Published : 23 Mar 2019 09:54 AM
Last Updated : 23 Mar 2019 09:54 AM
புன்னகைக்கும் பிரபஞ்சம்
கபீர்
தமிழில்: செங்கதிர்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
விலை: ரூ.200. 9677778863
கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான கபீரின் கரங்கள் பட்டு கடவுள் ராமன் இப்படித்தான் பொன்னாகிறான்.
“விவேகம் சொல்கிறது நான் ஒன்றுமேயில்லை. நேசமோ நான் எல்லாம் என்கிறது. இந்த இரண்டு உணர்வுக்கும் நடுவில் என் வாழ்க்கை பாய்ந்துகொண்டிருக்கிறது” என்கிறார் அத்வைத குரு நிசர்கதத்த மகராஜ். “இரண்டு சட்டைப் பைகளில் ஒரு பையில் நானே அனைத்தும் என்று ஒரு தாளில் எழுதிவைத்துக்கொள். இன்னொரு பையில் நான் தூசியிலும் தூசி என்று எழுதிவைத்துக்கொள்” என்கிறது ஹதீஸ். இந்த இரண்டு மேற்கோள்களும் பக்திக் காலகட்டக் கவிதைகளை இணைக்கும் மைய உணர்வு, கருத்திழையை உணர்த்துகின்றன.
அபேத உணர்வு, நம்பிக்கையின் பரிபூரணச் சரணாகதி, பரவச உணர்வுடன் ததும்பி அலையும் கபீரை அவர் கவிதைகளில் பார்க்கிறோம். மனிதனுக்கும் இறைமைக்கும் நடுவே அலைந்து இறைமையைக் கைப்பற்றிவிட்ட மகிழ்ச்சியுடன், நித்தியத்துவத்தின் கோபுரத்தைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் கை உயர்த்திப் பாடியபடி நெருங்கும் பாடகனைக் காண்கிறோம்.
நெசவாளி, குடியானவர், கைவினைக் கலைஞர், அவைதீகர், பக்கிரி ஆகிய தன்மைகள் சேர்ந்து 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கபீரின் கவிதைகளை இன்றைக்கு நமது வாசகர்களுக்கு நெருக்கமாக்குகிறது. தொன்மையாகவே மென்மைக்காகவும் வேலைப்பாட்டுக்காகவும் புகழ்பெற்ற காசிப் பட்டு நெசவுத் தறியை கபீர் கவித்துவப் படிமமாக மாற்றியுள்ளார். “பூமியையும் ஆகாயத்தையும் பூட்டி, சூரியனையும் சந்திரனையும் சட்டங்களாக்கித் தறிக்குழியில் நெசவுசெய்யும் உண்மையான நெசவாளி கடவுள்தான்” என்கிறார் கபீர். தனது தனித்தறியையும் உடைத்தெறிந்துவிடுகிறார்.
நிறுவனரீதியான சமயம், சமய நெறிகளுக்கு வெளியே கடவுளை அழைத்துவந்து, ஆண்டாள் பாடிய அதே நாயக-நாயகி பாவத்தில் எந்த மனத்தடையும் இன்றி ராமனைச் சேரும் விரகபாவத்திலான கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ‘பேரானந்தமே நோக்கமெனில் உதறி எறிய வேண்டும் கூச்சத்தை’ என்று சொல்லும்போது கபீரின் ராமன் கிருஷ்ணனாகிறான். சீதையையும் ஒரு கவிதையில் பன்மையாக்கிவிடுகிறார்.
தொலைத்துத் தேடி சிறிய இடைவெளிகளில் கண்ணில் பட்டு பின்னர் மறையும் மாயமான் ராமனை, ஆண்டாளும் வள்ளலாரும் தேடிய பரம்பொருள் என்னும் அதே மாயமானைக் கவிதையின் விளக்கு கொண்டு கபீர் தேடியுள்ளார்; ஆனால், கவிதை இவர்களது லட்சியம் அல்ல. அவர்களது லட்சியம் மெய்ப்பொருள். வெளிச்சம்தான் அவர்களை இருள் பயத்திலிருந்து அகற்றியது; வெளிச்சம்தான் அவர்களை எரித்ததும்.
இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் அவதானிப்பு சரிதான். ஆழ்வார், நாயன்மார் பாடல்களுக்கும் சித்தர் பாடல்களுக்கும் இடையில் கபீரின் கவிதைகளை வைக்க முடியும். ஆழ்வார், நாயன்மார் பாடல்களின் பல்லுயிர்த் தன்மை, புழங்குபொருள் வளம், கவித்துவ உச்சங்களை கபீரின் கவிதைகளை வாசிக்கும்போது குறைவாகவும் அரிதாகவுமே உணர முடிகிறது. மொழியாக்கத்தின் விளைவாகக்கூட இருக்கலாம். சித்தர் பாடல்களின் கைப்பு, எதிர்மறை அம்சங்கள் கபீரிடம் இல்லை. இருட்டில் முக்குளிக்கும் திகைப்போ ஆழமோ பார்க்கக் கிடைக்கவில்லை. எடுத்துத் தூய்மைப்படுத்திய முத்துகளின் வெளிச்சத்தில் சுடர்விடும் கபீரின் முகத்தைப் பார்க்கிறோம்.
‘சிலதைக் கட்டி எழுப்புவான்/ வேறு பலதை உடைத்து நொறுக்குவான்’ என்று பிரக்ஞைபூர்வமாகவே பாடிச் சென்றிருக்கும் கபீரிடம் குழந்தையும் ஞானியும் இருக்கிறார்கள். அதுவே கபீரின் கவித்துவம் குறைந்த கவிதைகளையும் அபங்கமாக்குகிறது.
இந்தியா போன்ற பன்மைத்துவம் கொண்ட நிலத்தின் விரிந்த உயர்ந்த விழுமியங்களை இன்னமும் பிரிதிநிதித்துவம் செய்கிற ஆன்மிக, மெய்ஞான ஆகிருதிகளில் ஒருவர் கபீர்தாசர். அவருடைய பாடல்களை, நவீனத் தமிழ்க் கவிதைகளின் செழுமையை உள்வாங்கி செங்கதிர் மொழிபெயர்த்திருப்பதை வாசிப்பின் லயம் உணர்த்துகிறது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு:
sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT