Published : 10 Feb 2019 08:47 AM
Last Updated : 10 Feb 2019 08:47 AM

சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருணையால் தீர்க்க முடியாது!- சு.தியடோர் பாஸ்கரன் பேட்டி

சுற்றுச்சூழல், காட்டுயிர் சார்ந்த எழுத்து தமிழில் ஒரு துறையாக வளர்ந்துவருவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்பவர்களில் ஒருவர் சு.தியடோர் பாஸ்கரன். காட்டுயிர் அறிஞர் மா.கிருஷ்ணன் முதற்கொண்டு இயற்கை-காட்டுயிர் சார்ந்த பல தமிழ் ஆளுமைகளைத் தொடர்ச்சியாகக் கவனப்படுத்தியவர்.

சுற்றுச்சூழல்-இயற்கை சார்ந்து அவருடைய இதுவரையிலான கட்டுரைகள் அனைத்தும் ‘கையிலிருக்கும் பூமி’ (உயிர்மை வெளியீடு) என்ற தலைப்பில் ஒரே தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. தமிழ்ப் பசுமை இலக்கியம், அதன் அவசியம்-எதிர்காலம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறை குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து:

ஆங்கிலத்தில் நிறைய எழுதிக்கொண்டிருந்த நீங்கள் தமிழில் எழுதத் தொடங்கிய பிறகே சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்து இங்கே கூடுதல் கவனம் பெறத் தொடங்கியது. இரண்டு மொழிகளிலும் எழுதுவது, அவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை ஒப்பிட முடியுமா?

சூழலியல் ஒரு பாரம்பரியத் துறையல்ல. அதனால், இதைப் பற்றி கட்டுரைகள் எழுத ஆரம்பித்த உடனே, மொழி சார்ந்த பிரச்சினையைத்தான் பெரும்பாலும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு சமூகத்தில் புதிய கரிசனங்கள் உருவாகும்போது, அவை ஆழமாக வேரூன்ற வேண்டுமென்றால் அவற்றைப் பற்றிய ஒரு சொல்லாடல் வலுவாக உருவாக வேண்டும். சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் பற்றி விவாதிக்க தமிழில் உரிய அளவில் கலைச்சொற்கள் உருவாக்கப்படவில்லை. கிளைமேட் சேஞ்ச், சஸ்டெய்னபிள் டெவலப்மெண்ட், கேரியிங் கெபாசிட்டி, எக்ஸ்டிங்ஷன் போன்ற சுற்றுச்சூழலின் அடிப்படைக் கருதுகோள்களுக்கு துல்லியமான சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற கருதுகோள்களுக்கு இன்று பல விதமான சொற்றொடர்கள் புழக்கத்தில் விடப்பட்டுக் குழப்பத்தையே உருவாக்கியிருக்கின்றன. ‘ஒரு சொல் என்பது கத்தியைப் போன்று கூர்மையானது’ என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக எழுதிவருகிறீர்கள். ஒட்டுமொத்தமாக சுற்றுச்சூழல் எழுத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கூற முடியுமா?

நல்ல மாற்றங்கள் தெரிகின்றன என்றாலும், இத்துறையில் இன்னும் சில சிக்கல்கள் தொடரவே செய்கின்றன.

1972-ல் ஸ்டாக்ஹோம் மாநாட்டுக்குப் பின்னர்தான் சர்வதேச அளவில் இதைப் பற்றி பேச ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடல் தமிழகத்தில் பெரிய அளவில் உருவாகாததால், இது ஒரு மக்கள் இயக்கமாக இங்கு உருவெடுக்கவில்லை. கல்விப் புலத்திலிருந்தும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இந்த நோக்கில் கவனம் செலுத்தப்படுகிறது. இது ஒரு நல்ல அறிகுறி என்றாலும், ஆசிரியர்கள் இதன் முக்கியத்துவத்தை இன்னும் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை.

‘உயிர்’, ‘காடு’, ‘பூவுலகின் நண்பர்கள்’ போன்ற சில புதிய இதழ்கள் தோன்றியிருக்கின்றன, தரமான கட்டுரைகள் வருகின்றன. சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான குழுக்கள் இயங்கிவருவது மகிழ்ச்சி தருகிறது. கோவையில் ‘ஓசை’, ராஜபாளையத்தில் ‘வார்’, சென்னையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ எனச் சில அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பறவைகளைப் பற்றிய ஆர்வம் அதிகரித்துவருவதைக் காண முடிகிறது. தமிழில் பறவைகளைப் பற்றிய தரமான இரு களக் கையேடுகளும், ‘வண்ணத்துப்பூச்சி’, ‘தட்டான்கள்’ பற்றி நேர்த்தியான இரு கையேடுகளும் (க்ரியா வெளியீடு) கிடைக்கின்றன.

ஆனால், இவை மட்டுமே போதாது. சுற்றுச்சூழல் சீரழிவு பயங்கரமாக நடந்தேறுகிறது. ஆறு என்ற வாழிடம் அழிந்து, அங்கிருந்த நீர்நாய், முதலைகள், பாம்பு, நண்டு, ஆமை போன்ற பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. மயில்கெண்டை, நன்னீர் இறால் போன்ற மீன்களும் மறைந்துவிட்டன. நதிகளின் குடலை உருவிப்போட்டாற்போல, மணற்கொள்ளை அவற்றை அழித்துவிட்டது. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆனால், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இன்னும் நாம் உணரவில்லை.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மிகக் கடுமையாக அதிகரித்து அரசியல், மக்கள் பிரச்சினைகளாக உருவெடுத்துவரும் நிலையில் சுற்றுச்சூழல் எழுத்தின் முக்கியத்துவம் போதிய அளவு உணரப்பட்டுள்ளதா?

இல்லையென்றே நினைக்கிறேன். குடிநீர்ப் பிரச்சினையை மட்டும் எடுத்துக்கொள்வோம். நீரை வீணடிக்கும் பொழுதுபோக்குப் பூங்காக்கள், தேவையற்ற புல்தரைகள் உள்ளிட்டவற்றை எதிர்த்து ஒரு வார்த்தையும் எழவில்லை. ஆழ்துளைக்கிணறு தோண்டுவதைத் தடைசெய்ய வேண்டும். நிலத்தடி நீர் பொதுச் சொத்து என்பதை உணர வேண்டும். அதேபோல, மாசு சார்ந்த நோய்கள் அதிகரிப்பது பற்றி ஒரு சொல்லாடலும் உருவாகவில்லையே. இப்படி எல்லா சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தால், அவை ஒன்றோடுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதையும், அவற்றின் வேர்கள் அரசியலில் ஊன்றியிருப்பதையும் காணலாம்.

அறிவியல் சாராத, தர்க்கம் சாராத ஒருவகையான உணர்ச்சிவசமான சுற்றுச்சூழல் சொல்லாடல் தமிழகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இது குறித்து?

பிரச்சினையை சரியாக உணர்ந்து இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல், காட்டுயிர் பேணல் ஆகியவை சார்ந்த சிக்கல்களுக்கு அறிவியல் சார்ந்த தீர்வுகளையே தேட வேண்டும், கருணை அடிப்படையில் அல்ல. மரங்கள் தேவைதான். ஆனால், சாலையின் நடுவில் ஒரு மரம் இருந்தால், அதை எப்படிப் பாதுகாக்க முடியும்? அதேபோல, ஒரு வேங்கைப் புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டால், அது கொல்லப்பட வேண்டும். அது ஆட்கொல்லியா என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்த பிறகே, இது செய்யப்பட வேண்டும். நமது குறிக்கோள் வேங்கைப் புலி என்ற காட்டுயிரினத்தைப் பாதுகாப்பதுதான்.

 ‘ஐயோ பாவம், இந்தப் புலி’ என்று நாம் நினைத்தால், அது புலி இனத்துக்கும் தொடர்ச்சியாகக் காடுகளுக்கும் ஆபத்தாகவே முடியும். ஆதிவாசிகள் மீதான நல்லெண்ணம் இல்லாமல், காட்டுயிர் பேணலைப் பற்றி பேசவே முடியாது. அதேபோல் தெருநாய்ப் பிரச்சினை அணுகப்படும் முறையும் சரியல்ல. கடந்த பதினாறு ஆண்டுகளாக நாய் கருத்தடை முறை ‘செயல்பட்டு’வருகிறது. தெருநாய் எண்ணிக்கை குறைந்துள்ளதா? தெரு நாய்கள் மூலம் பரவும் நோயால் கிர் சரணாலயத்தில் 21 சிங்கங்கள் மடிந்துள்ளன. தெருநாய்க் கடியால் தேசிய அளவில் மனிதர்கள் கொடுக்கும் விலையும் அதிகம். சுற்றுச்சூழல் சீரழிவின் ஒரு குறியீடாகத் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.

தமிழில் சுற்றுச்சூழல் புத்தகங்களின் இன்றைய நிலை திருப்திகரமாக இருக்கிறதா?

நல்ல சில நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால், அமெரிக்கர்கள் சொல்வதுபோல் மொழிபெயர்ப்பு நூல்கள் ‘கெட்ட செய்தி’களாகவே இருக்கின்றன. சுற்றுச்சூழல், காட்டுயிர் போன்ற துறைகளில் துளிகூடப் பரிச்சயம் இல்லாதவர்கள், அது சார்ந்த நூல்களை மொழிபெயர்க்க முற்படும் துணிச்சல், என்னை பிரம்மிக்கவைக்கிறது. அண்மையில் நான் வாசித்த வேட்டை சார்ந்த ஒரு நூலில் ‘மேன்-ஈட்டர்’ என்ற சொல், ‘ஆள்தின்னி’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘ஆட்கொல்லி’ என்ற பதம் பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பது குறித்து, அந்த மொழிபெயர்ப்பாளர் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற மொழிபெயர்ப்புகளால் ஒரு நூல் கொல்லப்படுகிறது. புனைக்கதைகளை மொழிபெயர்ப்பவர்கூட அவற்றில் வரும் காட்டுயிர் பற்றிய சொற்களில் கவனம் செலுத்துவதில்லை. தமிழ் நாவல்கள் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படும்போதும், காட்டுயிர் பற்றிய பிழைகளைக் காண முடிகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தில் நாம் செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம்.

தமிழ்ச் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்து வரலாற்றின் முக்கியப் புள்ளிகள், நபர்களாக யாரை நினைக்கிறீர்கள்?

நம் நாட்டில் காட்டுயிர் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் முதலில் எழுதிய எல்லோரும் ஆர்வலர்களே. தொழில்முறை உயிரியிலாளர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அக்கறை எழுத்து மூலம் வெளிப்பட்டது, கல்விப்புலத்துக்கு வெளியில் இருந்துதான். மா.கிருஷ்ணன், பெ.நா.அப்புசாமி போன்றவர்கள் இதை ஆரம்பித்துவைத்தார்கள். பின்னர், முகமது அலி வந்தார். இன்று ப.ஜெகநாதன் சிறப்பாக எழுதிவருகிறார். பாமயன், நக்கீரன், வறீதையா கான்ஸ்தந்தின், கோவை சதாசிவம், உதயகுமார் போன்றோர் எழுதிவருகின்றனர். அதேநேரம் களப்பணியின் பின்னணியில் எழுதுபவர்கள் குறைவு.

சுற்றுச்சூழல்-இயற்கை சார்ந்த எழுத்தை இலக்கிய எழுத்தாளர்கள் பொதுவாக மதிப்பதில்லை, தங்கள் எழுத்திலும் அவற்றை உரிய கவனத்துடன் பதிவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக நினைக்கிறீர்களா?

இந்தக் கவனிப்பு சரிதான். சோ.தர்மன், பெருமாள் முருகன், ஜெயமோகன் ஆகியோர் இயற்கையை கவனத்துடன் பதிவுசெய்கிறார்கள். தி.ஜானகிராமன், சா.கந்தசாமி போன்ற சில எழுத்தாளர்களும் முன்னர் இதுபோல எழுதினார்கள். ஆசை, தேவதேவன், மனுஷ்யபுத்திரன், அவைநாயகன் ஆகியோரது கவிதைகளில் புற உலகுடன் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டையும், காட்டுயிர் பேணல் மீதான அவர்களது அக்கறையையும் உணர முடிகிறது. மற்றவர்கள், ‘ஒரு மஞ்சள் நிறக்குருவி வந்து உட்கார்ந்தது’ என்பது போன்ற பொத்தாம் பொதுவான பதிவுகளையே செய்கின்றனர். அதேபோல மரங்களைப் பற்றியும் ஒரு பதிவும் இருக்காது. இயற்கையிலிருந்து சமூகம் மட்டுமில்லாமல், இலக்கியவாதிகளும் அந்நியப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in ஷங்கர்ராமசுப்ரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x