Published : 03 Feb 2019 09:40 AM
Last Updated : 03 Feb 2019 09:40 AM
கடும் நெருக்கடிகளும் துயர்களும் மன அழுத்தங்களும் தொடர்ந்து கோபிகிருஷ்ணனின் வாழ்வைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன. வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்திலாவது அவருக்குக் கொஞ்சம் ஆசுவாசம் தந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எனினும், வாழ்க்கை காட்டிய குரூர முகத்துக்கு எதிராக அவர் தன் மென்மையான சுபாவத்தைப் பேணிவந்தது மிகவும் அபூர்வமான விஷயம்.
1985, டிசம்பர் - 31 இரவு கோபி, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் வைக்கப்பட்டிருந்தார். அவருடைய மனைவி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் நினைவின்றி இருந்தார். கடுமையான பணக் கஷ்டத்தின் காரணமாக எடுத்த முடிவு. போலீஸோ அதைக் கொலை முயற்சியாகப் பார்த்தது. அவருடைய மனைவி நினைவு பெற்று நடந்ததைச் சொன்னால்தான் விமோசனம் என்ற நிலை.
அவருடைய மனைவியோ மூன்று நாட்கள் வரை நினைவின்றி இருந்தார். 31 இரவில் நான் கோபியைக் காவல்நிலையம் சென்று பார்த்தேன். அதன் பின்புற வெளியில் நின்று பேசினோம். அப்போது உள்ளே யாரோ அடிகளின் வலி தாங்காமல் கதறும் சத்தம் கேட்டது. கோபியின் முகம் இருண்டது. “என்ன எதுவும் பண்ணலை. உண்மையச் சொல்லிடுனு மட்டும் மிரட்டினாங்க. ஆனா, இப்படி நடக்கும்போது, இதையெல்லாம் பார்க்கும்போது, பதறுது” என்றார். அவரிடமிருந்து பிரிந்து, கோபியின் மனைவி நிலை பற்றி அறிய ராயப்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் ஒரு மரத்தடித் திண்டில் அமர்ந்திருந்தேன். அப்போது க்ரியாவில் பணியாற்றிய மாளவிகா என்ற தோழியின் கணவர் அந்த இரவில் என்னுடன் இருந்தார். புத்தாண்டுக் கொண்டாட்ட நாள். அது சென்னையில் எவ்வளவு அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பிரத்தியட்சமாகக் கண்ட நாள். விபத்தில் அடிபட்டவர்களை ஏந்திக்கொண்டு ஆம்புலன்ஸ்களும் ஆட்டோக்களும் வந்தபடி இருந்தன.
மறுநாள் காலை என் வீட்டுக்கு அருகிலிருந்த, ஒருவகையில் எனக்கு உறவினருமான, பிரபல மருத்துவர் முத்து சேதுபதியைப் போய்ப் பார்த்தேன். அவர் அப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில்தான் உயர்நிலை டாக்டராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் கோபியின் மனைவி இருந்த வார்டுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு போனார். அவர் மயக்கநிலையில் இருந்தார். அந்த வார்டு டாக்டரைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தவர், “அவர் மயக்கத்திலிருந்து மீண்டால்தான் உண்டு. பார்க்கலாம்” என்றார். மூன்றாம் நாள் மயக்கநிலையிலிருந்து மீண்டார்.
நான் கோபியைக் காவல்நிலையத்தில் பார்த்துத் தகவல் சொன்னேன். முகம் மலர்ந்தது. “மாற்றுச் சட்டை ஒண்ணு வேணும் மோகன்” என்று கேட்டார். வீட்டுக்குப் போய் என்னுடைய சட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்தேன். நான்காம் நாள், அவருடைய மனைவியின் வாக்குமூலத்துக்குப் பின் கோபி, காவல்நிலையம் விட்டு வெளியில் வந்தார். வழக்கு அவர் மனைவி மீதான தற்கொலை முயற்சி வழக்காக மாறியது. முதன்முறை என்பதால் மன்னிப்பு வழங்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
1986-ல் நான் ‘க்ரியா’விலிருந்து விலகி ஒரு அச்சகம் தொடங்கினேன். அதன் பின்னரான ஒரு கட்டத்தில் ‘க்ரியா’விலிருந்து வெளியேறிய கோபி, எப்போதாவது என்னைப் பார்க்க ‘மிதிலா அச்சகம்’ வருவார். அப்போது, அநேகமாக, காவல்நிலையத்தில் நான் அவருக்குக் கொடுத்த சட்டையை அணிந்திருப்பார்; அல்லது அந்தச் சட்டையை அணிந்த நாளில் என்னைப் பார்க்க விழைந்திருப்பார். எந்த ஒரு கடும் நெருக்கடியையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு, சாந்தமாகக் கடக்கும் அவருடைய சுபாவம் அரிதானது. நன்றியுணர்வு மிகுந்தவர். அவருக்கு வாய்த்த எந்தவொரு இனிமையான தருணத்துக்கும் தன் நன்றியை வெளிப்படுத்தி மகிழ்பவர்.
நான் ‘அகம்’ என்ற பெயரில் நண்பர்களோடு இணைந்து புத்தகத் தயாரிப்பு நிறுவனமொன்றை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு கோபிகிருஷ்ணன் ஒருநாள் வந்தார். அன்று மாலை பக்கத்து ஒயின் ஷாப்பில் தற்செயலாக நண்பர்கள் கூடினோம். கோபியும் என் விருப்பத்தை ஏற்று அதில் கலந்துகொண்டார். கோபிக்குக் குடிப்பதில் ஆசை உண்டு. ஆனால், அதை நாடிப் போவதில்லை. இணக்கமான வாய்ப்பு அமைந்தால் அளவாகக் குடிப்பவர். ஐந்தாறு நண்பர்களோடு அந்த முன்னிரவு ஆனந்தமாக அமைந்தது. அது ஒரு இனிய நாள் எனப் பல முறை நன்றி தெரிவித்தபடி இருந்தார் கோபி. அந்த நாளில் கலந்துகொண்டு அன்றைய இரவு முழுவதும் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த நண்பர் பாண்டியராஜனுக்கு அவருடைய அடுத்த புத்தகத்தைச் சமர்ப்பித்தார்.
பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் இயங்கிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் நான் பணிபுரிந்த சமயத்தில், மொழிபெயர்ப்புப் பணிக்காக கோபிகிருஷ்ணனை வரவழைத்து என்னுடன் தங்கவைத்திருந்தேன். அப்போது கோபி வேலையின்றி இருந்த சமயம். கோபி தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர். அவர் அளவுக்குப் புகைப்பவர்களை மிகக் குறைவாகவே சந்தித்திருக்கிறேன். அவருக்கு அதிகமாக சிகரெட் தேவைப்பட்டது. அதனால், மிகவும் மலிவான சிகரெட்டையே பயன்படுத்தினார். அவர் சுதந்திரமாகப் புகைத்தபடி பணியாற்றுவதற்கு வசதியாக, என் அறையிலிருந்தபடியே அவர் தன் பணியை மேற்கொள்ளும் செளகர்யம் அவருக்கு அளிக்கப்பட்டது. இச்சமயத்தில் வேறொரு பணி நிமித்தமாக நெல்லை வந்திருந்த யூமா வாசுகி என்னைப் பார்க்க வந்தபோது அவரும் ஒருநாள் எங்களுடன் தங்கினார். கோபியுடனான அந்த சந்திப்பில் அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் ஒரு நேர்காணல் பதிவுக்கு முகாந்திரமாக அமைந்து.
கோபிகிருஷ்ணனின் எழுத்துலகுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக, யூமா வாசுகி அவரிடம் நிகழ்த்திய நேர்காணலின் பதிவை வாசிப்பது, மிகச் சிறந்த அறிமுகமாக இருக்கும். ஒரு தமிழ்ப் படைப்பாளி தன்னை மிக எளிமையாகவும் நேர்மையாகவும் அப்பட்டமாகவும் வரைந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழின் மிகச் சிறந்த நேர்காணல் பதிவு. இந்த நேர்காணலில் கோபி தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் விதம் அபூர்வமானது. தன்னை, தன் சுயத்தை வெகு சுலபமாகக் களைந்து, எவ்வித ஒப்பனையுமின்றி முன்வைக்க அவருக்கு லகுவாக முடிந்திருக்கிறது. ஒப்பனைகளைத் தீண்டாத எளிய மனதின் பூரண அழகில் ஒளிரும் பதிவு. இந்நேர்காணல் குறித்த முன்குறிப்பில் யூமா வாசுகியின் கடைசி வரி இது: “பேச்சு முடிந்து வெகுநேரம் நீடித்த சஞ்சலமான அமைதியில், ‘நான் சொன்னதெல்லாம் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா?’ என்று கேட்டார் கோபி.” இந்த எளிய, நேரிய, நிர்வாண மனோபாவத்திலிருந்துதான் அவருடைய எழுத்துலகம் உருக்கொண்டிருக்கிறது.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT