Published : 09 Feb 2019 08:56 AM
Last Updated : 09 Feb 2019 08:56 AM
ஆஸ்திரேலியாவில் பதினைந்து வயதுப் பெண் ஒருத்தியின் பாட்டி திடீரென்று இறந்துவிடுகிறாள். அன்டார்டிகாவுக்குத் தொழில் நிமித்தமாகச் சென்றிருக்கும் அம்மா, திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும். “என் மரணத்துக்கு முன் திறக்கக் கூடாது” என்று கறுப்பு மையில் எழுதப்பட்டிருந்த உறையில் உயில் இருக்கலாம் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம். மாறாக, தனித்து இருக்கும் அந்தப் பெண்ணின் பாட்டி வேறு யாராகவோ இருந்தாள் என்ற விவரம் சூழலை மர்மமாக்குகிறது. ‘போலி அடையாளம்’ நாவலின் இந்தப் பின்னணியில் பல அம்சங்களை சுவாரஸ்யமாக இழையோட விட்டிருக்கிறார் இதன் மூல ஆசிரியரான ஆஸ்திரேலியாவின் ஹேஸல் எட்வர்ட்ஸ். குழந்தை இலக்கியம் உட்பட 200-க்கும் மேலான இவருடைய படைப்புகளில் பெரும்பான்மையானவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழில் ஒரு படைப்பு வெளிவருவது இதுவே முதல் முறை.
மனதில் சஞ்சலத்தையும் திகிலையும் ஏற்படுத்தும் மர்மமான சூழலைப் பின்னணியாகக் கொண்ட ‘காதிக்’ (GOTHIC) இலக்கியம் என்ற ஒரு வகை 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாட்டில் தோன்றியது. பிறகு, இதே வகையில் தோன்றிய ‘ரெபெக்கா’, ‘டிராகுலா’ போன்ற புதினங்கள் திரைப்படங்களாகவும் பிரபலமடைந்தன. தொழில்நுட்பரீதியில் சமகாலத்தில் தோன்றியுள்ள பெரும் மாற்றங்களை உள்ளடக்கிய ‘டெக்னோ-காதிக்’ (Techno GOTHIC) என்ற நவீன இலக்கிய வகையிலான இந்த நாவல் இன்றைய வாழ்வின் பல சாத்தியக்கூறுகளை அழகாகச் சித்தரிக்கிறது.
போர்க் காலத்தில் அரசியல் காரணங்களுக்காக வேறு நாட்டுக்குக் குடியேறி, சில நிர்பந்தங்களால் வேறு புதிய அடையாளத்துடன் வாழ்ந்துவந்த பாட்டியின் மறைவுக்குப் பிறகு, தனித்து விடப்பட்ட பதின்ம வயதுப் பெண் ஜோயி தன்னுடைய நிஜ அடையாளத்தைத் தேடிப்போகிறாள். கணினித் துறையில் தேர்ச்சி பெற்ற அவளுடைய நண்பன் ல்யூக் அவளுக்கு உதவுகிறான். ‘இறுதி நினைவுகள்’ என்ற தளத்தில் இறந்தவர் எழுதிய மின்னஞ்சல்கள் சேமித்துவைக்கப்பட்டிருக்கின்றன, அதில் தேடிப்பார்க்கலாம் என்று தெரிவிக்கிறான். ஜோயிக்குப் பெரும் வியப்பு: “செல்லப் பிராணிகளைக் குறித்த இறுதி நினைவுகள்கூட இருந்தன! எத்தனை நாய்கள் மின்னஞ்சலைப் படித்தன!”
ஒருமுறை இந்தத் தளத்தில் மின்னஞ்சல்கள் மறைந்துபோகவே, ல்யூக் அந்த நிறுவனத்திடம் விசாரிக்கிறான். “உங்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் என்று அவர்கள் நினைப்பதில்லை. நீங்கள் ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை.” கணினி உலகத்தின் வரையறைகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் யதார்த்தம் இந்த நாவல் முழுவதும் புதிரோடும் லேசான நகைச்சுவையோடும் தென்படுகிறது.
இந்தத் தேடலில், வாழ்க்கையின் வேறு சில முரண்நகை அம்சங்களும் ஜோயியின் கவனத்துக்குத் தப்புவதில்லை. சிற்றாலயத்தில் “மறுபிறவிக்கு அஞ்சலாக அனுப்பப்படுவதைப் போல” இருந்த அஸ்திக் கலசங்கள்; “மலர்களை முகர்ந்தோ, தொட்டோ பார்க்க முடியாத, இறந்துபோனவர்களுக்காக எல்லோரும் மலர்களைக் கொண்டுவருவது”… இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
ஆராய்ச்சிப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட மீனாட்சி ஹரிஹரன் சமகாலத்திய ஆஸ்திரேலிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதும், க்ரியா பதிப்பகம் அதை வெளியிட்டிருப்பதும் முக்கியமான நிகழ்வு. நாவலின் தொனி சீராக இருப்பதுடன் ஆஸ்திரேலிய சமூகத்தின் சித்தரிப்பு அதனுடைய தனித்தன்மையுடன் இயல்பாக வெளிப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மற்றுமொரு நல்வரவு.
- வெ.ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்,
இருமுறை செவாலியெ விருதுபெற்றவர்.
தொடர்புக்கு: ramcamus@hotmail.com
போலி அடையாளம்
ஹேஸல் எட்வர்ட்ஸ்
தமிழில்: மீனாட்சி ஹரிஹரன்
க்ரியா வெளியீடு
திருவான்மியூர், சென்னை-41.
7299905950
விலை: ரூ. 195
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT