Published : 20 Sep 2014 03:09 PM
Last Updated : 20 Sep 2014 03:09 PM

இன்னொரு திருடன் உருவாகக் கூடாது! - முன்னாள் திருடர் மணியன்பிள்ளையுடன் ஒரு சந்திப்பு!

காலைப் பொழுதில் கேரளத்துக் கட்டன் சாயாவுடன் நம்மை வரவேற்கிறார் மணியன்பிள்ளை. கேரள மாநிலம் வாழதுங்கலில் இருக்கிறது அவரது வீடு. 64 வயதான மணியன்பிள்ளை ஒரு காலத்தில் கேரள போலீஸாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய பலே திருடர். வாழ்க்கையின் பெரும் பகுதி ஓட்டத்தில் கழிந்தாலும் தன் மனைவியின் இறப்புக்குப் பின்பு மணியன்பிள்ளை திருந்தி வாழ ஆரம்பித்தார். பிறருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்ற யோசனையில், ஒரு கட்டத்தில் சுயசரிதை எழுதத் தீர்மானித்தார்.

அவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய ‘தஷ்கரன் மணியம்பிள்ளையின் ஆத்ம கதை’ என்ற புத்தகம் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுத்தீர்ந்துள்ளது. இந்தப் புத்தகத்தை ‘திருடன் மணியன்பிள்ளை’ என்ற தலைப்பில் குளச்சல் மு. யூசுப் மொழிபெயர்ப்பில் தமிழில் கொண்டுவந்திருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். முதல் திருட்டில் ஆரம்பித்து மனமாற்றத்துக்குப் பிந்தைய வாழ்க்கை வரை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் மணியன்பிள்ளை.

“அப்போது நான் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு சொந்தக்காரப் பெண் ஒருவர் குழந்தையுடன் வந்திருந்தார். அதன் இடுப்பில் இருந்த தங்க அரைஞாண் கொடியை என் பக்கத்து வீட்டுப் பெண் திருடிக் கொண்டுவரச் சொன்னார். நானும் கழட்டிக்கொண்டு சென்றேன்.

பயந்துபோனவர் திருப்பிக் கொண்டுபோகச் சொல்லிவிட்டார். கொண்டுபோய் உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், ‘திருடன்’ பட்டத்துடன் தர்ம அடியையும் அவர்கள் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு, சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். 16 வயதில் கோயில் உண்டியலில் கைவைக்கும் போது கையும் களவு மாகப் பிடிபட்டேன். அப்போது ஆரம்பித்து, என் வாழ்நாளில் 8 முறை வெவ்வேறு திருட்டு வழக்கு களில் 14 வருடங்களைச் சிறையில் கழித்தேன்.

நான் திருடினாலும் எல்லாவற்றையும் நானே வைத்துக்கொள்வதில்லை. ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்ததுபோகத்தான் மீதி எனக்கு. ஒரு டாக்டர் வீட்டிலிருந்து 30 பவுன் நகையைக் கொள்ளையடித்தேன். அப்புறம், திரு வனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற வெண்கல வியாபாரி வீட்டில் 1977-ம் ஆண்டு 96 பவுன் நகையைக் கொள்ளையடித்துவிட்டு என் மனைவி, மகனுடன் கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சென்றுவிட்டேன். திருட்டுப் பணத்தை மூலதனமாகக் கொண்டு சாலையோரத்தில் சேமியா பாயாசம் கடையைத் தொடங்கி, பிறகு பஜ்ஜி ஸ்டால், மெஸ், ஹோட்டல், அப்புறம் ஸ்டேஷனரி கடை என்று வியாபாரத்தை விரிவுபடுத்தினேன்.

கர்நாடகத்தில் முக்கியக் கட்சி ஒன்றின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் எனக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு முன்னேறினேன். அதற்குள் கேரள போலீஸார் என்னைக் கண்டுபிடித்துவிட்டனர். 1983-ல் 96 பவுன் நகையைத் திருடியதற்காக என்னைக் கைதுசெய்தார்கள். சொத்துக்களை கர்நாடக அரசு எடுத்துக்கொண்டது.

அப்போது என் சொத்து மதிப்பு: 96 லட்சம். என் உழைப்புக்கு இழப்பீடு கேட்டுக் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். திருடர்களுக்கு இப்படிக் கொடுப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று எனக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. எனக்கு பதிலாக அந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டவர் அமைச்சர் ஆகிவிட்டார். மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்தது என்னுடைய வாழ்க்கை. ஆமாம், அதே திருட்டுத் தொழில்தான்.

என்னுடைய மனைவியை மெகர் நிஷாவைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்! திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மெகர் நிஷா கொல்லத்தில் உள்ள அவளுடைய மாமா வீட்டில் 10-ம் வகுப்பு படித்தார். மாமாவுடன் நட்பான நான் வீட்டுக்குப் போய் வரும்போது மெகர் நிஷா பழக்கமானார். அந்தப் பழக்கத்தில் மெகர் நிஷா கர்ப்பமானார்.

நான் முஸ்லிமாக மதம் மாறி மெகர் நிஷாவைத் திருமணம் செய்துகொண்டேன். பிறகு, அவரை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு கோவளம் கடற்கரையில் மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு வெளியே வரும்போது என் மனைவி மெகர் நிஷா என் மகனைத் தோளில் சாய்த்தபடி நின்றுகொண்டிருந்தார். என்னை பார்த்ததும் சரிந்து விழுந்துவிட்டார்.

திருடுவது, பெரும்போக்காகச் செலவுசெய்வது என்று நகர்ந்த என் வாழ்வில் முதன்முதலில் என் இதயத்துக்குள்ளும் ஈரத்தை நான் உணர்ந்தேன். மெகர் நிஷா என் மேல் வைத்திருந்த ஆத்மார்த்தமான காதல் எனக்கு புரிபடுவதற்குள் என் மகனுக்கு 2 வயது ஆகிவிட்டிருந்தது.

அப்புறம் ஒரு பெரிய திருட்டுச் சம்பவத்தில் நான் சிறைக்குச் சென்றதும், என் மனைவி அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்கே, 1995-ம் ஆண்டு இதய நோயால் அவர் இறந்துபோனதாகத் தகவல் வந்தது. என் மனைவியின் இறப்பு என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. இனி மேல் சல்லிக்காசுகூட திருடக் கூடாது என்று முடிவெடுத்தேன். 1997-ம் ஆண்டு ஏப்ரல் 1-ல் சிறையிலிருந்து விடுதலையானேன். அன்றுதான் நான் உண்மையில் பிறந்ததாக உணர்ந்தேன்.

தற்போது, தமிழ், மலையாளம், இந்திப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கிறேன். அதில் கிடைக்கும் வருமானமே எனக்குப் போதும். புத்தகத்துக்கான ராயல்டியும் வருவதால் கஷ்டம் தெரியவில்லை. புத்தக வெளியீட்டில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. காவல் துறையினர்குறித்து நிறைய விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சொல்லியிருந்தேன்.

இதனால் கோபமடைந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஒருவர், நான் இப்போதும் திருட்டுத் தொழில் செய்வதாக என் மீது 12 வழக்குகள் போட்டார். அதில் 11 வழக்குகள் தள்ளுபடியாகிவிட்டன. இன்னும் ஒரு வழக்கில் ஜாமீனில்தான் வெளியில் இருக்கிறேன். என் புத்தகத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிவருகிறது. அந்த வழக்கு முடிந்ததும் வெளியீட்டுப் பணியை ஆரம்பிக்க இருக்கிறோம்.

இன்னொரு திருடன் உருவாகாமல் இருப்பதற்கு என் வாழ்க்கை உதவும் என்ற நோக்கத்தில்தான் எனது வாழ்க்கையைப் புத்தகமாக வெளியிட்டேன். எனவே, ‘நான் ஒரு திருடன்’ என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.”

ஆத்மார்த்தமாக விடைகொடுக்கிறார் மணியன்பிள்ளை!

நூலிலிருந்து...

திருடனைப் போன்ற துயரம் நிரம்பிய வாழ்க்கை வேறு யாருக்குமே கிடையாது. திருட்டை நிறுத்தினாலும் பெயர் மாறாது. உறவினர்கள் வீட்டுக்கோ தெரிந்தவர்கள் வீட்டுக்கோ போக முடியாது. கண்கள் நம்மையறியாமல் எங்காவது தட்டுப்பட்டுவிட்டால், வீட்டுக்காரர்களுக்கு நோட்டமிடுகிறானோ என்ற சந்தேகம் வந்துவிடும். வாழ்க்கை முழுவதுமே குனிந்த தலைதான்.

இப்போதெல்லாம் நான் திருடுவதில்லை என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். திருடனுடைய பச்சாதாபத்தில் யாருக்குமே நம்பிக்கை வராது. பீடி வாங்கவும்கூட இரவு நேரங்களில் திருடன் வெளியே வர பயப்படுவான். போலீஸ் வேன் பக்கத்தில் வந்து பிரேக் போட்டு நிறுத்தப்படலாம்.

- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x