Last Updated : 18 Mar, 2018 07:35 AM

 

Published : 18 Mar 2018 07:35 AM
Last Updated : 18 Mar 2018 07:35 AM

ஆண்டாள் 143

நா

டக வெளி சார்பாக ‘அன்பின் பெருவெளி ஆண்டாள்’ என்னும் நாட்டிய நாடகம் சென்னை, அலையன்ஸ் ப்ரான்கைஸ் அரங்கில் சமீபத்தில் நடந்தது. வெளி ரங்கராஜனின் எழுத்திலும் இயக்கத்திலும் உணர்ச்சிபூர்வமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்டாளின் வரிகளைப் பாடிய வைஜயந்தியின் குரலிலும் அன்பு அரங்கில் பிரவாகித்தது.

ஆண்டாளின் திருப்பாவையிலிருந்து 15 பாடல்களையும் நாச்சியார் திருமொழியிலிருந்து 10 பாடல்களையும் இந்த நிகழ்வுக்குப் பயன்படுத்தியிருந்தனர். பாடலுக்கு முன்பான சிறு உரையும் வரிகளுக்கேற்ற மிதமான நடன அசைவுகளும் நாடகத்தோடு பார்வையாளர்களை நெருக்கமாக்கியது. ஆண்டாளின் உணர்வுகளை காட்சிபூர்வமாகத் தரிசிப்பதற்கான முயற்சியாக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் வெளி ரங்கராஜனின் உழைப்பையும் அவதானிப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லாத அன்பு, பல உயிர்களையும் தன் உயிர் போல் எண்ணும் நேசம், சூழல் நுண்ணுணர்வு சொல்லாடல் திறன் ஆகியவற்றின் அடையாளமாக வரலாற்றில் முன்நிற்பவள் ஆண்டாள். கூட்டுணர்வு, ரகசியம், காதல், உடல் கொண்டாட்டம், விடுதலை, உரையாடல் எனப் பல தளங்களுக்குள் புகுந்து புறப்பட்டு கேட்பவர்களின் எண்ணத்தில் நிறைவது ஆண்டாளின் எழுத்து வன்மை. ஒலிகள், வாசம், பசுக்கள், எருமைகள், மரம், செடி, கொடி, குயில், கிளி, கிண்கிணி, சங்கு, புல்லாங்குழல் என எல்லாமும் வெளிப்படுத்தும் அழகியலும் ஆண்டாளாகவே நம் கண்களுக்குத் தரிசனமாகிறது. விடிவும் பிரிவும் ஆண்டாளைத் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன. வேட்கை, நேசம், கொண்டாட்டம் என ஒரு பிரத்யேகமான பெண்மொழி கொண்டு சமகாலப் பெண் எழுச்சிக்கான ஒரு முன்மாதிரி என்றே ஆண்டாளைச் சொல்லலாம்.

தனிமை உடல் இருப்பின் சொல்லாடல்களைப் பிரயோகிக்க ஆண்டாள் தயங்குவதில்லை. உள்ளிருப்பதும் உடல்தான் என்ற பேருணர்வை 143 பாடல்களின் வழியாக ஆண்டாள் வெளிப்படுத்துவதுதான் நாச்சியார் திருமொழி. என் உடல் என் உரிமை என்னும் முழக்கத்தை, “மானிடவர்க்கென்று பேச்சுப்படில்… வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்னும் வரிகளில் உரைக்கிறார் ஆண்டாள்.

பாற்கடல் வண்ணனிடம் சேர்ப்பிக்கும்படி ஆண்டாள் மன்மதனை வேண்டுவது, குயிலைத் தூதுவிடுவது, கிளியைத் துணைக்கு அனுப்புவது, மேகத்தைத் தூது விடுவது, மாதவனின் வாய்ச்சுவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று வெண்சங்கிடம் ஆண்டாள் கேட்கும் கேள்வி… என இறைவனையே விரும்பும் ஆண்டாளின் உன்னதமான காதலின் நேர்மையைக் கலாபூர்வமாகக் காட்சிப்படுத்தியது ‘அன்பின் பெருவெளி ஆண்டாள்’ நாட்டிய நாடகம்.

ஆண்டாளாகத் தோன்றிய பரதநாட்டியக் கலைஞர் அஷ்வினியின் திகட்டாத அபிநயங்களும் ஆயர்குலப் பெண்களாகத் தோன்றிய ஹேமலதா, பானுப்ரியா, ஸ்டெஃபி, ரேணுகாதேவி ஆகியோரின் நடனமும் எதார்த்தமாக இருந்தன. மருது, ஜே.கே.வின் ஓவியங்கள் மேடையை அலங்கரித்தன.

- வா.ரவிக்குமார், தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

படம்: மோகன் தாஸ் வடகரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x