Published : 27 Apr 2019 08:35 AM
Last Updated : 27 Apr 2019 08:35 AM
அண்ணாவின் தலைமையிலான முதலாவது திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்த எட்டு அமைச்சர்களில் ஒருவர் ஏ.கோவிந்தசாமி. அந்த அமைச்சரவையிலேயே மூத்த சட்டமன்ற உறுப்பினரும்கூட. 1952 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1957 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானபோது அண்ணாவின் அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்புவகித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் அமைச்சரவையிலும் தொடர்ந்தார் ஏ.கோவிந்தசாமி. அவர் எதிர்க்கட்சி உறுப்பினராகவும் அமைச்சராகவும் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளை மூன்று பெருந்தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் எஸ்.எஸ்.மணியம்.
உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் தன்னோடு சேர்த்துக்கொண்ட நிலையில், ஏ.கோவிந்தசாமி மட்டுமே திராவிட இயக்கத்தில் இணைந்தார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு என்று திராவிட இயக்கத்தின் குரலை, திமுகவுக்கு முன்னரே சட்டமன்றத்தில் ஒலித்தவர் ஏ.கோவிந்தசாமி. அவரது கன்னிப்பேச்சிலேயே பகுத்தறிவுக் கொள்கைகள் நேரடியாக வெளிப்பட்டிருக்கின்றன.
ராஜாஜி நம்பிக்கைத் தீர்மானத்தைக் கோரியபோது அவரது ஆட்சியை எதிர்த்து ஏ.கோவிந்தசாமி ஆற்றியிருக்கும் உரை, திராவிட இயக்கத்தினரின் உள்ளப் பிரதிபலிப்பாகவே அமைந்திருக்கிறது. காரமும் நெடியும் சற்றே அதிகமும்கூட. ஏ.கோவிந்தசாமியைத் தனிமைக்குரல் என்று விமர்சித்த ராஜாஜியின் வார்த்தைகளே ஒருவகையில், அவருக்குப் பெருமை சேர்ப்பதும்கூட. சென்னை சட்டமன்றத்தில் ஒலித்த திராவிட இயக்கத்தின் முன்னோடிக் குரல் அவருடையது. அன்று மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படாதிருந்த நிலையில், சென்னை சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆங்கிலமே தொடர்புமொழியாக இருந்துவந்தது. தமிழோடு தெலுங்கும் மலையாளமும் பேசப்பட்டது. தாய்மொழியை மட்டுமே அறிந்திருந்த உறுப்பினர்கள் தடுமாறி நின்றார்கள். அந்நிலையில் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு அவசியம் என்ற தீர்மானத்தையொட்டி ஏ.கோவிந்தசாமி ஆற்றிய உரையும் குறிப்பிடத்தக்க ஒன்று. ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் 1937-ல் இந்தித் திணிப்பு தோல்வியுற்றதையும் அதில் பெரியார், அண்ணாவின் பங்களிப்பையும் நினைவுபடுத்தி ராஜாஜியின் முன்னிலையிலேயே ஆற்றப்பட்ட உரை அது.
ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாவும் சத்தியவாணி முத்துவும் கைதுசெய்யப்பட்டபோது அதைக் கண்டித்து ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் ஏ.கோவிந்தசாமி. (கைதுசெய்யப்பட்டபோது சத்தியவாணி முத்து ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருந்தார்.) அண்ணாவை விடுவிக்காவிட்டால் நாளை இந்த அரசாங்கத்துக்கே ஆபத்து ஏற்படும் என்று தனது உரையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அவர்.
1957-ல் திமுகவின் சட்டமன்றப் பிரவேசத்துக்குப் பிறகு அந்தக் குரலில் இன்னும் தீவிரமும் கவனமும் கூடியது. ஏ.கோவிந்தசாமி விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்புவகித்த 1967-69 ஆண்டுகள், முக்கியமானதொரு வரலாற்றுக்கட்டம். நாடெங்கும் உணவுப் பற்றாக்குறையால் நெருக்கடியைச் சந்தித்திருந்த நேரம் அது. அதைச் சரிசெய்வதற்காகப் பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்ட காலம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லையென்றாலும், பசுமைப் புரட்சியால் பஞ்சாபை அடுத்து அதிக பலன்களைப் பெற்றது தமிழகம்தான். உணவுப் பஞ்சத்தைப் போக்கவும் விளைச்சலை அதிகரிக்கவும் தமிழக அரசு முன்னெடுத்த திட்டங்களையும் அதையொட்டி நடந்த விவாதங்களையும் இந்தப் பெருந்தொகுப்பு உள்ளடக்கியிருக்கிறது.
நூலின் தொடக்கத்தில் ஏறக்குறைய நாற்பது பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற வரலாறு நல்லதொரு விவரத் தொகுப்பு. 1920 தொடங்கி சென்னை சட்டமன்ற அமைச்சரவைகளின் பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் வரலாற்று ஆய்வுகளுக்கான முதன்மையான சான்றாதாரங்களில் ஒன்று. தமிழகத் தலைவர்களின் சட்டமன்ற உரைகள் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு இன்னும்கூட உருவாகவில்லை. பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் உரைகளை கே.ஜீவபாரதி தொகுத்து வெளியிட்டிருக்கிறார். திராவிட இயக்கத் தலைவர்களின் உரைகள் இன்னும் தொகுக்கப்படவில்லை. அவ்வகையில், எஸ்.எஸ்.மணியத்தின் இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
கொள்கைக் குன்று ஏ.கோவிந்தசாமி சட்டமன்ற உரைகள் (3 தொகுதிகள்)
தொகுப்பாசிரியர் எஸ்.எஸ்.மணியன்
ஏ.ஜி.எஸ். பதிப்பகம்
7, முத்துவேல் லேஅவுட் முதல் தெரு,
விழுப்புரம் - 605602.
மொத்த விலை: ரூ.1,900
தொடர்புக்கு: 94432 66120
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT