Published : 03 Feb 2019 09:44 AM
Last Updated : 03 Feb 2019 09:44 AM
ஷீரடி சாய்பாபா - இன்று இவரது கோயில்கள் உலகமெங்கும் பெருகி, மக்களை ஜாதி மத பேதமின்றி பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தி, நல்வழிப் பாதையில், நேர்மறையான அதிர்வுகளுடன் நடத்திச் செல்லும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
இவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புத லீலைகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும் இன்றும் பல ஊடகங்கள், பல மொழிகளில் ஒளிபரப்பி வருகின்றன, வெற்றிகரமாக. இதுவும் மக்கள் அவர் பால் கொண்டுள்ள அன்பு கலந்த பக்தியை வெளிக்காட்டுகிறது.
ஷீரடி சாய்பாபா சமாதி அடைந்தது 1918 அக்டோபர் மாதத்தில். அதை நினைவுகூரும் வகையில் பாம்பே ஞானம் தனது மஹாலஷ்மி லேடீஸ் டிராமா குழுவினரோடு ‘பாபா - ஷீரடி பாபா’ நாடகத்தை சமீபத்தில் அரங்கேற்றி நடத்தி வருகிறார்.
இன்றும் நடக்கிறதுசென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் (இசபெல்லா மருத் துவமனை அருகே) பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக இந்த நாடகத்தை மேடையேற்றுகின்றனர்.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வசனங் களுக்கு சரியான வாயசைப்போடும், உடல் மொழியோடும் முழுவதும் பெண்கள் மட்டுமே நடிப்பது (ஆண் வேடமாக இருந்தாலும்) இக்குழுவின் சிறப்பாகும். கடந்த பல வருடங்களாக மகான்களின் வாழ்க்கையை மட்டுமே இவர்கள் நாடகமாக்கி வழங்கி வருவது இன்னொரு சிறப்பாகும்.
அந்த வகையில், பாம்பே ஞானத்தின் ‘பாபா - ஷீரடி பாபா’ நாடகம், அவரது முந்தைய நாடகங்களைப் போலவே ஒரு நேர்த்தியான தயாரிப்பாகும்.
நாடக காட்சிகளில் பாபாவின் பிறப்பு பற்றி யும், அவரது குரு பற்றியும் அருமையாக விளக் கப்படுகின்றன. மிக நுண்ணியமாக ஆய்வு செய்து, இந்த நாடகத்தை பாம்பே ஞானம் எழுதி, இயக்கியிருப்பது இதன்மூலம் தெரிகிறது.
நேர்த்தியான ஆடையமைப்பு, ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களில் தனித் தன்மையோடு நடித்திருப்பது, சீரான காட்சியமைப்பு ஆகியவை நாடகத்துக்கு மெருகூட்டுகின்றன.
இள வயது பாபாவாக நடித்த பெண், கோபப்படும் காட்சிகளில் கண்களில் கனல் தெறிக்க நடிப்பதில் இயக்குநரின் கைவண்ணம் தெரிகிறது. மோகன் பாபுவின் அழகான அரங்க வடிவமைப்பு, நாடகத்துடன் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது.
பாம்பே ஞானத்தின் நாடகங்களுக்கு எப்போதுமே ஒரு தனித்தன்மையோடு இசையமைக்கும் கிரிதரன் இந்த முறையும் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். அதோடு, பாடல்களையும் எழுதியுள்ளார். மேடையில் மழை பெய்யும் காட்சி, பாபா வின் கால்களில் இருந்து கங்கை நதி பெருக்கெடுத்து ஓடும் காட்சி எல்லாமே ஒரு சாகசமே.
கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு மருத்துவருக்கும், பாபாவின் மீது முழு நம்பிக்கை கொண்ட ஒரு முதியவருக்கும் ஏற்படும் சம்பாஷணையே நாடகத்தை நகர்த்திச் செல்கிறது. நாடகத்தின் இறுதியில் அந்த மருத்துவரும் பாபாவின் மேல் ஈர்ப்பு கொண்டவராக மாறிவிடுகிறார்.
ஆக மொத்தத்தில், ஷீரடியில் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, பாபாவின் அற்புதங்களைக் கண்டதுபோல ஓர் உணர்வைக் கொடுத்திருக்கிறார் பாம்பே ஞானம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT