான் பிரான்ஸைச் சேர்ந்த ழான் மிஷல் ஜார். இசையார்வம் மிகுந்த பதினாறு வயது ஜார் ஒரு ராக் இசைக்குழுவில் இருந்தார். புதுமையான ஒலிகளை கிட்டாரில் பரிசோதித்துப் பார்ப்பது இவரது வழக்கம். மாணவப் புரட்சி நடந்துகொண்டிருந்தபோது ஜாருக்கு இசையிலும் புரட்சிகரமான சிந்தனையே இருந்தது. செவ்வியல் இசையை மீறி, பீட்டில்ஸ் போன்ற ராக் குழுக்களின் இசையையும் விட தனித்துவமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவரைத் துரத்திக்கொண்டிருந்தது.

இவரது இசையார்வம் ‘மியூசிக் கான்க்ரெட்’ (Musique Concrete) என்ற கோட்பாட்டிலிருந்து தொடங்குகிறது. ‘மியூசிக் கான்க்ரெட்’ என்பது தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிகளை மட்டும் வைத்து உருவாக்கும் பரிசோதனை இசையமைப்பு முறை. சேம்ப்ளிங் முறைக்கு முன்னோடி. இயற்கையான ஒலிகளை ஒத்திசை டேப் ரிக்கார்டர் மூலம் ஒலிப்பதிவு செய்யும் இதை பிரெஞ்சு இசையமைப்பாளர் பியர் ஷேஃபர் உருவாக்கினார். ‘மியூசிக் கான்க்ரெட்’ மூலம் ஒலிகளைக் கொண்டு இசை அகராதியை உருவாக்க முயன்றார். அதாவது, இசையில் ஸ்வரங்களாக சிந்திப்பது எனும் வழக்கமான முறையை மீறி ஒலிகளாக சிந்திக்கும் முறை. இதை ‘அவான்ட்கார்ட்’ (Avant-garde) இசை முறை எனலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகமெங்கும் ‘அவான்ட்கார்ட்’ இசை நிகழ்ந்தது. ஜான் கேஜ், டெரெக் பெய்லீ போன்றவர்கள் இந்த இசை வடிவில் முக்கியமான ஆளுமைகள். ஸ்டீவ் ரைக், டெரி ரெய்லி, ஃபிலிப் க்ளாஸ், ஃபிராங்க் ஜாப்பா, கேப்டன் பீஃப்ஹார்ட், தி வெல்வெட் அண்டர்கிரவுண்ட் , பிரையன் ஈனோ, டேவிட் பெர்ன் போன்றவர்களின் இசையும்  ‘அவான்ட்கார்ட்’ தன்மையுடையதுதான். பின்னாளில், ஜாஸ் இசையிலும் இதன் தாக்கம் போனது. இவை எல்லாமே ஏற்கெனவே புழக்கத்தில் இருப்பதைத் துறந்து புதியதைத் தேடுவது. ழான் மிஷல் ஜாரின் இசையார்வமும் அப்படிப்பட்டதுதான்.

கலைஞர்களின் கற்பனை

ழான் மிஷல் ஜாரின் முதல் ஆல்பம் ‘ஆக்சிஜென்’ (Oxygene) 1976-ல் வெளியாவதற்கு முன் யாரும் இவரது ஆல்பத்தை வெளியிட விரும்பவில்லை. ட்ரம்மர் கிடையாது, பாடகர் கிடையாது, வழக்கமான ராக் இசைபோலவும் இல்லை, செவ்வியல் இசைபோலவும் இல்லை. வெறும் வாத்திய இசை. அதுவும் நடைமுறையிலுள்ள இசை அமைப்பைத் துறந்த எலெக்ட்ரானிக் இசை. ஆரம்பத்தில் புதுமையை எதிர்கொள்ளத் தயங்கியவர்கள் பிறகு அதை உள்வாங்கிக்கொண்டார்கள். பின்னாளில் அது மிகப் பெரிய அளவில் உலகப் பிரபலமானது வரலாறு.

ஏற்கெனவே ‘கிராஃப்ட்வெர்க்’ இவ்வகை இசையில் நான்கு ஆல்பங்களை செய்து முடித்திருந்தாலும், ஜாரின் ‘ஆக்சிஜென்’ ஆல்பம் அதற்கு முற்றிலும் புதிதான சிந்தஸைசர் நுண் கட்டுமானங்களைக் கொண்டு அமானுஷ்ய உலகுக்குள் பிரவேசிப்பது போன்ற உணர்வைத் தருகிறது. புதிதான சத்தங்களைத் தோற்றுவிப்பதோடு நின்றுவிடாமல், துள்ளலான மெலடியுடனும் அமைந்திருக்கிறது. எலெக்ட்ரானிக் இசையில் இந்த ஆல்பம் ஒரு மைல்கல்.

இசை முன்னோடிகள் பலருக்கும் ஒவ்வொரு கலாச்சாரப் பின்னணி இருந்திருக்கிறது. மரபிலிருந்து மீறி வெளியே வந்து புதிய சிந்தனையைத் தன் இசையில் செலுத்தியிருக்கிறார்கள். அப்படியான கலைஞர்களின் கற்பனைகளையெல்லாம் கலாபூர்வமான பல புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கின்றன. அதனால்தான், ஜாரின் ‘ஆக்சிஜென்’ ஆல்பம் இன்றும் தன் வசீகரத்தை இழக்காமல் இருக்கிறது.

தொடர்புக்கு: srinivasren@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x