Published : 24 Feb 2019 01:00 PM
Last Updated : 24 Feb 2019 01:00 PM
வாழ்க்கைதான் மிக மேலான மகோன்னதமான சாதனம். அதுவே முழுமையான, பிரதானமான சாதனம். இலக்கியம், கலை போன்ற பிற சாதனங்கள் அனைத்தும் அந்த முழுமையின் அங்கங்கள். அந்த முழுமையோடு மனிதர்கள் ஆழ்ந்த உறவுகொண்டு தம்மை மேம்படுத்திக்கொள்வதற்கும் செழுமைப்படுத்திக்கொள்வதற்குமான அங்கங்கள். எழுத்து போன்ற ஓர் அங்கத்தில் ஒரு படைப்பாளியின் வெளிப்பாடு எத்தன்மையதாக இருந்தாலும் வாழ்க்கை என்ற முழுமையில், அந்த வெளிப்பாடு எவ்வாறு அங்கம் வகிக்கிறது, இசைகிறது என்பதே முக்கியம் என்று கருதியவர் வெங்கட் சாமிநாதன்.
கலை இலக்கியங்களைத் தனித்த துறைகளாக அல்லாமல் வாழ்க்கை எனும் மைய நீரோட்டத்தில் வந்திணையும் கிளை நதிகளாகப் பார்த்தார். அதன் காரணமாகவே, நவீன ஓவியம், நாட்டார் கலைகள், திரைப்படம், அரங்கக் கலை, இலக்கியம் அனைத்தோடும் நாம் கொள்ள வேண்டிய உறவின் அவசியத்தை வலியுறுத்திய முதல் குரல் இவரிடமிருந்து எழுந்தது. அனைத்து கலை அனுபவங்களின் வழியாகவும் வாசகன் பெறுமதியான அனுபவங்களைப் பெறுவதற்கான களமாகச் சிறுபத்திரிகை இயக்கம் அமைய வேண்டும் என்ற அடிப்படையை வலியுறுத்திய தீர்க்கமான குரல் இவருடையது.
சாமிநாதனின் தனித்து ஒலித்த புதுக் குரல் பரந்து விரிந்தது. ஆவேசமும் தார்மீகமும் முயங்கியது. கலைத் துறைகளுக்கும் சிந்தனைத் துறைகளுக்குமிடையே அடியோட்டமாக இயங்கும் வாழ்வியக்கத்தின் பூரணத்துவம் பற்றிய கவனக் குவிப்பாக அமைந்த அவருடைய விமர்சன இயக்கம் எனக்குப் பெரும் உத்வேகமளித்தது. என்னுடைய கலை இலக்கியப் பார்வைகளின் உருவாக்கத்திலும் சிறுபத்திரிகைச் செயல் மனோபாவத்திலும் அவரது பங்கு கணிசமானது. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் என் வாழ்வின் திசைகளைத் தீர்மானித்தன. என் இளம் வயதிலேயே அவரோடு பழகவும் நட்புகொள்ளவும் வாய்த்தது என் வாழ்வின் பேறுகளில் ஒன்று.
1975 இறுதியில், என்னுடைய 23-வது வயதில், சாமிநாதனைச் சந்தித்தேன் (அப்போது அவருக்கு வயது 42). அதற்கு முன்னரே அவரோடு கடிதத் தொடர்பு இருந்தது. டெல்லியில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் சில நாட்கள் விடுமுறையில் தமிழகம் வந்து நண்பர்களைச் சந்திப்பதையும் சொந்த ஊரான கும்பகோணம் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியான ஒரு வருகையில்தான் அவருடைய மதுரை விஜயம் அமைந்தது. அன்று சாமிநாதனின் எழுத்துகள் மீது பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவருடைய எழுத்துகளைப் பிரசுரிப்பதெற்கென்றே ‘யாத்ரா’ இதழையும் ‘மணி பதிப்பக’த்தையும் தொடங்கிய இளைஞர்களான மணி, ஜெயபாலன் இருவரையும் ராஜபாளையத்தில் சந்தித்துவிட்டு அவர்களோடு மதுரை வந்தார். டவுன் ஹால் ரோடில் உள்ள ராம்சன் லாட்ஜில் தங்கினார். அவரைத் தங்கவைத்துவிட்டு அவர்கள் இருவரும் தங்கள் ஊர் சென்றுவிட்டார்கள், இரண்டு நாட்களும் நான் சாமிநாதனுடனேயே இருந்தேன்.
1975-ன் தொடக்கத்தில் சுந்தர ராமசாமியுடனும் அதே ஆண்டின் இறுதியில் சாமிநாதனைச் சந்திப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாக பிரமிளுடனும் முதல் சந்திப்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. சுந்தர ராமசாமியின் நிதானமான அணுகுமுறையும் பிசிறற்ற குண விசேஷமும், என்னதான் அன்னியோன்யம் கூடிவந்தாலும், ஒரு மரியாதைக்குரிய இடைவெளியை உருவாக்கக்கூடியது. பிரமிளின் சிடுக்குகளும் மேதமை மிடுக்கும் ஒரு பாதுகாப்பான இடைவெளியை உண்டாக்குவது. மாறாக, மிகவும் குதூகலமான தோழமை உணர்வை ஏற்படுத்துபவராக சாமிநாதன் இருந்தார். சக கல்லூரித் தோழனைச் சந்திப்பது போன்ற லகுவான தன்மை கொண்டிருந்தார். அவரைப் பார்த்த முதல் தோற்றத்திலேயே ஓர் இணக்கம் உருவாகிவிட்டது. அக்காலத்திய நடுத்தர வயதுக்காரர்கள்போல கழுத்தில் சட்டைக் காலருக்கு மேலாகக் கைக்குட்டையைச் சுருட்டிவைத்திருந்தார். அநாயாசமாகப் பீடி புகைத்தார். அறையில் கைலியோடு பீடி குடித்தபடி, எவ்வித தோரணைகளுமின்றி இருந்தார். பேச்சில் தீவிரமும் ஆவேசமும் மட்டுமல்ல, கிண்டலும் கேலியும் நையாண்டியும் எகத்தாளமும் சரளமாக வெளிப்பட்டன. கலை இலக்கியப் பார்வைகளில் கறார்த் தன்மையும் கலந்துரையாடலில் கலகலப்பும் கலந்துறவாடின.
சாமிநாதனின் வருகைக்குச் சில நாட்களுக்கு முன்புதான் பிரமிள் மதுரை வந்திருந்து என்னுடைய ஏற்பாட்டில் குமாரசாமியின் பெரியநாயகி அச்சகத்தின் மாடி அறையில் தங்கியிருந்தார். அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் மதுரையில் இருக்க நேர்ந்தது தற்செயல்தான். ஆனால், கடும் பிணக்கில் இருந்த அவர்கள் மீண்டும் தோழமைகொள்ள அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. மறுநாள் ஞாயிறு சாமிநாதனை வீட்டுக்கு அழைத்துப்போனேன். மதியம் எங்கள் வீட்டில் அம்மாவின் அருமையான ஆட்டுக்கறி சமையல். பிரமிளையும் கூப்பிட்டிருந்தேன். முரண்டாமல் வந்தாலும்கூட இருவரும் நேரடியாகப் பேசிக்கொள்ளவில்லை. சாமிநாதன் ரசித்துச் சாப்பிட்டார். அப்பாவிடம் கொஞ்ச நேரம் பேசினார். நெருக்கமான ஒரு சொந்தக்காரரைப் போல் சுபாவமாக இருந்தார். லாட்ஜுக்குத் திரும்பியபோது என் வேண்டுகோளைத் தட்டாமல் பிரமிளும் உடன் வந்தார். மாலையில் நண்பர்கள் சிலர் வந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. இரவு உணவுக்குப் பின் லாட்ஜ் அறையில் சாமிநாதனும் பிரமிளும் நானும் எஞ்சினோம். அவர்கள் பேசிக்கொள்ளாததால் அறையில் புழுக்கம் நிலவியது. சாமிநாதனும் நானும் பின்னிரவுக் காட்சிக்குப் படத்துக்குப் போனோம். மறுநாள் காலை நான் தாமதமாக எழுந்தபோது, அவர்கள் இருவரும் கட்டிலில் அமர்ந்தபடி வெகு சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த இரு நாட்களிலும் அவருடைய பேச்சு அன்றைய சிறுபத்திரிகைச் சூழல் பற்றியதாகவே இருந்தது. இலக்கியச் சூழலில் படிந்திருக்கும் மாசுகள் பற்றிய ஆதங்கமாகவே இருந்தது. சூழலின் ஆரோக்கியம் பற்றி வெகுவாக விசனப்பட்டார். நாம் புழங்க இருக்கும் அறை தூசும் தும்புமாகக் குப்பைகள் மண்டிக் கிடக்கும்போது அவற்றைச் சுத்தப்படுத்துவதே முதல் பணியாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கமே பிரதானமாக வெளிப்பட்டது. அவரிடமிருந்து வெளிப்பட்ட தார்மீக ஆவேசம் என்னுள் பரவிக்கொண்டிருந்தது. சிறுபத்திரிகை இயக்க மனோபாவம் என்னுள் திடப்பட்டுக்கொண்டிருந்தது. வாழ்வுக்கான கனவு வசப்பட்டதுபோலிருந்தது. அவர் மதுரையை விட்டுச் சென்றபோது நான் புதிய உத்வேகம் பெற்றிருந்தேன். கல்லூரி நாட்களில் ஜேம்ஸ் பாண்ட் படத்தை இரவுக் காட்சி பார்த்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பும்போது மனமும் உடலும் கொண்டிருக்கும் முறுக்கேறிய வேகத்தைப் போன்றிருந்தது. ஆனால், இது பட அனுபவத்தைப் போல வெறும் அந்நேரத்திய பரவச எழுச்சியாக இல்லாமல் உள்ளுறைந்த உத்வேகமாக நிலைத்து நீடித்து என்னை இயக்கத் தொடங்கியது!
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT