Published : 03 Feb 2019 09:18 AM
Last Updated : 03 Feb 2019 09:18 AM
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ எனும் வரலாற்று நூலைக் கொண்டுவருகிறது ‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் - திசை பதிப்பகம்’. 2017-ல் வெளியான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் நிலையில், அடுத்த முயற்சியாக ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் கொண்டுவரப்படுகிறது.
இந்திய அரசியலின் தனித்துவப் பேரொளி
எம்ஜிஆர், கருணாநிதி இருவரைப் பற்றிய நூல்களும் ஏற்கெனவே ‘இந்து குழும’த்தின் சார்பில் கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அண்ணாவைப் பற்றிய நூலையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று ‘இந்து தமிழ்’ வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.
இந்திய அரசியல் வானில் தனித்துவமான பேரொளி அண்ணா. தமிழினத்தின் ஆன்மா என்று அண்ணாவின் குரலைச் சொல்லலாம். தாய்த் தமிழ்நாட்டுக்கு அந்தப் பெயரை மீட்டெடுத்துச் சூட்டியவர் அண்ணாதான். ‘மாநிலங்களால் ஆனது இந்தியா; மாநிலங்கள் டெல்லியின் கிளைகள் அல்ல’ என்பதை டெல்லிக்கு ஆழமாக உணர்த்திய அண்ணா, இந்திய ஒன்றியத்தைப் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியம் அளவுக்கு அதிகாரப் பரவல் மிக்க தேசமாக்க வலியுறுத்தியவர். பரம்பரைப் பணக்காரர்கள், மிட்டாமிராசுகளின் கைகள் மேலோங்கிய இந்திய அரசியல் களத்தின் அதிகாரத்தை சாமானியர்களின் கைகளுக்குக் கடத்தியவர்.
சுதந்திரத்துக்குப் பின் தொடர்ந்து மூன்று முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்த சர்வ வல்லமை மிக்க காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் அவர் வழிவந்த இரு கட்சிகள் நீங்கலாக எந்தக் கட்சியும் ஆள முடியாத சூழலை உருவாக்கிய அண்ணாவின் சாதனை இன்னமும் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.
அண்ணா என்றாலே வியப்புதான்
அண்ணாவின் வாழ்வை இன்று இளைய தலைமுறையினர் படித்தால், ஒவ்வொரு விஷயத்தைப் படித்தும் வியக்கக் கூடும். அண்ணா அளவுக்கு எளிமையான தலைவர் ஒருவரைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை – இறக்கும்போது கடனோடு இறந்த முதல்வர் அவர். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பலரும் வலியுறுத்திய பிறகுதான் தூய வெள்ளாடை உடுத்தினார். அதுவரை அண்ணாவின் அடையாளம், கசங்கிய வேட்டி – சட்டை. கறைகளும் அடங்கிய துண்டு. கட்சிக்காரர்கள் வீட்டில் தங்கினார். பழைய சோறு கொடுத்தாலும் சாப்பிட்டார். முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது பதவியேற்பு, நிகழ்ச்சிக்கு மனைவி உட்பட யாரும் வரக் கூடாது என்று சொல்லித் தவிர்த்தவர் அண்ணா.
எல்லோரையும் மதிப்பினூடாகப் பார்த்தவர். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று அண்ணா சொன்னது காந்தியைப் போற்றி! திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்தபோதிலும், பெரியாரைப் பிரிந்திருந்த 19 வருடப் பிரிவில் ஒரு முறைகூட அவரை விமர்சித்துக் கடுஞ்சொல் பேசியதில்லை அண்ணா. காமராஜரை எதிர்த்துதான் அரசியல் செய்தார் என்றாலும் “குணாளா… குலக்கொழுந்தே!” என்று அவரைக் கொண்டாடினார். காமராஜர் திமுக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டபோது, “தோற்கக் கூடாத நேரத்தில் காமராஜர் தோற்றிருக்கிறார். காமராஜர் இடத்துக்கு இன்னொரு தமிழன் வர இன்னும் ஆயிரமாண்டுகள் ஆகும்” என்று வருந்தினார்.
கருணாநிதி, எம்ஜிஆர், சம்பத், சிவாஜி இப்படி அவர் காலத்தின் அடுத்த தலைமுறை அனைத்தும் அண்ணாவைக் கொண்டாடியது. ஒவ்வொருவருமே அவரை அண்ணனாகவே பார்த்தார்கள். “அண்ணா என் கடவுள்” என்றார் எம்ஜிஆர். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவர் வாழ்ந்த காலத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அவரை நேசித்தது. அண்ணா பேசுகிறார் என்றால், அதற்காகக் கூடிய கூட்டம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி அவர் பேச்சைக் கேட்டது. அண்ணா மறைந்தபோது தமிழ்நாடே கதறியது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தலைநகர் சென்னைக்கு அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர். இன்றளவும் உலக அளவில் அதிகமானோர் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி அதுவே.
தமிழ்ச் சமூகம் கண்ட பெரும் சிந்தனையாளர்
தமிழ்ச் சமூகம் கண்ட பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர் அண்ணா. அவர் அளவுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சர்வதேச அரசியல் வரை பேசிய, எழுதிய ஓர் ஆளுமை தமிழ்நாட்டில் கிடையாது. அவர் பேசிய பல விஷயங்கள் இன்றும் புரட்சிகரமானவையாக, முற்போக்கானவையாகத் திகழ்பவை. ஆனால், பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு நீளும் அண்ணாவின் பேச்சுகள், எழுத்துகளை இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நூல்கள் நம்மிடம் இல்லை. இந்த வெற்றிடத்தைப் போக்கும் வகையிலேயே ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் தயாராகிவருகிறது. மிக விரைவில் நூலின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியிடப்படவிருக்கிறது. அதனுடனே புத்தக முன்பதிவும் தொடங்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT