Last Updated : 27 Jan, 2019 09:59 AM

 

Published : 27 Jan 2019 09:59 AM
Last Updated : 27 Jan 2019 09:59 AM

கோபிகிருஷ்ணன்: ஒப்பனைகளற்ற வாழ்வும் எழுத்தும்

தீவிர படைப்பு மனோபாவம் கொண்ட எழுத்தாளனைப் பெரிதும் அலைக்கழித்து அல்லலுறவைக்கும் வறுமை வாழ்வு பாரதி, புதுமைப்பித்தன் காலங்களிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சூழலின் மாறாத் தன்மைகளில் ஒன்றாக இருந்துவருகிறது. செளகர்யமான குடும்பப் பின்புலமோ, பாதுகாப்பான பணி உத்தரவாதமோ இல்லாத வரை ஒரு படைப்பாளியின் வாழ்க்கை துயர் மிகுந்ததாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 

துயர் கவிந்த வாழ்வினூடாகத் தன் எழுத்தைக் கலை நம்பிக்கையோடு பேணியவர் கோபிகிருஷ்ணன். வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்வினூடாகவும் பிழைப்புக்கான சாதுர்யங்கள் எதுவும் தன்னை அண்டாமல் வாழ்ந்தவர். அதேசமயம், ஆங்கிலத்தில் வளமான அறிவு, தட்டச்சில் அபாரமான திறன், உளவியல் மருத்துவப் பணியிலும் சமூகப் பணியிலும் முறையான கல்வி அறிவு, காரியங்களைச் செய்நேர்த்தியுடன் அணுகும் ஆற்றல் என சராசரி செளகர்யமான வாழ்க்கையை அனுபவிக்கப் போதுமான திறமைகள் அவரிடம் இருந்தன. எனினும், தீராத நெருக்கடிக்குள்ளும், மீளாத வேதனைக்குள்ளும், கடும் மன அழுத்தங்களுக்குள்ளும் அலைக்கழிந்த மனிதர் கோபி. அவர் தன் வாழ்நாளில் 17 நிறுவனங்களில் வேலைபார்த்திருக்கிறார். வேலையின்றித் தவித்த காலமும் உண்டு. முன்னர் வேலைபார்த்த நிறுவனத்துக்கே மீண்டும் வேறு வழியின்றிச் சென்றதும் உண்டு. ஏகப்பட்ட ஒண்டுக் குடித்தன வீடுகளில் குடும்பத்தோடு வசித்திருக்கிறார். இத்தகைய வாழ்நிலையிலும்கூட, நியாய உணர்வுகள் மீது இறுக்கமான பிடிமானம் கொண்டவர். இந்தப் பிடிமானம் ஒருவித பிடிவாதத்தை அவருடைய சுபாவமாக்கியது. இந்தப் பிடிமானமும் பிடிவாதமும் எந்த ஒரு வேலையிலும் நீடித்து நிலைக்க விடாமல் அவரை வெளியேற்றிக்கொண்டிருந்தன. அதேசமயம், சென்னைப் பெருநகரக் கீழ்நடுத்தர வர்க்கத்தின் இந்த ஒண்டுக் குடித்தன வீடுகளும், பணியிடங்களும், அவருடைய மனோபாவங்களும்தான் அவருடைய படைப்புலகை நிர்மாணித்தன.

 

‘க்ரியா’வில் பணிபுரிவதற்காக நான் சென்னை வந்ததையடுத்து சில ஆண்டுகள் நாங்கள் சக பணியாளராக இணைந்திருந்தோம். அவருடைய மரணம் வரை 20 ஆண்டு காலம் எங்கள் நட்பு நீடித்தது. அவருடைய எளிமையும் பாந்தமான சுபாவமும் சாந்தமான குணமும் அவர் மீது தனி வாஞ்சையை ஏற்படுத்தியிருந்தது. ‘க்ரியா’வின் முதல் பணியாளர் அவர்தான். ‘க்ரியா’ அலுவலகம் தொடங்குவதற்கு முன்பே, பகுதி நேரப் பணியாளராக மாலை நேரங்களில் ராமகிருஷ்ணனின் வீட்டில் தட்டச்சுப் பணிகளை மேற்கொண்டவர். நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்தபோது, ஒருசமயம் முதன்முறையாகச் சென்னை வந்து சில நாட்கள் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தபோதுதான் கோபியை முதன்முறையாகப் பார்த்தேன். அது வெறும் சந்திப்பு மட்டுமே. பின்னர் நானும் ‘க்ரியா’வில் பணி மேற்கொண்டபோதுதான் நட்பு ஏற்பட்டது. எனினும், அவரை ஒரு படைப்பாளியாக ‘க்ரியா’வில் யாருக்கும் தெரியாது. அவருக்கு ‘ழ’ இதழ் நண்பர்களோடும், ‘மையம்’ ராஜகோபால், எழுத்தாளர் ஆனந்த் ஆகியோருடனும் நெருக்கமான உறவும் நட்பும் இருந்தது. அவர்கள் அவரை உற்சாகப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

 

நான் பணியில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பின், 1984-ல் ஒருநாள் வீட்டுக்கு வந்த கோபிகிருஷ்ணன், ஒரு கவரைக் கொடுத்தார். தான் எழுதிய நான்கைந்து சிறுகதைகள் அதிலிருப்பதாகச் சொல்லி படித்துப்பார்க்கச் சொன்னார். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மனநிலை என்னிடம் படர்ந்தது. போகும்போது, “வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சன்னமான குரலில் சொன்னார். “சரி, கோபி. படித்துவிட்டு உங்களிடம் தனியாகப் பேசுகிறேன்” என்றேன். அவர் கிளம்பிச்சென்ற மறுகணமே படிக்க ஆரம்பித்தேன். அக்கதைகள் எனக்குத் திகைப்பூட்டின. சென்னை நகரக் கீழ்நடுத்தர மக்களின் அன்றாடங்களும் நடத்தைகளும் மனோபாவங்களும் பற்றிய கதைகள் தமிழுக்குப் புதிதில்லை என்றாலும், அந்த அன்றாடங்கள் தரும் அலுப்பும் சலிப்பும் பகடி செய்யப்பட்டிருந்த விதத்திலும், கதை கூறல் முறையிலும் கோபி மிகவும் புதிய ஒருவராக வெளிப்பட்டார். நேர்ப்பழக்கத்தில் தெரியவரும் அவருடைய சாந்தமான சுபாவத்துக்கு மாறாக, எழுத்தில் வெளிப்பட்ட பகடி ஆச்சரியமளித்தது.

 

மறுநாள் காலை தேநீர்க் கடையில் கோபியிடம் அவருடைய கதைகளைப் பற்றிய என் அபிப்ராயங்களைத் தெரிவித்தேன். கதைகளின் எள்ளல் தொனியே அவருடைய கதைகூறல் முறையையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது. இது சுவாரஸ்யமாகவும் அவருடைய தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதேசமயம், புறச் சூழல் மற்றும் மனித நடத்தைகள் குறித்த அவருடைய அவதானிப்புகளிலிருந்து வெளிப்படும் இந்தப் பகடி, சுயஅவதானிப்புக்கும் சுயஎள்ளலுக்கும் இலக்காகும்போது, இன்னும் தீவிரமான நுட்பமான கதையுலகம் வசப்பட ஏதுவாகும் என்பதாக என் அபிப்ராயங்கள் இருந்தன. கோபி மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

கோபிகிருஷ்ணனின் படைப்புக் காலம் 1983 இறுதியிலிருந்து அவருடைய மரணம் வரையான (2003) 20 ஆண்டுகள். அவருடைய முதல் தொகுப்பான ‘ஒவ்வாத உணர்வுகள்’ ஆறு கதைகள் கொண்ட சிறு தொகுப்பாக 1986-ல் வெளிவந்தது. அதன் பிறகு, அவருடைய எழுத்துலகம் விரியத் தொடங்கியது. இளமையிலிருந்து அவரைப் பீடித்துக்கொண்டிருந்த மனநோய்க் கூறுகளுக்காக இறுதிவரை மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்த அவருக்கு எழுத்து, மனநலன் பேணும் ஒரு நல்வழிப் பாதையாக அமைந்தது. அதன் மூலம் தன் இருப்புக்கு மதிப்பளித்துக்கொண்டிருந்தார். மனப்பிறழ்வு வசப்பட்டவர்களின் உலகம் குறித்த அவருடைய புனைவுகளும் பதிவுகளும் தமிழுக்கு ஒரு புதிய பிராந்தியத்தையும், புதிய ஞானத்தையும் அளித்தன.

 

தன்னை ஜோடித்துக்கொள்ளும் காரியமாக அல்ல; தன்னை நிர்வாணப்படுத்திக்கொள்ளும் செயல்பாடாகவே கோபிக்கு எழுத்து இருந்தது. இந்த மனோபாவம் காரணமாகத்தான் அதிகாரத்தை விழையும் சிறு சாயைகூட அவருடைய எழுத்திலோ வாழ்விலோ படியவில்லை. அகந்தையைக் கட்டி எழுப்பித் தன்னைக் கொண்டாடவும், அதன் மூலம் தனக்கான அதிகார வட்டத்தை உருவாக்கவும் முனையும் எழுத்துச் சூழலில் கோபி விசித்திரமானவர். தனியானவர். பாலுணர்வின் தகிப்புகள் உட்பட, தன் சகல மன உணர்வுகளையும் வெகு சகஜமாகவும் படைப்புக் குணத்தோடும் அவருக்கே உரிய நுட்பங்களோடும் வெளிப்படுத்தியதன் மூலம், தன்னை முழு நிர்வாணியாக முன்னிறுத்தியவர். இத்தன்மையால்தான் எவ்வித அங்கீகாரத்துக்கும் விழையாத ஒரு எளிய மனிதராகத் தன் இருப்பை வைத்திருக்க அவரால் முடிந்தது. அதேசமயம், மிக மோசமான நெருக்கடிகளுக்கிடையிலும் செருக்காகவும் கம்பீரமாகவும் தம்மை முன்னிறுத்திய படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். அப்படியான அவசியம்கூட ஏதுமில்லாமல் இருக்க முடிந்த அபூர்வ ஆளுமை, கோபிகிருஷ்ணன். அவருடைய எழுத்தும் வாழ்வும் எவ்வித ஒப்பனைகளுமற்றது!

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x