Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM

உவேசா: இயல் இசையின் சரித்திரக் களஞ்சியம்!

உவேசா என்றவுடன் தமிழ்த்தாத்தா என்ற அவரது சிறப்புப் பெயரே உடனடியாக நினைவில் வந்து நிற்கிறது. சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடிச் சேகரித்து, பாடபேதம் பார்த்துப் பதிப்பித்தமைக்காகத் தமிழ்கூறும் நல்லுலகமே அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. பதிப்பாசிரியர் என்ற பங்களிப்புக்குள்ளாகவே அடங்கிவிடக்கூடியதா அவரது ஆளுமை? அறிவுசார் தளத்தில் இயங்கும் எவரொருவருமே ஒற்றை அடையாளத்துக்குள் அடங்கிவிடக்கூடியவர் அல்ல; உவேசா மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

‘என் சரித்திரம்’, ‘மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ ஆகிய நூல்களின் வாயிலாகத் தனது சமகாலத்து வரலாற்றை எழுதிய உவேசா தனக்கு முன்பு வாழ்ந்த முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதிச்சென்றிருக்கிறார். இசைக் குடும்பத்தில் பிறந்தவர், சிறிது காலம் இசையும் பயின்றவர் என்பதால் அவர் எழுதிய வரலாறுகள் பெரிதும் இசைக்கலைஞர்களைப் பற்றியவையாகவே இருக்கின்றன. மகா வைத்தியநாதையர், கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், வீணைப் பெருமாளையர், சங்கராபரணம் நரசையர், ஆதி மூர்த்தி ஐயர் என்று பல இசைக்கலைஞர்களின் வரலாறுகளைப் புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதினார் உவேசா. தஞ்சையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை, அவர்களை ஆதரித்த அன்றைய தஞ்சை மன்னர்களை, அந்தக் காலத்தின் அரசியல் நிலைகளை, பண்பாட்டுச் சூழல்களை அறிந்துகொள்வதற்கான சரித்திரப் பெருஞ்களஞ்சியங்கள் உவேசாவின் நூல்கள்.

இசை வளர்த்த தஞ்சை

இன்றைக்கும் ஆண்டுதோறும் திருவையாற்றில் நடக்கும் தியாகய்யர் உற்சவத்தைக் கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தினர் முன்னின்று நடத்துகிறார்கள். மூப்பனார் குடும்பத்துக்கும் இசையுலகுக்குமான பந்தம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்டது என்பதை உவேசா எழுத்துகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. மராட்டிய மன்னர் காலத்தில் சங்கராபரணம் நரசைய்யர் தனக்கு ஏற்பட்ட பெரும்பொருட்செலவைச் சமாளிக்க இராமபத்திர மூப்பனாரிடம் சங்கராபரணத்தை அடமானம்வைத்து கடன்பெற்றார் என்றொரு வரலாற்றுத் தகவலைச் சொல்கிறார் உவேசா. வாலீஸ் அப்புராயர் அந்தக் கடனை அடைக்க முற்பட்டபோது, மூப்பனார் தான் கொடுத்த கடனைத் திரும்பப்பெறாமல், ராகத்தை அடமானம் பெற்றதற்கான அபராதம் என்று சொல்லி இன்னும் கூடுதலாக உதவினார் என்கிறது வரலாறு.

தியாகய்யரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரைப் பாடுவதற்காக அரசவைக்கு அழைத்த சரபோஜி மன்னரையும் அவர் அந்த அழைப்பை மறுத்ததைப் பற்றிய கதைகளும் தவறாமல் இடம்பெறுகின்றன. திருவாரூர் தியாகராஜர் ஆலய நட்டுவனார் சின்னத்தம்பியைப் பற்றி உவேசா எழுதிய கட்டுரையைப் படித்தால், சரபோஜியைப் பற்றிய சித்திரம் முற்றிலும் வேறானதாக இருக்கும். சரபோஜி மன்னரின் இசையார்வமும், திருவாரூர் கோயில் திருவந்திக்காப்பு தரிசனத்தின்போது சுத்தமத்தளம் வாசிக்கும் ஒரு நட்டுவனாரின் இறைபக்திக்கு அவர் கொடுத்த மரியாதையும் விளங்கும். சரபோஜியை அருங்கலை வினோதர் என்று கொண்டாடியிருக்கிறார் உவேசா. அவரது வார்த்தைகளில் சொல்வதென்றால் தஞ்சைதான் இசைக்கலையின் அரசிருக்கை.

ஒரு நூலகத்தின் கதை

சரபோஜி, வைஸ்ராயைச் சந்திக்கச் சென்ற நிகழ்ச்சியே சரஸ்வதி மஹால் என்ற அறிவுக் கருவூலத்தின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தது. திருக்குறளைப் பற்றிய வைஸ்ராயின் கேள்விகளுக்குப் பதில்சொல்லத் தடுமாறிய சரபோஜி புலவர்களைக் கொண்டு தமிழ் நூல்களைச் சேகரித்தார் என்று அந்நூலகம் உருவான கதையை எழுதியிருக்கிறார் உவேசா. மன்னருக்கு உதவியாக நூலக உருவாக்கத்தில் பணியாற்றிய தமிழ்ப் புலவர்களின் பட்டியலையும் அவர் அளித்திருக்கிறார். மன்னர் ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்குகிறார் என்றவுடன் மக்கள், தங்களிடம் இருக்கும் சுவடிகளுக்கு அதிக விலையைச் சொன்னார்களாம்.

நூலகம் என்றால் புத்தகங்களைச் சேகரித்துக் குவித்துவைத்தால் போதுமா? அவற்றை நிரல்படத் தொகுக்க வேண்டாமா? சரஸ்வதி மஹாலின் நூல்பகுப்பு முறைமையில் தஞ்சை நீதிபதியாகப் பணியாற்றிய பர்னல் துரையின் பங்களிப்பையும் எழுதியிருக்கிறார் உவேசா. கூடவே, அவர் பணி முடிந்து தாயகம் திரும்பியபோது சரஸ்வதி மஹால் ஏட்டுச் சுவடிகளை நகலெடுத்துக்கொண்டு போனதையும்.

தஞ்சாவூரில் இரட்டைப் பிள்ளைகள் என்ற பெயரில் மிகவும் புகழ்பெற்றிருந்த இசைக்கலைஞர்கள் ஆனை, ஐயா ஆகியோரைப் பற்றிய உவேசாவின் கட்டுரை, தஞ்சையில் ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுக்கும் கர்நாடக இசைக்கலைஞர்களுக்கும் இடையே நடந்த ஒரு இசைப் போட்டியை விவரிக்கிறது. இசைத் துறையில் வல்லவர்களாயினும், அவர்கள் ஒரு செல்வந்தர் வீட்டில் அவமானப்பட்ட கதையும் அதில் உண்டு.

தனிப்பாடல்கள் எழுதப்பட்ட சூழல்களையும் அவற்றை எழுதிய புலவர்களையும் அவர்களை ஆதரித்த புலவர்களைப் பற்றி உவேசா எழுதியிருக்கும் கட்டுரைகளிலும் அந்தக் காலகட்டத்தின் அரசியல், பொருளாதாரச் சூழல்களையும்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. தான் எழுதிய கட்டுரைகளின் அடிக்குறிப்பில் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவலைக் கூறியது யார் என்பதையும் உவேசா குறிப்பிட்டிருக்கிறார். ஒரே தகவலைப் பலரிடம் கேட்டுச் சரிபார்த்துக்கொண்ட பிறகே அவர் அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மருது பாண்டியர்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளுக்கு விஷய தானம் அளித்தவர்களில் ஒருவர் சம்ஸ்கிருத வித்வான் ஸ்ரீ வெங்கடேச சாஸ்திரி, மற்றொருவர் சிறுவயல் ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர்.

வரலாறான வாழ்க்கை

உவேசா எழுதிய வாழ்க்கை வரலாறுகள், தமிழகத்தின் பண்பாட்டு வரலாறும்கூட. பதிப்பாசிரியர் என்பதைப் போலவே வாழ்க்கை வரலாற்று நூலாசிரியராகவும் போற்றப்பட வேண்டியவர் உவேசா. அவர் பதிப்பித்த இலக்கியங்கள் தமிழரின் தொன்மை வரலாற்றுக்கான ஆதாரங்கள் என்றால் அவர் எழுதியவை தமிழகத்தின் நவீன கால வரலாறு.

‘நான் கண்டதும் கேட்டதும்’, ‘புதியதும் பழையதும்’ என்ற தலைப்பிலான உவேசாவின் நூல்களில் இடம்பெற்ற கட்டுரைகள் பலவும் ‘சுதேசமித்திரன்’, ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’ ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை. தான் பெற்ற அறிவை, தானே அனுபவித்து மகிழ்ந்திராமல் அதைப் பொதுச் சமூகத்துக்குப் பகிர்ந்துகொடுக்கும் அறிவாளராகவே உவேசா இருந்திருக்கிறார். அவரது கட்டுரைகளின் மொழிநடையும் சுவையும் இன்றும்கூடத் தமிழ் ஆய்வுப்புலத்தாருக்குக் கைகூடிவரவில்லை என்பது வருத்தமானதுதான். எனினும், தமிழ் ஆய்வுப்புலத்துக்குள் மட்டுமே சிறைப்பட்டுவிடுபவர் அல்ல உவேசா. வரலாற்றுத் துறையினருக்கும்கூட உவேசாவிடம் பெறுவதற்கு நிறைய இருக்கின்றன.

ஏப்ரல் 28: உவேசா நினைவு தினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x