Published : 14 Mar 2018 10:05 AM
Last Updated : 14 Mar 2018 10:05 AM

மார்க்சியம்: உலக விடுதலைக்கான சாவி

லகின் தத்துவச் சிந்தனையாளர்கள் பலரும் தனிமனித ஆன்ம விடுதலை குறித்துப் பல நூறு ஆண்டுகளாக சிந்தித்தும் பேசியும் மறைந்தார்கள். மனிதர்கள் இந்த மண்ணில் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு விடுதலை அளிக்கும் தத்துவம் குறித்து முதன்முறையாகப் பேசியவர் கார்ல் மார்க்ஸ்.

மனித உழைப்பின்றி இந்த உலகம் இல்லை. இந்த உலகில் எல்லாமே இயற்கையிலிருந்து பெறப்பட்டவை தான் என்றபோதும் மனிதர்கள் வாழ்வதற்கு, இன்பம் துய்ப்பதற்கு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்குக் காரணம் மனித உழைப்பு. அதேநேரம் அனைத்துக்கும் காரணமான உழைப்பே மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காகவும் நாகரிக வளர்ச்சியில் மாற்றப்பட்டிருந்தது. மனிதன் இப்படி அடிமையாக இருப்பதே அடுத்த பிறவி யில் ஆன்ம விடுதலை அளிக்கும் என்று மூளைச்சலவை செய்பவர்கள் நிறைந்திருந்த காலகட்டத்தில், “உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஓர் பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்’’ என்று அறிவித்தவர் மார்க்ஸ்.

வாழ்க்கை முழுக்கப் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, மனைவி ஜென்னி, ஆருயிர் நண்பர் ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் துணையுடன் தனது தத்துவச் சிந்தனைகளை அறிவியல்பூர்வமாக விளக்கி எழுதுவது ஒன்றையே வாழ்நாள் குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்தார் கார்ல் மார்க்ஸ்.

மார்க்சிய வீச்சு

உலகப் பிரச்சினைகள் அனைத்துக்குமான மூல காரணம், சில மனிதர்கள் பெரும்பாலோரைச் சுரண்டி வாழ்வதுதான். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே மனித குலத்துக்கான விடுதலை மட்டுமின்றி, உலக விடுதலையும் சாத்தியம் என்பதை அறிவியல் பூர்வமாக மார்க்சியக் கொள்கை விளக்கியது. அவருடைய கொள்கையின் அடிப்படை வடிவமான ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வெளியாகி 150 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் கொள்கை முதலில் பரவலாகப் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்ட ஐரோப்பாவிலும், பின்னர் ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், பிரேசில், வெனிசுலா, இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்கள் வரை மார்க்சியக் கொள்கைகளின் வீச்சு பரவியுள்ளது.

சங்குக்குள் உறைந்த கடல்

இந்தக் கொள்கைகளை விளக்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. பல புத்தகங்களின் மொழிநடை, துறைசார் சொற்களுக்கான தமிழ்ப் பிரயோகங்கள் பொது வாசகர்களுக்கு மிரட்சியையே ஏற்படுத்தியுள்ளன.

மார்க்சியக் கொள்கை அத்தனைக் கடினமானதல்ல என்பதைத் தன் படைப்பாற்றலால் நிகழ்த்திக் காட்டி யிருக்கிறார் மெக்சிக சிந்தனையாளரும் சித்திரக்கதை ஓவியருமான ரியுஸ் (நிஜப் பெயர்: எடுவார்டோ ஹம்பெர்தோ டெல் ரியோ கிராசியா). மார்க்சியக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி ஸ்பானிய மொழியில் 70-களில் அவர் எழுதிய சித்திரக்கதை பாணிப் புத்தகம், சில ஆண்டுகளிலேயே ‘மார்க்ஸ் ஃபார் பிகினர்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மிகவும் கடினம் என்றே நம்ப வைக்கப்பட்டுவரும் மார்க்சியக் கொள்கையை எளிய உதாரணங்களுடன் இலகுவாகப் படிக்கும் வகையில் இந்த நூலை உருவாக்கி யிருக்கிறார் ரியுஸ்.

மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை எழுதுவதற்கு முன் தனது நாட்டுக்கும் மனதுக்கும் மிகவும் நெருக்கமான கம்யூனிஸ்ட் நாடான கியூபாவைப் பற்றி ‘கியூபா ஃபார் பிகினர்ஸ்’ என்ற புத்தகத்தை 1970-ல் எழுதினார். ‘மார்க்ஸ் ஃபார் பிகினர்ஸ்’ புத்தகம் அதற்கு ஆறு ஆண்டு களுக்குப் பின்னரே ஆங்கிலத்தில் வெளியானது. பெரும் கோட்பாடுகளை, கல்விப்புலத் துறைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கும் ‘பிகினர்ஸ் வரிசை’ நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தகம் அமைந்தது.

குழந்தைகளுக்கான, மரபார்ந்த சித்திரக்கதை வடிவத் தில் காட்சிகள் கட்டம் கட்டமாக நகர்த்தப்படும். ரியுஸின் புத்தகங்கள் அந்த முறையைக் கையாளவில்லை. மாறாக, பழைய அச்சு ஓவியங்கள், கிண்டல் பாணி ஓவியங்களை உரிய இடங்களில் பொருத்தமாக ரியுஸ் பயன்படுத்தியுள்ளார். தேவைப்பட்ட இடங்களில் மூல நூல் ஆசிரியர்களின் மேற்கோள்களை அப்படியே எடுத்தாண்டும் இருக்கிறார். அவருடைய படைப்புகளில் ‘ஏபிசே’, ‘மாவோ ஃபார் பிகினர்ஸ்’ போன்ற மற்ற நூல்களும் குறிப்பிடத்தக்கவை.

கண்ணடிக்கும் கார்ல் மார்க்ஸ்

‘கார்ல் மார்க்ஸ்: எளிய அறிமுகம்’ (தமிழில்: நிழல்வண்ணன், விடியல் வெளியீடு) நூலின் ஓரிடத்தில் மார்க்ஸ் ஒரு மாபெரும் ஆளுமை, தான் ஒரு சின்னப் பையன் என்று ரியுஸ் தன்னையே அடக்கமாகக் கூறிக்கொள் கிறார். ஆனால், அவருடைய நூலைப் போல மார்க்சியக் கோட்பாடுகளை எளிதாக அறிமுகப்படுத்தும் வேறு நூல் இல்லையென்று சொல்லலாம்.

உலக மக்களுக்கு விடுதலையை உறுதிசெய்துவிடும் என்று கால் நூற்றாண்டுக்கு முன் முதலாளித்துவம் கண்டுபிடித்த ‘உலகமயமாக்கல்’ என்கிற ‘புதிய மருந்து’, ஏழைகளை உய்விக்க எந்தச் சாத்தியமும் இல்லை என்பதைத் தாமதமாக நாம் உணர்ந்துவரும் காலம் இது. இந்தப் பின்னணியில் இந்தத் தலைமுறையினருக்கும் இது போன்ற நூல்கள் உத்வேகம் தரும். உலகில் ஒடுக்கு முறையை நிகழ்த்தும் யாராக இருந்தாலும், எந்த வடிவத்தில் அந்த ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் அவை இருக்கும்வரை, மார்க்ஸும் அந்த ஒடுக்குமுறையி லிருந்து விடுதலை பெற அவர் முன்வைத்த கொள்கை யான மார்க்சியமும் இருக்கும். புத்தகத்தின் இறுதியில் மார்க்ஸ் கண்ணடிப்பதுபோல் ரியுஸ் வரைந்துள்ள ஓவியம், இதையே உருவகப்படுத்துகிறது.

-ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

மார்ச் 14: கார்ல் மார்க்ஸ் 135-வது நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x