Published : 19 Jan 2019 10:15 AM
Last Updated : 19 Jan 2019 10:15 AM
இயற்கை வியப்பு, ஆன்மிக அம்சத்தைத் தனது கவிதைகளின் அடிப்படையாகக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தேவதேவன். கடவுளின் இடத்தில் இயற்கை ஒழுங்கை வைத்து அதன் விகாசத்தில் அது தரும் ஆனந்தத்தில் இயங்கும் பக்திக் கவிஞர் இவர். ‘கவிதை பற்றி’ என்ற சிறிய உரையாடல் நூலும் முக்கியமானது. முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேராத கோபியர்கள்’ தொடங்கி நாற்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘புரியாது கழிந்த பொய்நாட்கள் எல்லாம்’ என்பது இவரது சமீபத்திய தொகுப்பு. கவிதையை உயிர்த்துவம் மிக்கச் செயல்பாடாகக் கருதும் தேவதேவனிடம் உரையாடியதிலிருந்து…
உங்களது இயற்பெயரான பிச்சுமணி கைவல்யத்தின் பின்னணியைச் சொல்லுங்கள்...
அப்பா, பெரியார் தோற்றுவித்த கறுப்புச்சட்டைப் படைத்தொண்டர் அணியில் இருந்திருக்கிறார். நான் பிறந்தபோது மூன்று நாட்களாக என்னைக் காண வரவில்லையாம். அப்போது தூத்துக்குடியில் நடந்த திராவிடக் கழக மாநாட்டு வேலையில் மூழ்கியிருந்திருக்கிறார். மூன்றாவது நாள் வந்தவர் என்னைத் தூக்கிக்கொண்டு ஈ.வெ.ராவிடம் சென்று எனக்கு இந்தப் பெயர் - ஆமாம், ஈ.வெ.ராவால் எனக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எப்போதுமே எல்லோரும் வியக்கக்கூடிய இந்தப் பெயரை அவர் சூட்டக் காரணமாயிருந்தவர், கைவல்ய சுவாமிகள் என்று அவர் குழுவில் அவரால் மதிக்கப்படும்படி இருந்த மனிதர். கைவல்ய சுவாமிகளுக்கும் இயற்பெயர் வேறு. பொன்னுசாமியின் பட்டப்பெயராகிவிட்டதுதான் கைவல்யசுவாமிகள். நண்பர்களோடு கூடிய உரையாடல்களில் எப்போதும் அவர் ‘கைவல்ய நவநீதம்’ என்னும் தத்துவநூல் குறித்ததையே மேற்கோள் காட்டி எடுத்து எடுத்துப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தூரத்தில் வரக் கண்டவுடனேயே நண்பர்கள் கைவல்யம் வந்துவிட்டார், கைவல்யம் வந்துவிட்டார் என்று கூறத் தொடங்கியதால் அதுவே பெயராகிவிட்டது என்கிறார்கள். கைவல்ய சுவாமி ஒரு துறவி மாதிரியே வாழ்ந்திருக்கிறார், நாடோடியாய்த் திரிபவராயும், ஒரு கிராமத்துக்குப் போனால் திண்ணையில் தூங்கி விடிகாலையில் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவாராம். சமயங்களில் ஒரு திருமண வீட்டில் புகுந்து அவர் சாடும் ஈ.வெ.ராத்தனமான அட்டகாசங்களை அங்குள்ள மக்கள் எவரும் எதிர்ப்பதில்லையாம். இவ்வளவே அவரைப் பற்றிய வாய்மொழி வரலாறு.
என் வாசிப்பு தொடங்கிய காலத்திலேயே என் தேடலில் சிக்காது எனக்கு 19 வயதில்தான் நான் பள்ளிக்கல்விப் பயிற்சிக்காகச் சென்றிருந்த குருவிகுளம் என்னும் ஊரிலுள்ள நூலகத்தில்தான் தாண்டவராய முதலியாரின் ‘கைவல்ய நவநீதம்’ நூல் கிடைத்தது. அது சைவ சிந்தாந்தம் தழுவிய அத்வைதம் பேசும் ஒரு தத்துவநூல் என்பதுதான் இன்றைய எனது ஞாபகம்.
தற்போது புதுக்கவிதை என்ற அடையாளம் பழையதாகி நவீனக்கவிதை என்றாகியுள்ளது. புதுக்கவிதைக்கும், நவீனக்கவிதைக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கருதுகிறீர்கள்?
கவிதை மட்டும் என்றைக்கும் புதியதாகவும் ஆகவில்லை, பழையதாகவும் ஆகவில்லை. புதுக்கவிதை, நவீனக்கவிதை எனும் சொற்கள் காலம், வரலாறு ஆகியவை தொடர்பானது. அவ்வளவே. அவை எல்லா அறிவுஜீவிகளுக்கும், அறிஞர்களுக்கும் தெள்ளத்தெளிவாக அறியக் கிடைக்கும் சாமானிய உண்மைகள்தான். இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் புதிய வெளிப்பாட்டு முறைகள், அனுபவத்தைவிட வெளிப்பாட்டு முறைக்கே முதன்மை கொடுக்கும் பான்மையால் அய்யப்படும்படியும் அமைந்துவிடுகிறது.
உங்கள் கவிதை மரபு எது?
முதன்மையாக, கவிதைதான் எனது மரபு என்பது. அடுத்ததாக, கவிதை ஒரு தேய்வழக்குபோலும், ஒரு ஊடகம் மட்டுமே என ஆகும்போதும், அதாவது கலை மட்டுமே என ஆகும்போது அது செயல்பட வேண்டிய பொறுப்பையும் கண்டடைதலையும் அறிந்திருத்தல். இவையெல்லாம் தங்களை அறியாமலேயே ‘கவிஞன்’ ஒரு தெய்விக்ஞன் - தெய்வத்தின் ரகசியங்களை அறிந்து சொல்பவன் என்ற பழம் சொற்களையல்லவா சென்றடைகின்றன. இயற்கையில் தோய்ந்த வாழ்க்கைமூலம் இயற்கையோடு வாழ்வைச் சொல்லும் சங்க இலக்கியங்கள், பேருண்மையைக் கடவுளாகவும், தத்துவங்களாகவும், காதலன், காதலியாகவும், பக்திகொண்டும் நெகிழ்ந்த கவிதைகள் யாவுமே - இன்று நாம் எழுதுகிற கவிதைகளும்கூட – எல்லைக்குட்பட்டதாலேயே, கட்டுப்படுத்தப்பட்டதாகவும், குறைபட்டதாகவும் அதனாலேயே ஆபத்தானவையுமே ஆகும். ஆனால், வாழ்வு அப்படிப்பட்டதல்ல; மெய்ச்செயல் அப்படிப்பட்டதல்ல. இதுவே எனது கவிதையின் மரபு. கவிதையின் உண்மையான மரபும்.
தமிழில் அதிக அளவு இயற்கையைப் பாடிய கவிஞர் நீங்கள். ஆனால் பசுமை அரிதாகவே காணப்படும் தொழில் நகரமான தூத்துக்குடியில் வசிக்கிறீர்கள். அது முரண்பாடாக இல்லையா?
முரண் அல்ல அது. நீங்கள் இக்கணமே கண்டுவிட்டீர்கள் அதை. ஒரு வியப்புதான் அது. எனது மொட்டைமாடியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது தூத்துக்குடியில் அல்ல, இந்தப் பூமிக்கோளத்தின் ஏதோ ஒரு பகுதியில்தான் நான் இருப்பதை உணர்கிறேன். நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் முதன்முறையாக ஜெயமோகன் வீட்டிலிருக்கையில் அவர் துணைவியார் அருண்மொழிநங்கை என்னிடம் கேட்டார். நான் வீடு திரும்பியவுடனே என் புன்னகையின் பதிலாக ஒரு தபால்அட்டையில் நான் எழுதிய கவிதையை உடனேயே அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். அது, ‘ஒரு புல்லின் உதவிகொண்டு…’ எனும் புகழ்பெற்ற கவிதை. மேலும் ‘கடவுளின் சொந்த ராஜ்யம்’ என்பதும், ஒரு குறுகிய நாடு அல்ல; இந்த இயற்கைவெளிதான். ஒரு வாசக அன்பர் உங்களைப் போலவே ‘நீங்கள் அதிகமும் இயற்கையைப் பாடுகிறீர்கள்’ என்றபோது ‘அப்படியா?’ என்று எனக்கு வியப்பேற்பட்டது. அதைக் கண்டு நான் அடைந்த வியப்பு முக்கியமானது. அது இயற்கையையே இயற்கைக்கு அப்பாலிருந்து கண்டது. அவை பற்றியும் நான் எழுதியிருக்கக் கூடும்.
கவிதை விடுதலை தரும், கவிதை அமைதி தரும், உண்மையான மகிழ்ச்சி தரும் என்று நம்பிக்கை உள்ளவர் நீங்கள். அதை எப்படி என்று வாசகர்களுக்கு விளக்க முடியுமா?
கவிதையும் சரி, மேன்நிலையை எட்டிவிட்ட எந்தப் படைப்புகளானாலும் சரி, காலம் காலமாய் அவிழ்க்க முடியாது சிக்கலாகிவிட்ட ஒரு நூல்கண்டைத் தங்கள் விரல் தொடுகைகளால் மிகமிக நன்றாய் நெகிழ்த்தி வைத்துவிடுவதுதான் அவற்றால் இயலக்கூடியது என்பதுதான் உண்மை. நாம்தான் அந்த நெகிழ்வினால் ஈர்க்கப்பட்டு அதன் சிக்கல் வழியெல்லாம் உள்நுழைந்து, மீட்டு, சிக்கலற்ற நூல்கண்டாய் அதை மாற்ற வேண்டும்.
துக்கத்தின் ஆழத்திலிருந்துதான் மகிழ்ச்சி பிறக்கிறதா?
நிச்சயமாக இல்லை. துக்கத்தின் ஆழத்திலிருந்து மகிழ்ச்சி பிறக்காதது மட்டும் அல்ல, எந்த நல்லுணர்வுகளுமே பிறக்காது. அன்பு, அழகு, அறம் எதுவுமே. எல்லாத் தீமைகளும் பிறக்கும் ஊற்றுக்கண் அது. துக்கத்தின் ஆழத்தில் பிறந்த நற்செயல்கள் என்றும் நம்மை ஏமாற்றிவிடும் பலப் பல உண்டு. காலம் செல்லச் செல்ல அவை தங்கள் சாயம் வெளுத்து தீமைகளே என்பதைக் காட்டிவிடும். இதுதான் நாம் கண்டாக வேண்டிய உண்மை. துக்கமில்லாதபோது - துக்கம் முற்றுமாய் ஒழிந்துபோன இன்மையின்போதுதான் உயிர்களின் ஒத்திசைவின் காரணமாய் மகிழ்ச்சி தோன்றுகிறது. இன்மையிலோ மகிழ்ச்சி என்ற உணர்வுகூடத் துளிர்க்காது.
உங்களுக்கும் பரிசுப் பொட்டலமாகத்தான் வாழ்க்கை இருக்கிறதா?
ஆம். சந்தேகமென்ன!
உங்களைப் பாதித்த படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள்..
அனைத்துத் துறைகளிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் மனிதர்களை அறிந்திருக்கிறேன் அவ்வளவுதான். என்னைப் பாதித்தவர்கள் என்று இவர்களில் யாரையும் சொல்ல முடியாது என்பதை உறுதியாகச் சொல்வேன். இயற்கை, இசை, ஓவியம், நாட்டியம் இந்தக் கலைகளில் பாதிப்படைந்திருக்கிறேன் என்பதைச் சொல்லலாம். இயற்கையைவிடவும், ஒரு புழுபூச்சியைவிடவும், மனித ஆளுமை தனிச்சிறப்புடன் வாழ வேண்டும்; வாழ முடியும். அதற்கு வேண்டியது வேறு, இந்த ஈர்ப்புகள் பாதிப்புகள் அல்ல. என்னை நான் கண்டிருக்கிறேன் இவர்களில் என்பதுபோல முன்பு நான் கூறியிருக்கிற பேட்டிகளில் இருக்கிறார்கள் அவர்கள்.
உங்கள் கவிதைகள் உபதேசம், பிரச்சாரத்தன்மையைத் தொட்டுவிடுவதாகப் புகார் உள்ளது..
கவிதை முதலில் கலையாகவே தோன்றுகிறது. அழகின் ஈர்ப்பு என்று இதைச் சொல்கிறோம். அப்புறம்தான் அது தன் மூலமுதற்பொருளைக் காட்டுகிறது. கவிஞனை மெல்ல மெல்ல ஒரு ஆளுமையாகவே, ஊடகமாகவே ஆக்கிவிடுகிறது. அப்புறம் அவனுடைய எல்லாச் சொல் வகைமைகளிலும் அது ஒளிரத் தொடங்கிவிடுகிறது. கவிதையை மட்டும் நாம் நமக்குப் பிடித்தமாதிரியே காண வேண்டுமென்று அடம்பிடிக்க முடியாது. ஆனாலும் அந்த விமர்சகனின் சங்கடம் நமக்குப் புரியாமலில்லை. கவிதைகளிலுள்ள பொருள் அதைப் படைத்தவன் ஆளுமை தெரியத் தெரியத்தான் விரிவடைவதைக் காண்கிறோம். அந்த ஆளுமையும் கவிதைகளிலேதான் ஒளிர வேண்டியுள்ளது. அவ்வளவுதான். எத்தகைய மெய்யனுபவமும் படைக்கப்பட்டவுடன் தன் உயிர்ப்பை இழந்துவிடுவதால் அய்யத்திற்குரியதாகவே காணப்படும் என்பதும், காண்பதற்குரிய வழி என்ன என்பதை ஒருவன் தானே கண்டுகொள்வதும்தான் வழி. நளனுக்கும், பொய்நளனுக்குமுள்ள வேறுபாடு என்று இதைச் சொல்லலாமா? அல்லது ‘எச்சிலென விழுந்த பின் நக்குவதல்ல முத்தம்’ எனலாமா? வாசகர்களிடையேதான் உள்ளது.
தமிழின் சிறந்த கவிஞர்கள் என்று யார் யாரைச் சொல்வீர்கள்?
விமர்சகர்களுக்கு வழிவிட்டுக் காத்திருப்போம்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு:
sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT