Published : 09 Dec 2018 09:38 AM
Last Updated : 09 Dec 2018 09:38 AM
அறுபது ஆண்டுக் கால புனைவுப் பயணத்தில் அசோகமித்திரன் ஒன்பது நாவல்களை உருவாக்கியிருக்கிறார். அவருடைய நாவல்கள் குறிப்பிட்ட படைப்புப் பின்புலமும் கதைக்களனும் கதாபாத்திரங்களும் சார்ந்தமைந்த சில பல சிறுகதைகளின் தொகுப்பாகவே உருப்பெற்றிருக்கின்றன. நாவல் கலை கொண்டிருக்கும் பெருவெளியின் சாத்தியங்களுக்கு இடம் கொடுக்காமல் கச்சிதமான சிறுகதைகளின் கூட்டமைப்பாகவே அசோகமித்திரன் தன் நாவல்களைக் கட்டமைக்கிறார். அவருடைய குறிப்பிடத்தகுந்த நாவல்களாக ‘18வது அட்சக்கோடு’, ‘கரைந்த நிழல்கள்’, ‘தண்ணீர்’, ‘ஒற்றன்’ ஆகிய நான்கையும் குறிப்பிடலாம். இந்த நான்கும் அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் அவர் பெற்ற வெவ்வேறு வகையான அனுபவங்களிலிருந்து புனையப்பட்டவை. அவருடைய பால்ய கால அனுபவங்களின் சாயலோடு ஒரு சிறுவனின் பார்வைக் கோணத்தில் உருவாகியிருக்கும் நாவல், ‘18வது அட்சக்கோடு’; ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியதில் கிட்டிய அனுபவங்களிலிருந்து உருவாகியிருக்கும் திரைத் தொழில் சார்ந்த நாவல், ‘கரைந்த நிழல்கள்’; சென்னை நகரின் ஒண்டுக்குடித்தன நடுத்தர மக்கள் சகஜமாக எதிர்கொள்ளும் இன்னல்களின் பிரதிபலிப்பாக அமைந்த நாவல், ‘தண்ணீர்’; 1973-ல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்ட பின்புலத்திலிருந்து புனையப்பட்ட நாவல், ‘ஒற்றன்’.
இந்திய விடுதலைக் காலப் பின்புலத்தில் உருவாகியிருக்கும் ஒரு வரலாற்றுக் காலகட்ட நாவல், ‘18வது அட்சக்கோடு’. ஹைதராபாத்தைக் களமாகக் கொண்டது. அங்கு வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்து இளைஞனின் அனுபவங்களாக விரிவது. இந்திய விடுதலைக்குச் சற்று முன்பான காலத்தில் ஒரு சிறுவனின் பார்வையில் தொடங்கி, அதற்குப் பின்னான சில ஆண்டுகள் வரை - காந்தியின் மரணம் வரை - நிகழ்ந்த வரலாற்று மாறுதல்களை மக்கள் திரளின் அல்லல்களோடும் அவதிகளோடும் மத துவேஷங்களின் குரூரங்களோடும் அகப்படுத்தியிருக்கும் நாவல். கால நகர்வில் அந்தச் சிறுவனும் இளைஞனாகிறான். இக்காலகட்டத்தில் ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானோடு இணைய விருப்பம் கொள்கிறார். அதைச் சாத்தியமாக்கும் பொருட்டு மதக் கலவரம் நிகழ்த்தப்படுகிறது. அந்நியோன்யமாக இருந்தவர்களிடையேயும்கூட மத வேற்றுமை இனம் காணப்பட்டு துவேஷம் வெளிப்படுகிறது. ரசாக்கர்களின் கொடூரத் தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் அநாதைகளாகத் தப்பி ஓடுவது, இந்தியாவுடன் இணைய மறுக்கும் நிஜாம் சமஸ்தானத்தைப் பணியவைக்கும் அரசு நடவடிக்கைகள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்களின் பெரும் துயர் தாங்கிய கலவர அரசியலின் புனைவாக்கம்.
அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தது, ‘தண்ணீர்’. பெருநகர சாமானியர்களின் உலகம். சென்னை மாநகரம் தண்ணீர்ப் பிரச்சினையில் தத்தளிக்கும் பின்னணியில் படைக்கப்பட்டிருக்கும் நாவல். நகரம் எதிர்கொள்ளும் வறட்சியில் மனித மனங்கள் வறண்டுவிட்டிருப்பதையும் பிரச்சினையிலிருந்து விடுபடும்போது மனம் கனிவும் பரிவும் கொள்வதையும் ஊடுபாவாகக் கொண்டது. இப்பின்புலத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜமுனா, சாயா என்ற இரு சகோதரிகளின் வாழ்க்கைப் பாடுகளே இந்நாவல். அதிலும் குறிப்பாக மூத்த சகோதரி ஜமுனா எதிர்கொள்ளும் இன்னல்களும் துயர்களுமே பிரதானக் கதையோட்டம். குழாயடியில் ஜமுனாவுக்கு அறிமுகமான டீச்சர் மூலம் அவள் பெறும் வெளிச்சம் அவளின் இருளைப் போக்குகிறது. டீச்சர் வழி வெளிப்படும் பரிவுக் குரலே படைப்பின் குரலாக இருக்கிறது.
‘கரைந்த நிழல்கள்’, நம் காலத்தின் மிகப் பிரமாண்ட தொழில் துறையான திரை உலகம் பற்றியது. நம் வாழ்வெளியில் ஒளிரும் அதன் சூரியப் பிரகாசத்துக்கு நேர்முரணாக அவ்வுலகில் அப்பிக்கிடக்கும் இருளை வெளிச்சமிட்டுக் காட்டும் நாவல். ஒரு திரைப்படம் அதன் தயாரிப்பில் எதிர்கொள்ள நேரிடும் இடர்கள் எண்ணற்றவை. தயாரிப்பு முழுமையடையாமல் போவதற்குப் பொருளாதாரக் காரணங்களுக்கு அப்பால் ஆணவம், மனித மன விகாரங்கள், இன-மொழி அரசியல் என எத்தனையோ காரணிகள் செயல்படுகின்றன. இத்தொழிற்துறையின் விநோதமான சிடுக்குகளைப் பல கோணங்களில் நாவல் வெளிப்படுத்துகிறது. தயாரிப்பாளர்கள், நட்சத்திர நடிகர் – நடிகை, இயக்குநர்கள் என்ற மேல்மட்டத்திலிருந்து, மேனேஜர், உதவி இயக்குநர்கள், குழு நடன மங்கையர்கள், வாகன ஓட்டுனர்கள் என்ற அடிமட்டம் வரையான பாத்திரங்களின் கனவுகளையும் அவதிகளையும் இழை இழையாய் கோத்துப் படைக்கப்பட்டிருக்கும் நாவல்.
இந்த வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதையே தன் புனைவுகளுக்கான அவதானிப்புகளாகக் கொண்டியங்கும் அசோகமித்திரன் அதனூடாக மனிதர்கள் இந்த வாழ்வை வாழ்ந்து கடப்பதைப் பரிவுடன் பார்ப்பவராகவும் இருக்கிறார். வாழ்க்கை என்னவாக இருக்க முடியும் என்பதிலோ, வாழ்வுக்கான மாறுபட்ட சாத்தியங்களைக் கண்டடைவதிலோ அவர் எவ்விதப் பிரயாசைகளும் கொள்வதில்லை. நிலவும் வாழ்க்கை என்பதுதான் பிரதானம். மனிதர்கள் மீதான அவருடைய பரிவும் வாஞ்சையும் சன்னமான குரலாகப் படைப்புகளில் ஒலித்தபடி இருக்கிறது.
நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் ஒரு கட்டுரையாளராக அசோகமித்திரன் தனித்துவம் கொண்டவர். அவர் தன்னுடைய படைப்புகளைப் போலவே கட்டுரைகளையும் வணிக, நடுத்தர, தீவிரமான இதழ்கள் என எல்லாத் தளங்களிலும் எழுதியுள்ளார். சினிமா, சமூகம், கலை இலக்கியம் எனத் தன் கால வாழ்வின் பிரதிபலிப்புகள் குறித்த ஆவணப் பதிவுகளாகவும் அவதானிப்புகளாகவும் வரலாற்றுத் தகவல்களாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இன்னும் குறிப்பாக, சினிமா அவருடைய வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. சினிமா பற்றிய அவருடைய பதிவுகள் தமிழில் அபூர்வமானவை. அவருக்குப் பரவசம் தந்த வெகுஜனத் திரைப்படம் முதல் கலைப் பெறுமதிமிக்க படங்கள் வரை வெகுவாகப் பேசியிருக்கிறார். வைஜயந்திமாலா பற்றியும் எழுதியிருக்கிறார்; இன்க்ரிட் பெர்க்மன் பற்றியும் எழுதியிருக்கிறார். ஸ்ரீதர் பற்றியும் எழுதுகிறார்; இங்க்மர் பெர்க்மன் பற்றியும் எழுதுகிறார். இவை, ரசனையான தகவல்களும் பதிவுகளும் நுட்பமான அவதானிப்புகளும் கொண்ட சுவாரஸ்யமான கட்டுரைகள். ‘இதர கலைகளால் சாதிக்க முடியாததை சமூகரீதியாக சினிமா மிகப் பெரிய அளவில் சாதித்தது’ என்று கூறும் அசோகமித்திரன், ‘உலகில் ஜனநாயக உணர்வு பரவலானதற்குச் சினிமா ஒரு முக்கிய காரணம்’ என்கிறார்.
சினிமா பற்றிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பான ‘இருட்டிலிருந்து வெளிச்சம்’ நூலின் முன்னுரையில் ‘மேலோட்டமாகப் பார்த்தால் இவை சினிமா பற்றிய கட்டுரைகள். ஆனால், எனக்கு இவை வாழ்க்கையை விவாதிப்பதாகவே தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அவருடைய எல்லாப் புனைவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். நம் வாழ்வின் மீதான பரிவுணர்வுடன் கூடிய, மெளனம் கவிந்த விவாதங்களே அவருடைய எழுத்துலகம்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT