Published : 24 Mar 2018 09:24 AM
Last Updated : 24 Mar 2018 09:24 AM
ஜா
ர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மருத்துவருமான ஹண்ஸ்டா சௌவேந்திர சேகரின் சிறுகதைத் தொகுப்பான ‘ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்’ புத்தகம், சமகால அரசியலை எளிய மனிதர்களின் வழியாகப் பேசுகிறது. இவர் 2015-ல் சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுபெற்றவர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலைத் தமிழில் லியோ ஜோசப் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இயற்கை வளமும் தாது வளமும் கொட்டிக்கிடக்கிற சந்தால் பர்கானா பகுதி யில் வாழும் சந்தால் பூர்வகுடிகளைச் சுற்றியே ஒவ்வொரு கதையும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கதைகளில் சந்தால் பெண்களை இழிவாகச் சித்த ரித்திருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை அடுத்து, மருத்துவ அதிகாரி பதவியிலிருந்து ஹண்ஸ்டா நீக்கப்பட்டார். தான் பார்த்த, பழகிய மக்களின் கதை களையே எழுதியிருப்பதாகச் சொல்லும் ஹண்ஸ்டா, எந்த நிலைக்குச் சென்றாலும் பழங்குடியினர் என்ற அடையாளத்துக்காகவே அவமானத்துக்குள்ளாகும் மக்களின் வலியை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். வெளியுலகின் கண்களுக்கு அவ்வளவாகப் புலப்படாத இந்தச் சமூகத்து ஆண் கள் உழைப்பால் சுரண்டப்படுகிறார்கள், பெண்கள் உழைப்பாலும் உடலாலும் சுரண்டப்படுகிறார்கள்.
20 வயது தாளமை, வறுமையும் பசியும் பிடுங்கித் தின்ன.. 50 ரூபாய் பணத்துக்காகவும் தின்பண்டத்துக்காகவும் தன் உடலை ஒப்புக்கொடுக்கிறாள். அடித்தட்டு மக்களின் கையறு நிலையையும் அவர்களை ஏழ்மைக்குள் வைத்திருப்பதையே காலங்காலமாகச் செய்துவரும் அரசாங்கங்களின் நிலைப்பாட்டையும் மரக்கட்டையைப் போல அசைவற்றுப் படுத்திருக்கும் நொடியில் உணர்த்திவிடுகிறாள் தாளமை. வேலைக்காக வதோதராவில் குடியேறும் பன்முணி - பிரம் - குமாங் தம்பதி, அந்நிய நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறார்கள். சொந்த ஊரில் அசைவம் சாப்பிட்டுப் பழகியவர்கள் குஜராத்தில் ஒரு முட்டை யைச் சாப்பிடக்கூடப் பயப்படுகிறார்கள். ‘ஆச்சார’ மான அந்த இடத்தில் அவர்களால் சைவத்தைத் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. அடையாளத்தை மறைத்து, உணவுமுறையைத் துறந்து ஒவ்வொரு நாளும் உயிரற்ற வாழ்க்கை வாழ்வதாக நினைக்கும் பன்முணிக்குக் கடைசியில் அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது. ஆற்று மீனைச் சுத்தம் செய்தபடியே, “இங்கு நாங்கள் எதைச் சாப்பிடுகிறோம் என்று யாரும் கவனிப்பதில்லை. அடுத்தவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் என்று நாங்களும் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார். மக்களின் உணவு எனும் அடிப்படை உரிமையில்கூட அரசாங்கத்தின் தலையீடு நிகழும் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத குரல்களில் ஒன்றாகவே பன்முணியின் குரல் ஒலிக்கிறது.
அறியாமை ஆட்டிப் படைக்கிறபோது எதையுமே விதியோடும் பூதத்தோடும்தானே முடிச்சுப்போடத் தோன்றும்? அப்படித்தான் சூனியக்காரியாக பஸோஜி சித்தரிக்கப்படுகிறாள். நோயின் காரணமாகக் குழந்தைகள் இறந்துவிட, பழியனைத்தும் பஸோஜி தலையில் விழுகிறது. இந்தியப் பெண்களைப் போல மறுவார்த்தை பேசாமல் துயரத்தை உள்ளடக்கி, யாருக்கும் சொல்லாமல் கிளம்பிப் போகிறாள் அவள்.
பெருவணிக நிறுவனங்களுக்காக விவசாய நிலமும் எளியவர்களின் சொத்தும் பறிக்கப்படுகின்றன. யாருக்கோ நன்மை தரப்போகிற திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட குடியரசுத் தலைவர் வருகிறார். அந்தப் பகுதியே விழாக்கோலம் பூணுகிறது. நம் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இசைக் கலைஞன் மங்கள் மர்மூ தலைமையிலான சந்தால் நடனக் குழுவும் அதில் ஒன்று. ஆனால், அவர்கள் குடியரசுத் தலைவர் முன்னிலையில் அன்று நடனமாடவில்லை. “ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்” என்று மங்கள் மர்மூ சொல்கிறார். அதில் இருக்கிற நியாயம், அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனாலும், அவர்கள் காவல் துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். வலியால் அலறித் துடிக்கும் மங்கள் மர்மூ போன்றோருக்கு எப்போது விடுதலை எனும் கேள்வியை இந்தத் தொகுப்பு ஏற்படுத்துகிறது. மொழிபெயர்ப்பில், பெயர்களின் உச்சரிப்பிலும் மொழிநடையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
- பிருந்தா சீனிவாசன்,
தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT