Published : 11 May 2019 08:11 AM
Last Updated : 11 May 2019 08:11 AM
சுளுந்தீ
இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம்
பவித்திரம், திருவண்ணாமலை-606806.
விலை: ரூ.450
99948 80005
நெருப்பும், சக்கரமும் மனித குல நாகரிக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளிகள். நெருப்பைப் பூவுலகுக்குத் திருடிக்கொண்டு வந்துசேர்த்த பிரமிதியாக்கைக் கடவுளாகக் கொண்டாடியது கிரேக்க மரபு. கைக்குள் அடங்கும் தீப்பெட்டியிலிருந்து அது புறப்பட்டு, பிறகு ஒளிரும் மின்சாரமாகப் பரவிவிட்ட பின்னர், இன்றைய சூழலில் நெருப்பு பிரமிக்கத்தக்க வஸ்து அல்ல. ஒருகாலத்தில் எண்ணெய்த் துணி கொண்டு தயாரிக்கப்பட்ட தீவட்டி, வெளிச்சம் கொடுத்தது. தீவட்டிப் பயன்பாட்டுக்கு முன்னரே ‘சுளுந்து’ என்ற மரம் வெளிச்சம் தந்துள்ளது. சுடரும் நெருப்பான சுளுந்தீயைக் கொண்டு 18-ம் நூற்றாண்டின் ஒரு காலப்பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார் எழுத்தாளர் இரா.முத்துநாகு.
நாவிதர், பண்டிதர், மருத்துவர் எனப் பல்வேறு காரணப்பெயர்களால் அறியப்படும் பழஞ்சேவைச் சமூகத்தின் வாழ்நிலையை விவரிக்கும் நாவல் இது. திண்டுக்கல்-மதுரைச் சாலையில் அமைந்திருந்தது நாயக்கர் கால கன்னிவாடி அரண்மனை. அதைச் சார்ந்த நாவிதர், குடியான மக்களின் வாழ்க்கை இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பண்ணைக்காடு, பன்றிமலை, வேடசந்தூர், கசவனம்பட்டி, பழநி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளை நம் மனக்கண்ணில் நிழலாட நிறுத்துகிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரைகூட நாவிதர்களின் வாழ்க்கை வேறாகத்தான் இருந்திருக்கிறது. ஒரு சமூகம் கால மாற்றத்தில் எவ்வாறாக மாறியிருக்கிறது என்பதை இந்நாவல் வழி அறிய முடிகிறது.
அடுத்த நாட்டு இளவரசனுக்கு மகளை மணம் முடிக்கத் தீர்மானிக்கும் முன் இளவரசனைப் ‘பார்த்து வர’ அரண்மனை நாவிதரை அனுப்பி வைப்பார் அரசர். இடைச்சவரம் செய்வதோடு ஆளை எடைபோட்டும் வருவார் மன்னனின் தூதுவர். பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியோ பெண்களை முழுதறிவார். நாவிதர்களின் பண்டுவம் என்ற நாட்டு மருத்துவத்துக்கு ‘கந்தகம், பூதம் என்ற பாதரசம், வீரம், பூரம், தாளம்’ போன்ற மருந்துகள் பிரதானமாகப் பயன்பட்டிருக்கின்றன. இவற்றைக் கொண்டு வெடிபொருள் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டதும், இதன் அபாயம் கருதி இம்மருந்துகளின் வைப்புரிமை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து, இவை மருத்துவப் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல விலகியது.
ஈரோடு காளிங்கராயன் கால்வாய் அருகமைந்த கல்வெட்டு, ராமநாதபுரத்தில் கிடைத்த உயில் ஓலை எனப் பல ஆதாரங்களைக் காட்டி அச்சமூகம் ஒருகாலத்தில் உயர் பொருளாதார நிலையில் இருந்ததை முத்துநாகு சுட்டிக்காட்டுகிறார். நாவலில் வரும் பன்றிமலைச் சாமியார், அறுந்த மூக்கை ஒட்ட வைக்கும் மூக்கு சேர்த்தல் முதலான மருத்துவக் குறிப்புகளை வெகு இயல்பாகச் சொல்லிச் செல்வதைப் படிக்கும்போது ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது. இதற்கான ஆதார தகவல்களையெல்லாம் கொடைக்கானல் - செண்பகனூர் ஆவணக்காப்பகம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி எடுத்துப் புனைவாக்கியிருக்கிறார்.
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் தாத்தாக்கள், பஞ்ச காலத்தில் புளியங்கொட்டையை அவித்துச் சாப்பிட்டுப் பசியாறினார்கள். பசியை நீக்கித் தெம்பையும், உயிர் பலத்தையும் தரும் புளியங்கொட்டையானது பஞ்சத்துக்குக் கிடைக்கட்டுமே என்று சாலை ஓரங்களில் புளிய மரங்களை ராணி மங்கம்மாள் நட்டு வைத்தார். சாலையோரப் புளிய மரங்கள் அசோக மன்னன் பெயரோடு ராணி மங்கம்மாள் பெயரையும் காற்றில் எழுதி வைத்திருந்தது, சுளுந்தீயின் வெளிச்சத்தில்தான் கண்ணில் பட்டது. சுவாரஸ்யமும் அறியப்படாத தகவல்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.
யதார்த்தச் சித்தரிப்பாகவே ‘சுளுந்தீ’ சொல்லப்பட்டிருந்தாலும் எழுதப்படாத அதன் சமகால விமர்சனத்தைக் கூரிய வாசகர் உணர்ந்துவிடுவார். பழைய வரலாற்றை மட்டும்தான் ‘சுளுந்தீ’ சொல்கிறது. நாவிதர் சமூகத்தின் சமகால நிலையை நாம் அறிவோம். அங்கிருந்து நிகழ்காலப் பின்னணியையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
தொ.பரமசிவன் ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஏங்கியது உண்டு. அந்தக் குறையை ‘சுளுந்தீ’ நாவல் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் முத்துநாகு.
- பழ.அதியமான், ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: athiy61@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT