Published : 03 Mar 2019 09:33 AM
Last Updated : 03 Mar 2019 09:33 AM
1977 மத்தியில் மதுரை பெரியநாயகி அச்சகம் குமாரசாமியை ஆசிரியராகக் கொண்டு ‘வைகை’ என்ற சிற்றிதழை நடத்துவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. என்.சிவராமனும் நானும் அவரோடு இணைந்து இதழை உருவாக்கினோம். அப்போது வெங்கட் சாமிநாதனுக்கு இதழ் பற்றி எழுதியதோடு கட்டுரையும் கேட்டிருந்தோம். இதற்கிடையே சாமிநாதனின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைக்கதைப் புத்தகத்தை ‘மணி பதிப்பகம்’ கொண்டுவந்திருந்தது. அதன் ஒரு பிரதியை எனக்கு அனுப்பியிருந்த சாமிநாதன், வாசித்துவிட்டு அபிப்ராயம் தெரிவிக்கும்படி கேட்டிருந்தார். நானும் படித்துவிட்டு அவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ‘வைகை’ இதழ் வெளிவர இருப்பது பற்றி உத்வேகமளிக்கும் வகையில் பதில் எழுதிய சாமிநாதன், அதில் நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் வற்புறுத்தியிருந்தார். நான் சம்பந்தப்பட்டிருக்கும் இதழில், அதுவும் முதல் இதழிலேயே எழுத வேண்டாமென்று நினைக்கிறேன் என்பதாகப் பதில் அளித்திருந்தேன்.
சாமிநாதன் முதல் இதழுக்கான பங்களிப்பாக ‘அக்ரஹாரத்தில் கழுதை’ நூல் குறித்த மூன்று கடிதங்களை அனுப்பியிருந்தார். தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, இவர்களோடு என்னுடைய கடிதமும் இருந்தது. 1977 ஆகஸ்ட் மாதம் ‘வைகை’ முதல் இதழ் வெளிவந்தது. ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றிய மூன்று பார்வைகளாக அம்மூன்று கடிதங்களும் இடம்பெற்றன. “முதல் இதழிலேயே உங்கள் எழுத்தை வரச் செய்துவிட்டேன், பார்த்தீர்களா?” என்று கடிதம் எழுதினார். ஆனால், ‘வைகை’ இதழின் தொடக்க கட்டத்திலேயே அவருடன் பிணக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் அனுப்பிய ஒரு கட்டுரையை நாங்கள் பிரசுரத்துக்கு ஏற்காததால் இது நிகழ்ந்தது.
பின்னர், ‘யாத்ரா’வில் சாமிநாதன் எழுதிய கட்டுரையொன்றில் மதுரையில் பிரமிள் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அந்த நண்பரின் குழந்தை - பிரமிளின் விசித்திர நடத்தை காரணமாக இருக்கலாம் - அவரைக் கிறுக்கு என்று கூறிவிட்டதை வெளிப்படுத்தி, ‘குழந்தையின் வாக்கு தெய்வ வாக்குதானே’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்தக் கோணலான வெளிப்பாட்டுக்கு சுந்தர ராமசாமியும் நானும் எதிர்வினையாற்றியிருந்தோம். இது எங்களுக்கிடையேயான முதல் மன விலகலுக்குக் காரணமாக அமைந்தது. பின்னர், அதே காலகட்டத்தில் ‘கொல்லிப்பாவை’ 6-ம் இதழில் 1978-ல் வெளியான சாமிநாதனின் ‘இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’ கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினைக் கட்டுரையும் இடைவெளியை அதிகரித்தது. ‘சமூகவியல் கலாச்சார பிரச்சனைகள் மீதான உணர்வுமயப் பார்வையின் விபரீதங்கள்’ என்பது என் கட்டுரைத் தலைப்பு. லட்சியப்படுத்தினால் கோபுர உச்சி; கீழ்நிலைப்படுத்தினால் பாதாளச் சாக்கடை என்பதாக அவருடைய அணுகுமுறை அமைந்திருப்பதாக விமர்சித்திருந்தேன்.
எனினும், அவர் மீதான ஈர்ப்பும் மதிப்பும் என்றும் குறைந்ததில்லை. அவருடைய தார்மீக ஆவேசத்தையும் கலை நம்பிக்கையையும் லட்சியப் பிடிமானங்களையும் ஆதர்சமாகக் கொண்டுதான் என் பாதை அமைந்திருந்தது.
அவருடைய சிந்தனையோட்டங்களில் நாம் முரண்படலாம். ஆனால், அவருடைய குரலின் தார்மீகமும் நேர்மையும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. எவ்வித சமரசங்களுக்கும் இடமளிக்காத எழுத்தும் வாழ்வும் அவருடையது. மிகவும் கறாரான பார்வை கொண்டவர். சகல கற்பிதங்களையும் தாட்சண்யமின்றித் தகர்ப்பவர். அவருடைய தீவிரமான இயக்கம், ஒரு காலகட்டக் கலை இலக்கியப் போக்கை வடிவமைத்தது. அவரால் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் தமிழ்ச் சூழலில் அதிக சலனங்களை ஏற்படுத்தின.
இலக்கியச் சூழலின் சில நடவடிக்கைகளையும் பொய் முகங்களையும் சகித்துக்கொள்ள முடியாத கடும்கோபத்தில் சாமிநாதனிடமிருந்து தெறிக்கும் வார்த்தைகள் அவருடைய அக்கறைகளின் தார்மீகத்தை மழுங்கடித்து தனிநபர் தாக்குதல்கள் என ஒதுக்கித்தள்ளுவதற்குத் தோதாக அமைந்தன. 1973-ல் வெளிவந்த அவருடைய முதல் புத்தகமான ‘இலக்கிய ஊழல்கள்’ நூலிலிருந்தே அவருடைய இக்குணம் விடாது தொடர்ந்தது. இப்புத்தகம் பற்றி சுந்தர ராமசாமியும் பிரமிளும் நடத்திய ஓர் உரையாடலில் சு.ரா., “இந்த நூலில் காந்தி போன்ற ஒருவரின் தார்மீகக் குரல் இருக்கிறது. பொய்களையும் பொதுப் பிரச்சனைகளின் அவலத்தையும் கண்டு பொறுக்க மாட்டாதவரின் குரல் இது” என்று கூறும் அதேசமயம், “இந்த நூலில் அங்கங்கே ‘அயோக்கிய சிகாமணி’, ‘விசிலடிச்சான் குஞ்சு’ என வரும் பிரயோகங்கள் இந்த முதிர்ச்சியுடன் இணங்கி வரவில்லை” என்றும் கூறியிருப்பார்.
சாமிநாதனுடனான இரண்டாவது நேர்ச்சந்திப்பு 1983 இறுதியில், நான் சென்னை குடிபெயர்ந்த சில மாதங்களில் அமைந்தது. சாமிநாதனுடனான என் உறவு கடைசி வரை இசைவும் பிணக்குமாகவே தொடர்ந்திருக்கிறது. ஆனால், சந்திக்க வாய்க்கும் சந்தர்ப்பத்தின்போது ஏதோ ஒரு தருணத்தில் சட்டென எல்லாவற்றையும் உதறிவிட்டுத் தோள்மீது கை போட்டு உரையாட முடிகிற மனம் கொண்டவர். கருத்து முரண்களைக் கடந்து கலை நம்பிக்கையில் பிணைப்புறும் சுபாவம் அவருடையது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், நான் சென்னை வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் உரிமையாளரும் நண்பரும் சிறுபத்திரிகை இயக்கத்தில் நெருக்கமான பிணைப்பு கொண்டிருந்தவரும் எழுத்தாளருமான கி.அ.சச்சிதானந்தம், “வாய்யா, வெங்கட் சாமிநாதன் வந்திருக்காரு. போய் பாத்திட்டு வரலாம்” என்றார். நான் தயங்கினேன். “அட வாய்யா, நம்ம சாமிநாதன்தானே” என்று வற்புறுத்தினார். திருவல்லிக்கேணியில் நவீன நாடகத்தில் ஈடுபாடும் செயல்பாடும் கொண்ட கோபாலகிருஷ்ணன் வீட்டில் சாமிநாதன் தங்கியிருந்தார். நாங்கள் போனபோது வீட்டின் முன்னான சிறு வராந்தாவில் கோபாலகிருஷ்ணனின் குழந்தையோடு சாமிநாதன் இருந்தார். சச்சியைப் பார்த்ததும் “வாய்யா” என்றார். என்னைக் கவனிக்காததுபோல சச்சியிடம் பேச ஆரம்பித்தார். கோபாலகிருஷ்ணனும் வந்து கலந்துகொண்டார். தமிழ் நாடகச் சூழல் பற்றியதாகப் பேச்சு அமைந்தது. பேச்சின் இடையில் சட்டென என்னைப் பார்த்து, “இதச் சொன்னா இந்த ஆளு கோவிச்சுக்குவான்யா” என்றார். அந்த நொடியில் சகஜம் திரும்பியது.
சிறிது நேரம் கழித்து, “கோபாலகிருஷ்ணன் ரொம்ப நல்ல மனுஷன்யா. சென்னை வரும்போது எங்ககூட தங்கணும்னு ஆசையா கூப்பிட்டாரு. ஆனா, சின்ன வீடு. குழந்தைய வச்சுக்கிட்டு அவங்களே சிரமப்படுறாங்க. இதுல நான் வேற அவங்களுக்கு இடைஞ்சலா... உங்களோட வரட்டுமா?” என்று கேட்டார். கோபாலகிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு எங்களோடு வந்தார். அன்று இரவு கடற்கரைக்குப் போனோம். இந்துஸ்தானி சங்கீத மேதைகள் குறித்து மிகுந்த லயிப்போடு பேசிக்கொண்டிருந்தார். அவர் பணி ஓய்வுபெற்று, 1990-களின் தொடக்கத்தில் டில்லியிலிருந்து சென்னைக்குக் குடிவந்த பிறகு அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அருமையான பல தருணங்கள் கூடிவந்தன. என் கலை நம்பிக்கைக்கான காந்தம் அவர்!
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT