Published : 10 Mar 2018 12:01 PM
Last Updated : 10 Mar 2018 12:01 PM

விலங்குப் பண்ணைக்கு வேலி போட்ட ஜி ஜின்பிங்!

சீ

ன அதிபர் ஜி ஜின்பிங் 2015-ல் அமெரிக்கா சென்றிருந்தபோது சியாட்டில் நகரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக, எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘கடலும் கிழவனும்’ நாவலைக் குறிப்பிட்டிருந்தார். ‘கொட்டும் மழை, ஆர்ப்பரிக்கும் அலைகள், சிறு படகு, கிழவனும் சுறாவும்’ என்று நாவலின் காட்சிகளை அவர் விவரித்துப் பேசியபோது, உலகமே அவரது இலக்கிய ரசனையை வியந்து பார்த்தது. அந்நாவலில் இடம்பெறும் ஹவானா கடற்கரையோர மீன்பிடி நகரமான கோஜிமரில் உள்ள பாலத்துக்கும் மதுபான விடுதிக்கும் சென்று திரும்பினார். ஹெமிங்வேயின் விருப்பப் பானமான மோஜிடோவையும் சுவைபார்த்தார்.

‘முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருக்கும் நமக்கிடையே ஆழ்ந்த புரிதல் உருவாக இத்தகைய கலைப் பரிவர்த்தனைகள் அவசியமானது’ என்றும் அப்போது குறிப்பிட்டார் ஜின்பிங். கிழவன் சான்டியோகோவுக்கும் சுறாவுக்குமான போராட்டத்தை, தொன்மையான கலாச்சாரம் கொண்ட சீனா பல்முனைப் போட்டிகளை எதிர்கொண்டு வென்ற கதையோடு ஒப்பிட்டு, ஜின்பிங் ரசித்திருக்கக்கூடும் என்றெல்லாம்கூட அப்போது இலக்கியப் பொழிப்புரைகள் எழுதப்பட்டன.

எர்னெஸ்ட் ஹெமிங்வேவுக்கும் சீனத்துக்கு மான உறவும்கூட நெருக்கமானது. 1941-ல் ஹெமிங்வே தனது கியூப மனைவி மார்தா ஹெர்கார்னுடன் தேனிலவுப் பயணம் வந்தது சீனாவுக்குத்தான். ஜின்பிங் அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து, ஹெமிங்வே-மார்தா தேனிலவுப் பயணத்தைப் பற்றி அதன் 75-வது ஆண்டில் எழுதிக் குவித்தன அமெரிக்கப் பத்திரிகைகள்.

நாவல்களுக்கும் ஜின்பிங்குக்கும் இடையிலான உறவு, மீண்டும் இப்போது விவாதத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், இந்தத் தடவை அது மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ நாவலைத் தடைசெய்திருக்கிறார் ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் பதவிக்காலத்துக்கான கால வரம்பைத் தளர்த்தி யிருப்பதைத் தொடர்ந்து, ஜின்பிங் சர்வாதிகாரத் தின் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டாரோ என்ற அச்சத்தை உறுதிப்படுத்தும்வகையில் அமைந்திருக்கிறது ‘விலங்குப் பண்ணை’க்கான தடை. மேலும், சீனாவின் ட்விட்டராகக் கருதப்படும் ‘சீனா வீபோ’ இணையதளத்தில் ‘என்’ என்ற ஆங்கில எழுத்தையும் டிஸ்அக்ரி, பெர்ஸனாலிட்டி கல்ட், லைப்லாங்க், இம்மோர்டாலிட்டி, இமிகிரேட், ஷேம்லெஸ் ஆகிய ஆங்கில வார்த்தைகளைத் தேடுவதற்கும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

ஜனநாயக சோஷலிஸவாதியான ஜார்ஜ் ஆர்வெல், ரஷ்யாவில் ஸ்டாலின் ஆட்சியின் மீது அதிருப்தியுற்று, அப்போதைய அரசியல் சூழலை விமர்சித்து உருவகக் கதையாக எழுதிய நாவல் தான் ‘விலங்குப் பண்ணை’. வெற்றிபெற்ற ஒரு மக்கள் புரட்சி, தலைவர்களால் எப்படித் தோல்வியை நோக்கி நகர்த்தப்படுகிறது என்பதுதான் அந்நாவலின் மையம். தொடர்ந்து அவர் எழுதிய ‘1984’ நாவலும், இதே பொருளைத்தான் பேசியது. அரசதிகாரத்தின் கண்காணிப்பும் அவை மக்களிடத்தில் செலுத்தும் உளவியல் வன்முறைகளை யும் சித்தரித்தது அந்நாவல். இந்த இரண்டு நாவல்களும் சோவியத் ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டு இருந்தன.

சோஷலிஸவாதியான ஜார்ஜ் ஆர்வெலின் விமர்சனம், இன்னும் இடதுசாரி தலைவர்களுக்கு கோபக் கனலை மூட்டிக்கொண்டிருக்கிறது. அந்த விமர்சனத்தின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை என்பதும் புரிகிறது. அடுத்த மாசே துங் என்று வர்ணிக்கப்படும் ஜின்பிங், தான் பதவியேற்றதிலிருந்தே வரலாற்று ஆசிரியர்களை வாய்திறக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார். மாசே துங் ஆட்சிக் காலத்தில் 1966-ல் நடந்த கலாச்சாரப் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டைக் கடந்தபோது, அதுகுறித்த புத்தகங்கள் வெளியாவதற்குக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. கட்சியின் கொள்கைக்கு மாறுபட்ட எந்தவொரு புத்தகமும் இருக்கக் கூடாது என்று அவற்றை எரித்து அழித்த சம்பவங்களும் உண்டு. ‘வரலாறு மீண்டும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. முதல் முறை துன்பியல் சம்பவமாக, இரண்டாவது முறை கேலிக்கூத்தாக’ என்று சொன்னார் மார்க்ஸ். தலைவர்களையல்ல, தத்துவவாதிகளையே நம்புவோம்!

கடலும் கிழவனும்,

எர்னெஸ்ட் ஹெமிங்வே,

தமிழில்: எம்.எஸ்,

காலச்சுவடு பதிப்பகம்,

விலை ரூ.125, : 04652 278525

விலங்குப் பண்ணை,

ஜார்ஜ் ஆர்வெல், தமிழில்: க.நா.சு,

நற்றிணை பதிப்பகம்,

விலை ரூ.125,

044 2848 2818

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x