Last Updated : 10 Feb, 2019 08:49 AM

 

Published : 10 Feb 2019 08:49 AM
Last Updated : 10 Feb 2019 08:49 AM

கோபிகிருஷ்ணன்: புதிர்மொழி ஞானம்

கோபிகிருஷ்ணன் எழுத்துகளின் முழுமையான தொகுப்பு, 2012-ல் ‘கோபிகிருஷ்ணன் படைப்புகள்’ என்ற தலைப்பில் ‘நற்றிணை’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதன் தொகுப்பாளராக நான் பணியாற்றினேன். இதன்மூலம் அவருடைய எல்லா எழுத்துகளையும் ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. கோபிகிருஷ்ணனின் படைப்பாக்க காலம் என்பது 1983 இறுதியிலிருந்து அவருடைய மரணம் வரையான (2003) இருபது ஆண்டுகள். அவருடைய எழுத்துகள் சிறுகதைகள், குறுநாவல்கள், பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல் என ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அத்தொகுப்பு வெளியானது. நவீனத் தமிழிலக்கியத்தில் கோபிகிருஷ்ணனின் முக்கியத்துவம் என்பது மனப்பிறழ்வு மனிதர்களின் குரலையும் அவர்களுடைய பித்துமொழியையும் அபூர்வ நடத்தைகளையும் அபாரமாகப் பதிவுசெய்ததில்தான் மகத்துவம் பெற்றிருக்கிறது. ஒரு படைப்பாளி, படைப்பாக்கத்தின்போது எய்தும் பித்துநிலையில் வெளிப்படும் பித்துமொழி என்பது வேறு; மனச் சிதைவுக்குள்ளாகிய மனிதர்களின் வெளிப்பாட்டு மொழி தன்னியல்பாகக் கொண்டிருக்கும் பித்துமொழி என்பது வேறு. இவ்விரு தன்மைகளையும் கோபியின் எழுத்துகளில் நாம் சாதாரணமாகக் காணலாம்.

86 சிறுகதைகளும் 4 குறுநாவல்களும் அடங்கியது அவருடைய படைப்புலகம். அவருடைய படைப்பாக்க காலமானது, மூன்று கட்டங்களாக அமைந்திருப்பதை அனுமாணிக்க முடிகிறது. முதலாவது, அவருடைய எழுத்துப் பிரவேசத்தின் தொடக்க ஆண்டுகள். இக்காலகட்டத்தில் அவர் ஒரு கீழ்நடுத்தர வர்க்க ஒண்டுக் குடித்தன குடும்பஸ்தனாகவும், சமூக மனிதனாகவும், தான் அன்றாடம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் சங்கடங்களையும், தன்னைச் சுற்றி நிகழும் சக மனிதர்களின் நடத்தைகளையும் மனோபாவங்களையும் சமூக நடவடிக்கைகளையும் ஓர் எள்ளலுடன் அவதானிப்பவராகவும் தென்படுகிறார். அவருடைய ஆரம்ப காலகட்டக் கதைகளில், ‘ஒவ்வாத உணர்வுகள்’, காணி நிலம் வேண்டும்’, ‘மக்கள் தினசரி – ஒரு தேசிய நாளேடு’, ‘பீடி’, ‘மிகவும் பச்சையான வாழ்க்கை’ போன்றவை முக்கியமானவை. இக்காலகட்டக் கதைகளை அடிப்படையாகக் கொண்டுதான் அசோகமித்திரன், கோபிகிருஷ்ணனின் எழுத்துகளை இவ்வாறு மதிப்பிடுகிறார்: “கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை – இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதின் நிதர்சனங்கள். ஒரு சாதாரண, விசேஷ சமூக முக்கியத்துவம் பெறாத மனிதனுக்கு இச்சூழ்நிலையில் ஏற்படக்கூடியது அலுப்புதான். உறவு, அன்பு, பொறுப்பு, நிதானம், பிறருக்காக வழிவிடும் தியாக மனப்பான்மை - இத்துடன் கூடவே ஒரு அலுப்பும் புகைமூட்டமாக இருக்கும்... இந்த அலுப்பை மனதார ஒப்புக்கொண்டு எழுத்தில் பதிவு செய்வதுதான் கோபிகிருஷ்ணனின் படைப்புகள். இந்த அலுப்புணர்ச்சியோடு வரிக்கு வரி இழைந்திருக்கும் நகைச்சுவை அவர் அலுப்பினால் வீழ்ச்சியுறாத திடமனிதன் என்பதையே காட்டுகிறது.”

அவருடைய இரண்டாம் கட்ட இடைக்காலப் படைப்புகள்தான் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கான கோபிகிருஷ்ணனின் தனித்துவமிக்க கொடை. இக்காலகட்டத்தில் அவருடைய எழுத்துகள் மனப்பிறழ்வு மனிதர்களின் குரல்களையும் நடத்தைகளையும் பேரன்பின் கரிசனத்தோடு பதிவுசெய்தன. மனச்சிதைவுகளை இவர் தன் படைப்புகளாக உருவாக்கியிருப்பது ஒருவகை எனில், மனச்சிதைவாளர்களின் குரல்களை அவர்களுடைய வெளிப்பாடுகளாக ஆவணப்படுத்தியிருப்பது இன்னொரு வகை. இவ்விரு வகையிலுமான இவருடைய எழுத்துலகம் மிகவும் விசேஷமானது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் மனப்பிறழ்வுக் கதாபாத்திரங்கள் சார்ந்த படைப்புகள் ஒரு சில வந்திருக்கின்றன. இவ்வகையில் க.நா.சு.வின் ‘பித்தப் பூ’, எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவல்கள் குறிப்பிடத்தகுந்தன. பாதசாரியின் ‘காசி’ சிறுகதை இத்தன்மையிலான மிகச் சிறந்த படைப்பு. எனினும், நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கோபியின் இவ்வகை எழுத்துகள் ஒரு தனித்துவமான பிராந்தியம். தனிப்பெரும் கொடை.

“மனநோய் என்பது பிறிதொரு மனநிலை. சிகிச்சை தேவையென்றாலும் அது துர்பாக்கியமோ துரதிர்ஷ்டமோ அல்ல. நோய்க்கூறுகளை அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்ளும்போது அதுவே ஒரு வரப்பிரசாதமாகவும் அமைய வாய்ப்புண்டு” என்கிறார் கோபிகிருஷ்ணன். கலை இலக்கியத் தளங்களில் இப்படியாக அமைத்துக்கொண்ட பல மேதைகள் உலகெங்கும் இருக்கிறார்கள். கோபியும் அப்படியான ஒருவரே. இளமையிலிருந்தே தனக்கேற்பட்டிருந்த மனநோய்க் கூறுகளைத் தனதான படைப்புலகை சிருஷ்டிப்பதற்குச் சாதகமாக ஆக்கிக்கொண்ட ஓர் அபூர்வம் அவர். அதேசமயம், தன்னுடைய மனநலனைப் பேணுவதற்காகத் தொடந்து வாழ்நாள் முழுதும் மாத்திரைகள் எடுத்துவந்தார். எனினும், ஓரிரு முறைக்கும் மேலாக, தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் கணநேர உந்துதலுக்கு ஆட்பட்டிருக்கிறார். அவருடைய கண்களுக்கு யேசு கிறிஸ்து அவ்வப்போது தென்பட்டிருக்கிறார். அன்றாடங்களைக் கடப்பதில் சிறு பயமும் அவரிடம் இருந்துகொண்டிருந்தது. தன் சட்டை மேல்பாக்கெட்டில் பணம் வைத்திருக்கும்போது, அது தவறிவிடாமலிருக்க ஊக்கால் குத்தி பாக்கெட்டை மூடியிருப்பார். அவரை வாட்டிக்கொண்டிருந்த மன அழுத்தங்களிலிருந்து விடுவிக்குமொரு நல்வழிப் பாதையாக அவருக்கு எழுத்து அமைந்தது.

கோபியின் எழுத்துகள் மனநலம் குன்றிய மனிதர்களையும் அவர்களுடைய நடத்தைகளையும் மொழியையும் நமக்கு அறிமுகம் செய்வதோடு ஓர் அபூர்வமான உறவையும் அந்த உலகோடு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இத்தன்மையில், ‘முடியாத சமன்’, ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை’, ‘வார்த்தை உறவு’, ‘பிறழ்வு – விடிவு’, ‘உறங்காத உணர்வுகள்’ ‘டேபிள் டென்னிஸ்’ போன்ற பல குறிப்பிடத்தகுந்த கதைகளை அவர் உருவாக்கியிருக்கிறார். அவருடைய இத்தன்மையான படைப்புகளில் மிகச் சிறந்தது, ‘டேபிள் டென்னிஸ்’ என்ற குறுநாவல். காதலின் மேன்மையையும் காமக் கிளர்ச்சியின் மகத்துவத்தையும் பேசும் தமிழின் சிறந்த நவீனப் படைப்பு. பேரின்பப் பரவசக் களியாட்டப் புனைவு.

இவருடைய மூன்றாம் கட்டச் சிறுகதைகளில் அநேகம், அன்றாடங்களின் பொக்கான பதிவுகளாக வீர்யமிழந்தும் சாரமின்றியும் காணப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும்போது, எழுதுவதென்பது அவருடைய மீட்சிக்கான ஒரு வழமையாகவும் தேவையாகவும் அமைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. “எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் தோன்றுவதில்லை. முழுமையான பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது” என்கிறார் கோபி.

நாம் இவருடைய எழுத்துலகின் நதியோட்டத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதே சட்டென ஒரு சுழலுக்குள் சிக்குண்டு அடியாழத்துக்கு இழுத்துச் செல்லப்படும் அனுபவத்துக்கு ஆளாகிறோம். சமயங்களில் காற்று புகா இருட்குகைக்குள் அகப்பட்டுக்கொண்டு மூச்சு திணறுவதுபோலான ஓர் அனுபவ வெளிக்குள் இவருடைய எழுத்துகள் நம்மை இட்டுச் செல்கின்றன. இவருடைய படைப்புகளின் வாசிப்பினூடே நாம் சுவாதீனமாகத்தான் இருக்கிறோமா என்ற எண்ணம் அவ்வப்போது மேலெழுந்து நம்மைத் திடுக்குற வைப்பதை நம்மால் தவிர்க்க முடியாது!

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு:

 kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x