Published : 25 Mar 2018 11:09 AM
Last Updated : 25 Mar 2018 11:09 AM
த
ங்கள் படைப்பாற்றலின் வழியே மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம் நமது ரசனையை மேம்படுத்துகின்ற, படைப்பாற்றலைத் தூண்டுகின்ற கலைஞர்களை நாம் அணுகும் விதம் பெரும்பாலும் ஏமாற்றம் தரும் விதத்திலேயே இருக்கிறது. அதிகம் போனால், சம்பந்தப்பட்ட கலைஞரின் படைப்புகளைப் பற்றி வெற்றுப் புகழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் பேசி நிறுத்திக்கொள்வதே நம்மிடையே வழக்கம். அடிப்படைப் புரிதல்கள்கூட இல்லாத ‘விமர்சனங்கள்’ வேறு!
இந்தச் சூழலில் ஒரு கலைஞரின் வெளிப்பாட்டுத் திறனையும் படைப்புத் திறனையும் உள்வாங்கி, அதை விரிவான புத்தகமாக எழுதுவது என்பது அரிது. நுணுக்கமான படைப்பாற்றலும் விரிவான கற்பனை வளமும் நிறைந்த இசையமைப்பாளரான இளையராஜா தொடர்பான இந்தப் புத்தகம் அந்த வகையில் மிக முக்கியமானது.
ஆதி மனிதர்கள் காலம்தொட்டு இசை என்பது மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அம்சமாகத் தொடர்வதை இந்தப் புத்தகம் கோட்பாட்டு அளவில் விளக்க முயல்கிறது. இசை பயன்படுத்தப்பட்ட விதம், கலாச்சாரத்தில் அது ஏற்படுத்தி யிருக்கும் தாக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, தமிழ்த் திரையிசையில் இளையராஜாவின் வரவு, அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகள், கட்டுடைப்புகள், ஏற்கெனவே இருந்த இசை வடிவங்களைத் திரையிசையில் அவர் பயன்படுத்திய விதம் ஆகியவற்றை உள்வாங்கி எழுதியிருக்கிறார்கள் பிரேம்-ரமேஷ். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் நிறைந்திருக்கும் காட்சித் தன்மை பற்றி விரிவாகவே பேசுகிறது இந்தப் புத்தகம்.
பல்வேறு கலாச்சார வெளிகளின் தொகுப்பாக இளையராஜா உருவாக்கும் நிரவல் இசை இருப்பதைப் பலர் கவனித்திருக்கலாம். இந்தப் புத்தகத்திலும் அதுதொடர்பான குறிப்பு உண்டு. இதன் பின்னணியில், இசையறிவு என்பதைத் தாண்டி, மரபுகளை உள்வாங்கிக்கொள்ளுதல், பின்னர் தேவைப்படும் இடங்களில் அவற்றை மீறுதல் என்று பல்வேறு விஷயங்கள் உண்டு. இலக்கணங்கள், வரம்புகளைக் கொண்ட மேற்கத்திய செவ்வியல் இசை, கர்னாடக இசை ஆகியவற்றை, கட்டுப்பாடுகள் அற்ற கிராமிய இசையுடன் கலந்து அவர் உருவாக்கிய பாடல்கள் முன்னெப்போதும் கேட்டிராத புதிய ஒலியைத் தந்தன. மரபுகளை முழுமையாகப் புரிந்துகொண்டு அவற்றை மீறும் அவரது துணிச்சல் சுப்புடு போன்ற இசை விமர்சகர்களை ஆச்சரியப்படுத்தியது.
சிறு பட்டியலுக்குள் அடங்கும் கதைச் சூழல்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றாலும் இளையராஜாவின் பாடல்கள் உருவாக்கும் உணர்வெழுச்சிகள் தனித்தன்மை கொண்டவை. செவியின்பத்தைத் தரும் பாடல்களாக மட்டுமல்லாமல், ரசிகர்கள் தங்கள் தாய்நிலங்களை நினைவுபடுத்திக்கொள்வதில், பால்ய நினைவுகளை மீட்டெடுத்துக்கொள்வதில் அவரது இசைக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமகாலப் பாடல்களைவிடவும் அவரது பாடல்கள் அதிகம் ஒலிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முன்னுரையில் பிரேம் – ரமேஷ் குறிப்பிட்டிருப்பதுபோல், இசையின் நுணுக்கங்களையோ தொழில்நுட்பங்களையோ இந்தப் புத்தகம் பேசவில்லை. குறிப்பிட்ட படங்கள், பாடல்களைப் பற்றியும் குறிப்புகள் இல்லை. மாறாக, பாடலை, இசையைக் கேட்பவர் மனதில் இளையராஜாவின் படைப்புத் திறன் உருவாக்கும் சித்திரங்களைப் பற்றி இப்புத்தகம் பேசுகிறது. முக்கியமாக, இளையராஜாவின் இசை சுட்டும் நிலப்பரப்புகள் பற்றி!
திரைப்படத்தின் கதைச் சூழலுக்கேற்ற பாடல்களை உருவாக்கும் விதத்தில் இளையராஜாவின் வெளிப்பாட்டுத் திறன் அநாயாசமானது. மரபுகளை மீறி அவர் உருவாக்கும் மெட்டும் நிரவல் இசையும் திரைப்பாடல் என்பதையும் தாண்டி பல்வேறு வடிவம் கொள்பவை. அவரது பாடல்கள் காட்சிப்படுத்தப்படும் விதத்தில் போதாமை இருப்பதை பல படங்களில் பார்க்க முடியும். திரைப்பட சட்டகத்துக்கு வெளியே அவரது இசை மிதந்து, ரசிகரின் ஆழ்மனதில் தங்கிவிடுவதன் பின்னணியில் இருக்கும் மேதைமையைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் முயல்கிறது.
ஒற்றை இசைத் துணுக்கைக் கேட்டால்கூட, அந்தப் பாடலின் முழுவடிவத்தையும் நினைவுபடுத்திக்கொள்ளும் அளவுக்கு செறிவான இசையமைப்பு இளையராஜாவின் பலம். ஆற்றொழுக்கு போல் வளமான இசைக் கோவைகளின் தொடர்ச்சியும், பல்வேறு இசை வடிவங்களின் சங்கமும் அவரது பாடல்களின் தனிச்சிறப்பு.
திரைப்படத்தில் இளையராஜா உருவாக்கிய பாடல்கள், பின்னணி இசையுடன் திருப்தி அடைவது என்று மட்டுமல்லாமல், திரைக்கு வெளியே அவர் செய்ய வேண்டிய இசைப் பணிகள் இருப்பதை உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆசிரியர்கள். கர்னாடக இசைக்கு, தமிழிசைக்குப் புதிய வர்ண மெட்டுகளை இளையராஜா உருவாக்கித் தருவார் என்று புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்கும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறிப்பிட்டிருக்கிறார். இளையராஜா அதைச் செய்யாமல் இருப்பதில் அவருக்கு ஏமாற்றம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1998-ல் இந்தப் புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து, ‘இசையற்ற’ வகையில் விமர்சனங்கள் எழுந்தன. மறுபதிப்பாக வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகத்தில் இவற்றுக்கு வலுவான, பொருத்தமான, விரிவான பதில்களை பிரேம் – ரமேஷ் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ்த் திரையிசையின் போக்கில் மிகப் பெரும் உடைப்புகளை, பாய்ச்சல்களை நிகழ்த்தி, பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு ஆதர்சமாகவும், கறாரான இசை விமர்சகர்களால்கூட தவிர்க்க முடியாத கலைஞராகவும் உருவெடுத்த இளையராஜா, அதற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத விமர்சனக் கணைகளை எதிர்கொள்வது காலத்தின் குரூர நகைச்சுவைதான். எல்லா கலைஞர்களுக்கும் இது நேரும் என்றாலும் அவர் விஷயத்தில் இதற்கான பின்னணியும் காரணங்களும் வேறு. அதை பிரேம் – ரமேஷ் துணிச்சலாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இசை குறித்த கோட்பாடு அளவிலான கேள்விகளுக்கு இளையராஜா அளித்திருக்கும் பதில்கள் இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம். அவரது படைப்பாற்றலின் வேகம் குறித்த கேள்விக்கு, “இசை என்பது மிகப் பெரும் ஆற்றல்” என்கிறார். தனது இசையில் பல்வேறு கலவைகளும் புதிய வடிவங்களும் உருவாவது தொடர்பான கேள்விக்கு, “நான் எதையும் உடைக்கவில்லை.
தானாகவே உடைத்துக்கொண்டு புதிய வடிவம் பெருகுகிறது” என்று பதில் தருகிறார். இயல்பாகவே அபாரமான இசை ஆற்றல் கொண்ட இளையராஜா கற்றல், கடும் பயிற்சி, பிற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தனக்கான பாணியை உருவாக்கிக்கொண்டவர். அதன் மூலம் இசையின் எல்லைகளை விரித்தவர். அவரது பதில் உணர்த்துவது அதைத்தான்!
இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
பிரேம் – ரமேஷ்,
விலை: ரூ.100 | டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர் மேற்கு, சென்னை – 600 078 | 8754507070
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT