Published : 07 Apr 2019 09:26 AM
Last Updated : 07 Apr 2019 09:26 AM
ஒருகாலத்தின் குரலாகவும், தன் காலத்தின் இலக்கியப் போக்குகளைக் கட்டமைக்கும் சக்தியின் உருவகமாகவும் வாழ்ந்த சி.சு.செல்லப்பா, தன் பிந்தைய காலத்தில் தன் செழுமையான அர்ப்பணிப்புமிக்க கால நினைவுகளில் உறைந்துவிட்டிருந்தார். சி.சு.செல்லப்பாவின் நெடிய இலக்கியப் பாதை மூன்று கட்டங்களாக அமைந்திருக்கிறது. இடைக்காலமான ‘எழுத்து’ இதழ் காலமே இவருடைய வாழ்க்கைப் பாதையின் மையம். அவர் இலக்கிய வாழ்வின் உச்சமான, பெறுமதியான காலம் அதுவெனில், அதை நோக்கிய பயணமாக அமைந்தது அதற்கு முந்தைய காலகட்டம். பிந்தைய மூன்றாவது காலகட்டம், ‘எழுத்து’ இதழ் காலம் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய கொடைகளின் பெருமித நினைவுகளில் திளைத்திருந்த காலம். அக்காலம் குறித்த நினைவுகளையும் அதன் அடையாளங்களையும் பதிவுசெய்யும் முனைப்புடன் இக்காலத்தில் கையெழுத்துப் பிரதிகளை உருவாக்கியபடி இருந்தார்.
என் சென்னை வாழ்க்கையில் செல்லப்பாவை அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. செல்லப்பா ‘எழுத்து’ இதழ் ‘எழுத்து’ பிரசுரம் என்றான 18 ஆண்டு காலக் கடுமையான யாத்திரைக்கும் பொருள் இழப்புக்கும் பின்னர், 40 ஆண்டு கால சென்னை வாசத்தை முடித்துக்கொண்டு, 1978-ல் சொந்த ஊரான வத்தலக்குண்டு சென்றுவிட்டிருந்தார். ஆறாண்டு காலம் அங்கிருந்துவிட்டு இலக்கியத் தனிமை உணர்வு மேலிட, மீண்டும் 1984-ல் சென்னை திரும்பி திருவல்லிக்கேணியில் வசிக்கத் தொடங்கினார். அதற்குச் சற்று முன்பாகத்தான் நான் சென்னைக்குக் குடிபெயர்ந்து, எழுத்தாளரும் ‘பீகாக்’ பதிப்பக உரிமையாளருமான கி.ஆ.சச்சிதானந்தம் வீட்டின் மாடியில் வசித்தேன். இக்காலகட்டத்தில் செல்லப்பாவை அவ்வப்போது சந்திக்க வாய்த்தது. சச்சிதானந்தம் ‘எழுத்து’ காலம் தொட்டு செல்லப்பாவுடன் அணுக்கமாக இருந்தவர். ‘எழுத்து’ எழுத்தாளர்கள் பலரும் செல்லப்பாவை விட்டு, அவரது சமகாலத் தன்மையற்ற பிடிவாதங்களால், ஒதுங்கிய நிலையில் சச்சிதானந்தம் மிகுந்த மதிப்புடன் உறவைத் தொடர்ந்துகொண்டிருந்தார். செல்லப்பா தன் வளமான இலக்கிய கால நினைவுகளின் பெருமிதத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தார். புதிய போக்குகளைப் பொருட்படுத்தாதவராகவும் புறக்கணிப்பவராகவும் கால மாற்றங்களில் சலிப்புற்ற அதேசமயம் வைராக்கியமிக்க முதியவராகவும் இருந்துகொண்டிருந்தார்.
சி.சு.செல்லப்பா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் சச்சிதானந்தம் வீட்டுக்கு வந்துவிடுவார். நான் வாய்ப்பு கிட்டும் மாலை நேரங்களில் அவர் வீட்டுக்குப் போவேன். ‘எழுத்து’ காலத்துக்குப் பின் எதுவுமே சரியில்லை என்ற போக்கிலேயே அவரது உரையாடல் இருக்கும். இலக்கியம் தவிர்த்த பிற கலைகள் மீது சிறுபத்திரிகையாளர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவருக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. விமர்சனம், படைப்பு என எல்லாத் தளங்களிலும் ஒரு சரிவையே கண்டார். சமயங்களில் புதிய போக்குகளின் சிறந்த அம்சங்கள் பற்றிச் சொல்லிப்பார்ப்பேன். மிக மூர்க்கமாகப் புறக்கணித்துவிடுவார். “பி.எஸ்.ராமையா படிச்சிருக்கியா, முதல்ல அதப் படி” என்று கடுமையாகச் சொல்வார். அவரது கவனங்களும் அவதானிப்புகளும் அரசியலைப் பொறுத்தவரை காந்தியோடும், இலக்கியத்தைப் பொறுத்தவரை ‘எழுத்து’ காலத்தோடும் நின்றுவிட்டது. அவரை அப்படியே இருக்க விட்டுவிடுவதுதான் உத்தமம் என்பது அப்போது எனக்குப் புரிந்திருக்கவில்லை.
காந்தியமும் இலக்கியமுமே அவர் வாழ்வை வழிநடத்தின. தன் கடந்த காலத்தையும் அக்காலத்திய இலக்கியப் பெறுமதிகளையும் எழுத்தாக்குவதில் அவர் அயரவே இல்லை. அவருடைய கடைசி 20 ஆண்டு காலத்திலும் அவர் சோர்வுறாது எழுதியிருக்கிறார். அவற்றின் பிரசுர சாத்தியங்கள் குறித்த கவலையின்றி எழுதுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இக்காலகட்டத்தில் ‘எழுத்து’ இதழ் அனுபவங்கள் பற்றியும், மணிக்கொடி படைப்பாளிகள் பற்றியும், பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி பற்றியும், தன் சிறுகதை பாணி பற்றியும், ந.பிச்சமூர்த்தியின் கவித்துவம் பற்றியும் எழுதியிருக்கிறார். மேலும், சுதந்திர கால இயக்கம் குறித்து ‘சுதந்திர தாகம்’ என்றொரு 2,000 பக்க நாவலொன்றையும் எழுதினார். இவையெல்லாம் கைப்பிரதிகளாக அவர் வசமிருந்தன. அவற்றில் சில, அன்றைய சூழலில் புத்தகங்களானது பெருங்கதை.
இக்காலகட்டத்தில், தான் எழுதியவை புத்தகங்களாக வர வேண்டுமென்பதே அவருடைய ஒரே ஆசையாக இருந்துகொண்டிருந்தது. அவை புத்தகங்களாக வந்துவிட்டால் அவை பரவலான கவனம் பெற்று, எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தார். சச்சிதானந்தம் தனது ‘பீகாக்’ பதிப்பகம் மூலம் பிச்சமூர்த்தியின் கவித்துவம் பற்றிய ‘ஊதுவத்திப் புல்’ நூலைக் கொண்டுவந்தார். அது, நான் நடத்திவந்த மிதிலா அச்சகத்தில்தான் நூலாக்கம் பெற்றது. இச்சமயத்தில் செல்லப்பா மெய்ப்புப் பார்ப்பதற்காக ஓரிரு முறை அச்சகம் வந்திருக்கிறார். பிற கைப்பிரதிகள் அப்போது நூலாகவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின், பெங்களூர் சென்று வங்கியில் பணிபுரிந்த ஒரே மகனுடன் வசித்தார்.
அவர் பெங்களூரில் மகனுடன் வசித்த காலகட்டத்தில்தான், அமெரிக்காவில் உள்ள ராஜாராம், இலக்கிய ஆர்வம் கொண்ட சில நண்பர்களுடன் இணைந்து ‘விளக்கு’ என்ற அமைப்பையும், அதன் சார்பாக ‘புதுமைப்பித்தன் நினைவு அறக்கட்டளை’யையும் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த தமிழ்ப் படைப்பாளிக்கு விருதளிப்பதென விழைந்தார். அதன் முதல் விருதை சி.சு.செல்லப்பாவுக்கு அளிப்பதென முடிவெடுக்கப்பட்டு, பெங்களூரில் வசித்த தமிழவன் மூலம் செல்லப்பாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பரிசுகள் பெறுவதில் தனக்குள்ள உடன்பாடின்மையைத் தமிழவனிடம் தெரிவித்திருக்கிறார் செல்லப்பா. மேலும், “ஒரு மூத்த எழுத்தாளனைக் கவுரவிப்பதானால், வெளிவர வாய்ப்பில்லாமல் இருக்கும் அவனது படைப்பு நூலை வெளியிடுவதுதான் தக்க கவுரவிப்பு ஆகும். நான் அதையே விரும்புவதாகச் சொன்னேன்” என்கிறார் செல்லப்பா.
அவர் விருப்பப்படியே, அவரது ‘என் சிறுகதை பாணி’ என்ற நூல் ‘விளக்கு’ வெளியீடாக 1995-ல் வெளிவந்தது. ‘விளக்கு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் சென்னையில் செயல்பட்ட ‘வெளி’ ரங்கராஜன் அந்நூலை வெளிக்கொணரும் பொறுப்பை ஏற்றிருந்தார். அதன் மூலம் செல்லப்பாவிடம் ஏற்பட்ட நெருக்கமான உறவிலிருந்து, அவரிடம் இன்னும் பல கையெழுத்துப் பிரதிகள், சேதமடைந்துவிடக்கூடிய மோசமான நிலையில் இருந்துகொண்டிருப்பதை ரங்கராஜன் அறிந்தார். அவற்றை நூல்களாக்கும் முனைப்புகொண்டார். செல்லப்பா – ரங்கராஜன் கூட்டு முயற்சியில் கிட்டத்தட்ட 2,000 பக்கங்கள் கொண்ட ‘சுதந்திர தாகம்’ என்ற நாவலின் கையெழுத்துப் பிரதி 3 தொகுதிகளாக ‘லலிதா ஜுவல்லரி’ சுகுமாரன் உதவியுடன், ‘எழுத்து – வெளி’ வெளியீடாக வந்தது.
தன் வாழ்வின் கணிசமான காலத்தை இதழ் வெளியீட்டிலும், நவீனத் தமிழிலக்கியப் பிரதிகளை நூல்களாக்குவதிலும் லட்சிய வேட்கையுடன் செயல்பட்டுப் பெரும் இழப்புகளை எதிர்கொண்ட சி.சு.செல்லப்பா, தன் இறுதிக் காலங்களில் தான் அயராது உருவாக்கிய கையெழுத்துப் பிரதிகள் புத்தகங்களாவதில் எதிர்கொண்ட இடர்கள் கால முரணன்றி வேறென்ன? தன் காலத்தின் லட்சிய உருவகம் சி.சு.செல்லப்பா!
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT