Published : 06 Jan 2019 09:36 AM
Last Updated : 06 Jan 2019 09:36 AM
சில ஆயிரம் வாசகர்களை நல்ல கவிதைகளை நோக்கி ஈர்த்தவர்களென்றும் நல்ல கவிஞர்களென்றும் சிலரையே சொல்ல முடியும். ஞானக்கூத்தன், வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், மனுஷ்ய புத்திரன் வரிசையில் கவிஞர் இசை, பொது வாசகர்கள் மத்தியிலும் அறிமுகமாகிக் கவர்ந்திருக்கிறார். ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ என்ற இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு முக்கியமானது. மரபிலக்கியத்தில் ரசனையும் ஈடுபாடும் கொண்ட இசை, பழந்தமிழ்க் கவிதைகளில் தொடங்கி நவீனக் காலம் வரை கவிதைகளில் நகைச்சுவையுணர்வு எப்படிச் செயல்படுகிறது என்பதை ‘பழைய யானைக் கடை’ கட்டுரைத் தொகுப்பில் எழுதியுள்ளார். தமிழ்க் கவிதைக்குப் பகடி எனும் முகத்தை வழங்கிய கவிஞர் இசையிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பொறுத்தவரை கவிதை என்பதன் வரையறை என்ன?
கவிதையால் நம்மைப் பறக்கச்செய்ய முடியும். கவிதைக்கென்று பிரத்யேகமான சூடு ஒன்று உண்டு. அன்றாடத்தில் புழங்கும் ஒரு சாதாரண சொல், கவிதைக்குள் வருகையில் கவிதையின் சூட்டுக்கு மாறிவிடுகிறது. ஆனால், எத்தனை ஃபாரன்ஹீட்டில் சொல் கவியாகிறது என்பது எனக்குத் தெரியாது. ஒரு நல்ல கவிதையை எழுதி முடித்ததும் ஒரு மகிழ்ச்சி வருமே, அது மற்ற மகிழ்ச்சிகளைப் போன்றதல்ல.
கவிதைக்கான அத்தியாவசியம், அத்தியாவசியமின்மையை சமகால வாழ்வின் பின்னணியில் சொல்ல முடியுமா?
மனிதகுலத்துக்குக் கவிதைக்கான தேவை என்பது என்றென்றைக்குமானது. ‘கவிதை’ என்கிற சொல்லுக்கு அஞ்சும் மனிதனுக்குகூட ‘கவித்துவம்’ தேவைப்படவே செய்கிறது. அது மனிதன் திரும்பவும் குரங்காவதிலிருந்து தடுத்தாட்கொள்கிறது. சமகாலம் சிக்கலாகிவிட்டது என்று சொல்கிறார்கள். எளிமையாக்கிவிட்டது என்றும் சொல்கிறார்கள். எளிமையானதன் மூலம் சிக்கலாகிவிட்டது என்று சொன்னால் அதுகூட சரிதான். சிக்கலாக சிக்கலாகக் கவிதை அதிகமாக விழித்துக்கொள்ளும் என்பது உண்மைதான்.
உங்களைக் கனவாகத் துரத்தும் திட்டம் எது?
சிவாஜி ரசிகனாக லாட்டரிச் சீட்டு வீசிக்கொண்டிருந்த எனக்கு எழுத்தாளன் ஆனதே கனவுபோலதான் இருக்கிறது. ரகசியத் திட்டம் என்றெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. சாகும் வரை வாணியின் வீணையில் வீற்றிருந்தால் போதும். அவளே கனவுகளை அவ்வப்போது காட்டித்தருவாள். அவள் கொஞ்ச நாட்களுக்கு முன் ‘பழைய யானைக் கடை’ என்கிற கனவை அளித்தாள். இரண்டு வருட காலம் எடுத்து அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன். திருக்குறளின் காமத்துப்பாலுக்கு உரை எழுதும் கனா பாக்கியிருக்கிறது. தவிர, அளவில் சிறியது என்பதால் கவிதையில் கனா இல்லை என்று சொல்லிவிட முடியாது.
ஆளற்ற தீவில் உங்களை ஆயுள் சிறை வைக்கப்போகிறார்கள்? மூன்று புத்தகங்களுக்கு அனுமதி. எதையெல்லாம் எடுத்துச்செல்வீர்கள்?
இதற்கு நேர்மையாகப் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆளற்ற தீவில் ஆயுள் சிறை இருப்பவனைப் புத்தகங்களால் பராமரிக்க முடியுமா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. தவிரவும் நான் அந்த அளவுக்கு லட்சிய வேங்கையும் இல்லை. என்னைப் படிக்கவிடாமல் அச்சுறுத்திக்கொண்டிருந்த மூன்று குண்டுப் புத்தகங்களைச் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னைச் சுற்றுலா அழைத்துச்செல்லவில்லை. தனிமைச் சிறையில் ஆயுளுக்கும் தள்ளப்போகிறீர்கள். எனில், காலமெல்லாம் ஒளி தரக் கூடியதாக அவை இருக்க வேண்டும் அல்லவா? அப்படியென்றால்,
1) திருக்குறள், 2) கம்பராமாயணம், 3) தாவோ தே ஜிங்!
தமிழ் மரபிலக்கியத்தில் பரிச்சயம்கொள்ள நினைக்கும் வாசகன் எங்கிருந்து தொடங்கலாம், யாரை வாசிக்கலாம்?
அளவில் சிறியதும், சுவாரஸ்யமானதுமான நூல்களிலிருந்து தொடங்குவது நல்லது. திருக்குறள் (குறிப்பாக, காமத்துப்பால்), நாலடியார், தனிப்பாடல் திரட்டு என்று வாசித்து முன்னேறலாம். அதன் அழகியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருங்கிவரும். முதலில் என்னால் கலித்தொகையை வாசிக்க முடியவில்லை. குறுந்தொகையை வாசித்த அனுபவத்தையும், சக்தியையும் கொண்டு திரும்பவும் கலித்தொகையைத் திறக்க முயன்றேன். திறந்துகொண்டது.
உங்களைப் பற்றி உங்களுக்கு இருக்கும் சித்திரம் என்ன?
கேலிச்சித்திரம்தான், வேறென்ன? அவ்வளவு கசப்புகளுக்கு மத்தியிலும் நகைச்சுவை எனும் சுவையை இரண்டு கரண்டி சேர்த்துப் போட்டு என்னைச் செய்தார் கடவுள். அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து தீர்க்கிறேன். ஒருமுறை உணர்ச்சி மேலீட்டால் ‘நகைச்சுவை தெய்வம்’ என்றுகூட ஒரு கவிதை முயன்றுபார்த்தேன். ஏனோ தெய்வம் கண் முழிக்கவில்லை.
நடிகர் வடிவேலுவைப் பற்றி ‘லைட்டா பொறாமைப்படும் கலைஞன்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்? வடிவேலு உங்களை அந்தளவு பாதித்துள்ளாரா?
நிச்சயமாக. தமிழ் மனத்தின் உளவியலை அந்தரங்கமாகத் தொட்டுத் துலக்கிய கலைஞன் வடிவேலு. அவர் நடிகர் என்கிற பாத்திரத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து ஆகச் சிறந்த மருத்துவர் என்கிற பாத்திரத்துக்கு வந்துவிட்டார். நமது காலம்தான் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
நினைவில் செதுக்கப்பட்ட கவிதை ஏதாவது இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்?
பரிணாமப் பயன்பாடுகள்
- சமயவேல்
பெயர் தெரியாத பூச்சி
பருப்பு டப்பாவுக்குள் இருந்தது
அதன் தாய் தந்தை யார் எதுவரை
படித்திருக்கிறது அதன் லட்சியம் என்ன
சாதனை என்ன வீட்டுப் பொறுப்பை
செவ்வனே செய்கிறதா பூர்ஷ்வாவா
கஞ்சா பிடிக்குமா
சமூகப் பிரக்ஞை உண்டா
கல்யாணம் ஆனதா லெபனான்
போர்பற்றி அதன் அபிப்ராயம் என்ன
ஒன்றும் தெரியாது
சாம்பல் நிறத்தில் வரிவரியாக
இத்தினியூண்டு மீசையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
உங்கள் கவிதைகளின் தனித்துவ அம்சமாக இருக்கும் பகடியை எப்போது உங்களுடையதாகக் கண்டுபிடித்தீர்கள்?
பகடி, நகைச்சுவையுடன் உறவாடும் ஒன்று என்பதால் அது என்னுடைய இயல்பிலேயே இருப்பதுதான். ஆனால், ஒரு சின்னத் திட்டமிடலும் அதில் உண்டு என்பதை மறுக்க இயலாது. நான் எழுத வந்த காலத்தில் பெரும்பாலான கவிதைகள் தலைவிரிகோலமாகக் காட்சியளித்தன. ஓயாது கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தன. ஆனால், அவை ஒரு ஒப்பாரிப் பாடல்களுக்கான கலையம்சம்கூட இல்லாமல் வெற்று அழுகைகளாக இருந்தன. துரதிர்ஷ்டம் என்னவெனில் என்னிடமும் எழுதுவதற்குத் துயரம்தான் எஞ்சியிருந்தது. ஆனால், அந்தக் கண்ணீர்க் கடலில் கலக்க நான் விரும்பவில்லை. எனவே, ‘கண்ணீரால் புன்னகைத்தல்’ என்கிற இடத்துக்கு வந்துசேர்ந்தேன். பலநூறு கவிதைகளுக்கு மத்தியிலும் அந்தப் புன்னகை தனித்துப் பளீரிடுவதாக நம்பினேன்.
இன்றைய தமிழ் வாழ்க்கையை அணுகுவதற்குப் பகடிதான் சிறந்த கருவி என்று நினைக்கிறீர்களா?
பகடியும் முக்கியமான, தவிர்க்க இயலாத கருவி என்றே நம்புகிறேன். நீங்கள் பகடியை எழுத்தாக்கலாம் அல்லது எழுதாமல் தவிர்க்கலாம். ஆனால், கூருணர்வு கொண்ட ஒரு மனத்தால் இந்த அபத்த வாழ்க்கையின் முன் கெக்கலிக்காமல் இருக்க முடியாது. இன்றைய வாழ்க்கை மட்டுமல்ல, என்றைய வாழ்க்கைக்கும் பகடி விளையாட்டு அவசியம்தான். இல்லையெனில் தலை சுக்குநூறாகிடும் ஆபத்துண்டு. இந்த வாழ்வு ஒரு ஒழுங்கில் இல்லை. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தர்மம் தலைகாக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடிவதில்லை. நம் முன்னோர் அறம் வெல்லும் என்று அடித்துச் சொல்லிவிட்டு வலுத்தது வாழும் என்று கிசுகிசுத்துவைத்திருக்கிறார்கள். உறுதியாகப் பற்றிக்கொள்ள ஏதுமற்ற, சகலமும் குழப்பியடிக்கப்பட்டிருக்கிற இன்றைய வாழ்க்கையில் பகடி மேலும் துலக்கம் பெறவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், இன்று பகடி ஒரு ட்ரெண்டாகிவிட்டதோ என்று எண்ணும் அளவுக்குக் கொட்டிக் கவிழ்க்கப்படுகிறது. உள்ளீடற்ற வெற்று கேலி ஆபத்தானதுதான். ஆனால், ஒரு நல்ல பகடி வெறுமனே கிளுகிளுப்பூட்டுவதோடு நின்றுவிடாது.
உங்களிடம் இருக்கும் ஒரு கவிஞன், ஒரு அரசு மருத்துவமனை மருந்தாளுனன் இருவரும் சந்திக்கும், முரண்படும் இடங்களைச் சொல்லுங்கள்?
உப்பு, புளி, ஊறுகாய்க் கணக்குகளைக் கவனித்துக்கொள்பவன் என்பதால் மருந்தாளுனனும் முக்கியமானவன்தான். அவன்தான் பரிசில் வேண்டி பணிந்து நிற்காமல் கவியைக் காப்பாற்றிவருபவன். துப்புரவுப் பணியாளர்கள் ஓய்ந்தமர்ந்து இன்ப அரட்டைகளில் திளைத்திருக்கும்போது அவர்களின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடாமல், அழுக்கேறிய மருத்துவ உபகரணங்களைத் தானே அழுத்தி அழுத்தித் துடைத்துக்கொண்டிருப்பவன் உறுதியாகக் கவிஞன்தான்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு:
sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT