Published : 16 Dec 2018 08:58 AM
Last Updated : 16 Dec 2018 08:58 AM
சாகித்ய விருது இம்முறை அறிவிக்கப்பட்டபோது எந்தச் சர்ச்சையும் இல்லை. சரியான ஒருவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வைப் பரவலாகக் காண முடிந்தது. சமூக வலைதளங்களில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த நூற்றுக்கணக்கானோர் அவருடன் எடுத்துக்கொண்ட படங்களுடன் வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு அறைக்குள்ளே தன்னை அடைத்துக்கொள்ளாமல், தொடர்ந்து பயணித்து உரையாடிக்கொண்டேயிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; இயக்கம் என்பதற்கான அடையாளம் அது. விருது அறிவிக்கப்பட்ட மறுநாள் எடுத்த பேட்டி இது.
சாகித்ய விருது கிடைத்தபோது உங்களுக்கு ஏற்பட்ட முதல் உணர்வு என்ன?
எழுத்தை நம்பியே ஒருவர் வாழலாம். அப்படி வாழ்ந்தால் அவருக்கு உரியது கிடைக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
இந்த விருது உங்களுக்கு தாமதமாகக் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
எப்போது விருது கொடுக்கப்பட்டாலும் அதற்கு அர்த்தம் ஒன்றுதான். நீங்கள் செய்த பணிகள் சிறப்பானவை; இனி அதைவிடச் சிறப்பாக நீங்கள் பணியாற்ற வேண்டும்!
அடிப்படையில் நீங்கள் யாரை எழுதுகிறீர்கள்?
பத்தாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். 250-க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் வேறுவேறு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது. ஆனால், அனைத்துக்கும் பின்னால் இருப்பது ஒன்றுதான் - தமிழ் வாழ்வின் சாரம். வீழ்ச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனுக்கு முதலில் நம்பிக்கைதான் இல்லாமல் போகும். அவன் பார்க்கக்கூடிய எல்லாமே அறம் அழிந்ததாக இருக்கும். அப்போது அவன் ஒரு தத்தளிப்புக்கு உள்ளாகிறான். அவனைத்தான் நான் திரும்பத் திரும்ப எழுதுகிறேன். எங்கோ ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து, விளையாடித் திரிந்துகொண்டிருந்த, இந்த உலகத்தின் எதுவும் இல்லாத ஒரு எளிய மனிதன். இன்றைக்கு எங்கோ ஓர் ஊரில் இலையாக மிதந்துகொண்டிருக்கிறேன். சில நேரம் காற்றால் எல்லா இலைகளையும் கிழித்துச் சுக்குநூறாக்கிவிட முடியாது. அந்த இலைகள் பறந்துபோகப் பழகிவிடும். மணல் துகளைப் போலத்தான். என்னதான் ஒரு மணல் துகள் காற்றில் பறந்துகொண்டிருந்தாலும் காற்றால் ஒரு மணல் துகளை அழிக்கவே முடியாது. ஒரு எழுத்தாளனாக நான் என்னைப் பற்றி அப்படித்தான் நினைத்துக்கொள்கிறேன்.
ஒரு எழுத்தாளராக தனிமை உங்களுக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
நான் எப்போதுமே வெம்பரப்பான, எதுவுமே இல்லாத ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். எங்களுக்குப் பேருந்தே ரொம்பப் பின்னாடிதான் வருகிறது. ஒன்றுமே இல்லாத ஊர். எப்பவும் வெயில். வாழ்நாள் முழுக்க நாம் பார்த்துக்கொண்டே இருந்தது அதுதான். நீண்ட பகல் பொழுதுகள், ஆட்களே இல்லாத வெளி. சொந்த ஊரே என் மனதில் தனிமையாகத்தான் நிலைத்திருக்கிறது. ஒரு எழுத்தாளனின் நிரந்தரத் துணை அவனது தனிமைதான். நீர்க்குமிழி இருக்கிறதல்லவா, அதில் அந்த நீரே ஒரு உருண்டையாக மாறுகிறது. அதேபோல் அந்தத் தனிமை என்ன செய்கிறதென்றால் உங்களைச் சுற்றி நீரால் ஆன ஒரு திவலையை உருவாக்குகிறது. பெரிய கோளத்தை உருவாக்குகிறது. அது உங்களைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கிறது. அது உண்மையிலேயே பல நேரங்களில் நமக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. அதன் உள்ளே நீங்கள் வசிப்பதென்பது சந்தோஷம்தான். நான் தனிமையை விரும்பக்கூடியவன். தனித்து இருப்பதில்லை தனிமை. நீங்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனித்து இருந்தாலும் உங்கள் தனிமை என்னும் சாறு இருக்கிறதல்லவா, அதற்குள்ளேயேதான் நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்கள் படைப்பின் மையம் என்று எதையாவது அடையாளம் காண்கிறீர்களா?
மனிதர்கள் தங்கள் நினைவாலேயே வாழக்கூடியவர்கள். அவர்களது நினைவுகள்தான் அவர்களின் மிகப் பெரிய சொத்து. அது நல்ல நினைவாக இருக்கலாம், கெட்ட நினைவாக இருக்கலாம். ஆனால், நினைவுகளைப் புறக்கணித்து மனிதர்களால் வாழ முடியாது. அதே நேரத்தில் நினைவுகளைத் தூக்கிக்கொண்டே வாழவும் முடியாது. என்னுடைய நினைவுகளில் நான் ஒரு பண்பாட்டால், ஒரு மொழியால், குறிப்பிட்ட சில விஷயங்களால் உருவாக்கப்பட்ட ஒரு மனிதன். ஆனால், தனியாக நான் யார்? என்னுடைய அந்தரங்கமான உணர்வில் ஒரு அடிப்படைக் கேள்வி இருக்கிறதல்லவா! அதுதான் மையம்!
பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அவர்கள் பிறந்தது முதல் இருபது வயது வரையிலான அனுபவங்கள்தான் அவர்களின் படைப்புகளின் கச்சாப்பொருளாக ஆகின்றன. உங்கள் சிறு வயது அனுபவங்கள் எந்த அளவுக்குக் கச்சாப்பொருளாக இருக்கின்றன?
என் சொந்த வாழ்க்கையை என் எழுத்துக்கான ஆதாரமாக வைத்துக்கொள்ள மாட்டேன். உதாரணத்துக்கு, எனக்கு வலி இருக்கிறது என்று சொல்வதற்கும் என் உடலுக்கு வலி இருக்கிறது என்று சொல்வதும் ஒரே விஷயம்தான். ஆனால், என் உடலுக்கு வலி இருக்கிறது என்று சொல்லும்போது நான் என்னை நீக்குகிறேன். நான் ரொம்பவும் குறைவாகத்தான் இலக்கியத்தில் என் சொந்த வாழ்க்கையைக் கொண்டுவருகிறேன். அதுவும்கூட கட்டுரைகளில்தான். புனைவின் பெரிய சாத்தியம் என்னவென்றால் அது என்னையல்ல... என் ஊரையே பிரதிபலிக்கலாம். என் நிலத்தையே பிரதிபலிக்கலாம் .அங்கு நான் ஒருத்தன் அல்ல. பால்ஸாக் ஒரு பேட்டியில் கூறினார் என்று நினைக்கிறேன். “நீங்கள் யார்?” என்று கேட்டதற்கு, “பிரெஞ்சு சமூகமே நான்தான். நான் பால்ஸாக்கெல்லாம் கிடையாது. என் தலைக்குள் இருக்கக்கூடியது பிரெஞ்சு சமூகம்” என்றிருக்கிறார். அது பால்ஸாக்குக்கு மட்டுமல்ல, எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். அது எனக்கும் பொருந்தும். என் சொந்த வாழ்க்கை என் ஆளுமையை உருவாக்கியது. அம்மா சைவச் சமயப் பின்னணியில் வந்தவர், அப்பா திராவிட இயக்கப் பற்றாளர் என்ற பின்னணி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற மனிதனுக்குத்தான் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளனுக்கு இந்தப் பின்னணி கிடையாது. நான் எத்தனையோ நாடுகளுக்குப் போயிருக்கிறேன். ஆனால், என்னுடைய ஒரு கதையில்கூட ஒரு விமானமும் வந்ததே கிடையாது. பல நாள் எனக்கே தோன்றுவதுண்டு, நான் ஏன் அதையெல்லாம் எழுதுவதில்லை? எழுத்தாளனாக எனக்குள் ஒருவன் இருக்கிறான் அல்லவா, அவன் இந்த உலகத்தினுடையவனே அல்ல என்பதுதான் இதற்கான பதில்.
காதல் எந்த அளவுக்கு எழுத்துக்கு அவசியமாகிறது? ஏன் கேட்கிறேன் என்றால், மௌனியைக்கூட சொல்வார்கள், காதலித்திராத ஒருத்தர் அற்புதமான காதல் கதைகளை எழுதியிருக்கிறார் என்று…
காதல் அனுபவம் இல்லாமலேயே மௌனி காதலைப் பல்வேறு நிலைகளில் எடுத்துக்கொண்டு போகிறார். உருவம் ஒரு காதலுக்குத் தேவையா அல்லது படிமம்தான் தேவையா? அவர், படிமம்தான் தேவை என்கிறார். அந்த படிமத்தையும் அவர் என்ன சொல்கிறார் என்றால் அழிவே இல்லாத ஒரு படிமம் இருக்கிறது என்கிறார். நான் பார்த்தவரைக்கும் காதலுற்ற ஒருத்தனின் மனதில் அவன் காதலித்த பெண்ணின் நினைவு ஒரு அழியா நினைவாக மாறிவிடுகிறது. அப்புறம் பல நேரங்களில் அவர் என்ன நினைக்கிறார் என்றால் நினைவுகளில் வாழ்வதே ஒரு மனிதனுக்குப் போதும் என்கிறார். நிஜம் மாறிக்கொண்டே இருக்கும்.
சீனாவில் என்ன செய்வார்கள் என்றால் ஒரு பெண் திருமணம் ஆகிப் போகும்போது அந்தத் திருமண வயதில் அந்தப் பெண்ணின் முழு உருவத்தையும் வரைந்து கணவனுக்குப் பரிசாகக் கொடுத்துவிடுவார்களாம். எதற் கென்றால், ‘‘இனிமேல் இவள் மாறிக்கொண்டே இருப்பாள் வாழ்க்கையில். ஆனால், மாறாத ஒரு பெண்ணை நாங்கள் உன்னிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்பார்களாம். அந்தப் படத்தை, அதாவது அவளின் இளவயது தோற்றத்தை, அந்தக் கணவன் வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருப்பானாம். அந்தக் குடும்பத்தில் பிரிவே வராதாம். இவள்தான் இப்படி ஆகிவிட்டாள் என்று அவன் நினைத்துக்கொள்வானாம். ஏன் படத்தைக் கொடுக்கிறார்கள் என்றால், அழிவே இல்லாத அழகைக் கொண்ட பெண் ஒருத்தி இருக்கிறாள் என்று அவனுக்கு எப்போதும் நினைவுபடுத்துவதற்காகத்தான்.
சீனாவிலேயே இன்னொரு நம்பிக்கையும் இருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் எந்த வயதிலும் தன்னை அழகாக்கிக்கொண்டுவிட முடியும். ஆனால், ஆணால் அது முடியாது. மௌனி அதை உணர்ந்திருக்கிறார். மௌனியின் கதைகளில் வரும் பெண்கள் எல்லாருமே தங்கள் உடலால் அல்ல உடலைத் தாண்டிய ஒரு கவர்ச்சியால், வசீகரத்தால் உருவானவர்கள். அந்த வசீகரத்தை மொழி வழியாக அவர் உருவாக்கியும் காட்டுகிறார். அவருக்குக் கோயில் கருவறையில் இருக்கும் தெய்வங்களிடம் இப்படி ஒரு ஈடுபாடு இருந்தது. அதனை லா.ச.ரா. ஆராதனை செய்கிறார் என்றால் மௌனி விலகி நின்று அதைப் பார்க்கிறார். அதைப் பார்க்கும்போது அவருக்கு ஒரு மயக்கம் வருகிறது. அடுத்ததாக, அவருக்கு அடிப்படையான கேள்வி மரணத்தைப் பற்றியது. மரணம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னவாக இருக்கிறது என்பதுதான். அதைக் கடந்து அவன் நினைவுகள் யார்யார் வழியாகவோ வாழ்ந்துகொண்டே இருக்கின்றனவே. மனிதனுடன் அவன் நினைவுகளும் மறைகிறதில்லையே!
எந்த வயதில் முழு நேர எழுத்தாளராய் ஆவது என்று முடிவெடுத்தீர்கள்?
நான் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தேன். அப்படியே படித்து முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் பேராசிரியராக ஆகலாம் என்று நினைத்தேன். எனக்குப் பயிற்றுவிப்பதில் விருப்பம் அதிகம். மதுரையில் தோழர் எஸ்.ஏ.பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்தான் சொன்னார், “வகுப்பறையில சொல்லிக்கொடுக்குறவங்க மட்டும்தான் வாத்தியாருங்க இல்ல. நீ பாடம் சொல்லிக்கொடுக்குறதுன்னா எல்லாத்தையும் எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்கலாமேடா. கட்சிப் பணின்னு நாங்களும் எல்லோருக்கும் கத்துக்கொடுத்துட்டுதான் இருக்கோம். எழுத்தாளன்தான்டா பெரிய வாத்தியாரு. அவன் சொன்னா உலகமே கேக்கும்டா.” அது சரி என்று எனக்குத் தோன்றியது. முனைவர் பட்டம் வாங்கிவிட்டேன் என்றால் கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைத்துவிடும். அப்புறம் கல்லூரி வாழ்க்கை என்னைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும். ஆகவே, முனைவர் பட்டப்படிப்பைப் பாதியோடு நிறுத்திவிட்டேன். “என்ன பண்ணப்போற?” என்ற வீட்டாரின் கேள்விக்கு “நான் என் படிப்பு முழுக்கவும் உங்கள்ட்ட சரண்டர் பண்ணிடுறேன். இனி நான் வெறும் ஆள். இனிமேல் நான் என்னவாக ஆகிறேன் என்று பார்க்கப்போகிறேன். ஏதும் முடியவில்லை என்றால் திரும்பவும் வந்து இந்த சான்றிதழ்களையெல்லாம் திரும்ப வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். இன்றுவரை அந்தச் சான்றிதழ்கள் அங்கேதான் இருக்கின்றன.
முழுநேர எழுத்தாளராக எடுத்த முடிவு சுலபமான வாழ்க்கையைத் தந்ததா?
நான் சென்னைக்கு வரும்போது எனக்கு எந்தப் பிடிமானமும் கிடையாது. எல்லாவற்றையும் நான் உருவாக்கிக்கொண்டேன். அப்படி உருவாக்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், “நான் உறுதியாக இருந்தால் அது நடக்கும்” என்றுதான். அதுதான் நடந்தது. இது சொல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், கடந்துவரும்போது மிகத் துயரமாக, மிகக் கடுமையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நான் என்ன எழுதினாலும் இறுதியில் கசப்புதான் எனக்கு மிஞ்சியது. எங்கேயோ ஒருமுறை நான் இப்படிச் சொன்னேன், “நான் ஒரு ஷெனாய் வாத்தியக்காரன் மாதிரி. அந்த வாத்தியத்தைக் கல்யாண வீட்டில் கேட்டாலும் சோகமாக இருப்பதுபோல்தான் தோன்றும்” என்று. அது உண்மையில் கல்யாணத்தில் வாசிக்கும் வாத்தியம்தான் என்றாலும் நம் தமிழ் சினிமாவில் அதை மரணத்துக்கு வாசிக்கும் வாத்தியமாக ஆக்கிவிட்டார்கள். இருந்தாலும் பிஸ்மில்லா கான் வாசிக்கும்போது அதில் ஒரு துயரம் அடியில் இருக்கும், ஒரு பெருமூச்சு இருக்கும். என் கதைகளுக்குள்ளும் அப்படித்தான். சில வாசகர்கள் என்னிடம் கேட்பார்கள், “ஏன் சார் சந்தோஷமாகவே உங்கள் கதைகளை முடிக்க மாட்டீர்களா” என்று. “அது நான் இல்லைங்க. வாத்தியத்தோட தவறு” என்பேன்.
அப்படி அலைச்சலும் தவிப்புமாகக் கழிந்த நாட்களில் இலக்கியம் படைத்ததற்கும் தற்போது இலக்கியம் படைப்பதற்கும் என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்?
அப்போது எதையெதையோ தேடி அலைந்தேன். கிடைக்கவில்லை என்றால் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளானேன். கொஞ்சம் வயதான பிறகு, எனக்குத் தோன்றியதெல்லாம், ஒவ்வொருத்தரும் செய்ய வேண்டிய பணி ரொம்பவும் சிறியதுதான். அந்தப் பணியைத்தான் செய்ய முடியும். அந்தப் பணியைச் செய்வதற்குத் தேவையானதெல்லாம் காலடியிலேயே இருக்கின்றன. இப்போது சில நாட்களாக எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்... நம் தமிழ் மொழியில் எவ்வளவு பெரிய மாஸ்டர்கள் இருக்கிறார்கள்! உண்மையாகவே தேவாரத்திலும் திருவாசகத்திலும் கம்பராமாயணத்திலும் கையாளப்பட்ட மொழியைப் பார்த்தால் தமிழ் நிஜமாகவே ஒரு ‘மேஜிக்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்படியெல்லாம் வெளிப்படுத்த முடியுமா, நுண்மைப்படுத்த முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் சிற்பங்களில் அவ்வளவு நுண்மையாக இழைத்திருப்பார்கள். அதைவிடப் பல்லாயிரம் மடங்கு மொழியில் இழைத்திருக்கிறார்களே இவர்கள்!
கதைகளைத் தேடி அலையும்போது உங்களுக்கு நிறைய விசித்திர அனுபவங்கள் கிடைத்திருக்குமல்லவா…
நிறைய! ‘தாவரங்களின் உரையாடல்’ என்று ஒரு கதைக்கான கரு எனக்குக் கிடைத்த தருணம் அப்படிப்பட்டது. காட்டுக்குள் போய்க்கொண்டே இருந்தேன். திடீரென்று எனக்கு ஒரு காட்சி தோன்றியது. சப்தமும் காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றது என்பதைக் காடு எனக்கு அப்போது கற்றுக்கொடுத்தது. கண் முன்னாடியே ஒரு காட்சி இருக்கிறது. சத்தம் எங்கிருந்தோ வந்துகொண்டிருக்கிறது. அருவி இங்கே இருந்தால் அதன் சத்தம் வேறு திசையிலிருந்து வருகிறது. காடு மர்மமாக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் அது சத்தமும் காட்சியும் ஒன்றுசேர்ந்த கலவை அல்ல. பறவையின் சத்தம் எங்கோ கேட்கிறது. பறவை இங்கே பறந்துபோகிறது. அதிலிருந்து ஒரு கருவை உருவாக்கத் தொடங்கினேன். அதன் பிறகு அது காடு தொடர்பானதாக இல்லாமல் புலன்கள் தொடர்பானதாக மாறியது. புலன்கள் தொடர்ந்து மயக்கத்துக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கின்றன. புலன் மயக்கங்களைப் பற்றி எழுதுவதுதான் அந்தக் கதை. புலன் மயக்கம்தான் அருவி. இன்னொன்று, எப்போதும் முடிவில்லாமல் கொட்டிக்கொண்டே இருக்கும் அருவி உங்கள் உடம்பில் ஓடும் ரத்தம்தான். உலகத்திலேயே ஓடக்கூடிய மிகப் பெரிய ஆறு உங்கள் உடம்பில் ஓடும் ரத்தம்தான். நீங்கள் அந்த ஆற்றின் கரைதான். அதை நான் உணர்ந்தேன். அப்படித்தான் அந்தக் கதையை எழுதினேன். எழுதும்போது இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால், புனைவுக்குள் வரும்போது எல்லாமே மாறிவிட்டது. அது வேறொரு கதையாகிவிட்டது. கதையின் விதி அதுதான் என்று எனக்கு அப்போது தோன்றியது. கதை நீ விரும்பியதையெல்லாம் செய்யாது, அதை உருவாக்கியவுடனே அது தன்னுடைய உடம்பை எடுத்துக்கொள்கிறது என்று எனக்குத் தோன்றியது.
தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் தங்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதே நேரத்தில் தங்கள் சக எழுத்தாளர்களையோ இளம் எழுத்தாளர்களையோ அங்கீகரிப்பது குறைவாகத்தானே இருக்கிறது?
நான் அப்படி இல்லை. நான் எழுத வரும்போது யாரோ ஒருத்தர் என்னை இனங்கண்டு அங்கீகரித்திருக்கிறார்கள். என் முன்னோடிகள் எல்லாருமே அதைத்தான் செய்திருக்கிறார்கள். என் முன்னோடிகள் எல்லாருமே ஆட்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் எழுத்தைக் கொண்டாடியபோது நான் மட்டும் வேறு விதத்தில் எப்படி இருக்க முடியும்?
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய எழுத்துகளை விமர்சகர் எஸ்.ராமகிருஷ்ணனின் கண்கொண்டு பார்ப்பதுண்டா?
பார்ப்பேன். என்ன ஆகும் என்றால் எழுதி முடித்த பிறகு எல்லாப் புத்தகங்களும் ஒரு ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும். நாம் நினைத்ததில் பாதிகூட செய்ய முடியவில்லையே என்ற அதிருப்திதான் அது. சரி, அடுத்த புத்தகத்தில் சரிசெய்துகொள்ளலாம் என்று நினைப்பேன். இந்த அதிருப்திதான் உண்மையில் என்னை எழுத வைக்கிறது.
முழுநேர எழுத்தாளர் என்ற முறையில் உங்கள் பணியில் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு போன்றவற்றையெல்லாம் பற்றிக் கூறுங்கள்…
நான் எந்த அளவுக்குக் கட்டுப்பாடில்லாமல் ஊர்சுற்றுகிறேனோ அந்த அளவுக்கு மிகவும் கட்டுப்பாடான எழுத்தாளன். நேரக் கட்டுப்பாட்டை நான் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். என் பணிகளைத் திட்டமிட்டுச் செய்பவன். அப்படிச் செய்ய முடியாதபோது அதற்கென்று நேரம் ஒதுக்கிச் செய்துவிடுவேன். தினசரி படிக்க, எழுத, சினிமா பார்க்க, இசை கேட்க என்று நேரத்தை ஒதுக்கிவிடுவேன். எழுதவில்லையென்றாலும் எழுத்தைப் பற்றிய எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். பெரிதும் பருவம் சார்ந்தே நான் எழுதுவேன். மழைக்காலத்தில் கூடுதலாக எழுதுவேன்.
உங்கள் எழுத்துகளில் குடும்பத்தாரின் பங்களிப்பு என்ன?
எப்போதுமே “நீ என்ன பண்ற, என்ன சம்பாதிக்கிற?” என்றெல்லாம் கேட்கவே மாட்டார்கள். மாறாக, “உனக்கு நான் என்ன பண்ணணும், உனக்கு என்ன தேவை?” என்றுதான் கேட்பார்கள். இப்படிக் கேட்பவர்கள் என் குடும்பத்தினர் மட்டுமல்ல என் நண்பர்களும் வாசகர்களும்கூட. என் அம்மா, அப்பா சகோதர, சகோதரிகள் ஆரம்பித்து என் மனைவி சந்திர பிரபா, பிள்ளைகள் வரை எனக்கு உதவுவதால், எனக்கு வேறு வேலைகள் தராததால்தான் என்னால் எழுத முடிகிறது.
உங்கள் மனைவியைப் பற்றிக் கூறுங்களேன்…
எங்களுடையது காதல் திருமணம். என் நண்பரின் தங்கைதான் என் மனைவி. புத்தக வாசிப்பின் மூலம்தான் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். காதல், அப்புறம் திருமணம் என்று இத்தனை ஆண்டு காலமாக என்னை எழுத்தில் மட்டுமே முழுமூச்சில் ஈடுபட வைத்துக்கொண்டிருப்பவள் அவள். சம்பிரதாயத்துக்குச் சொல்லவில்லை. என் மனைவி, பிள்ளைகளால்தான் என் எழுத்துப் பணி சீராக நடக்கிறது.
விருது கிடைத்தவுடன் உங்கள் அம்மா, அப்பா என்ன சொன்னார்கள்?
ரொம்பவும் சந்தோஷம். “எங்களுக்கும் கிடைச்ச விருதுதானப்பா” என்று சொன்னார்கள்.
உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?
தஸ்தாயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும்தான். தமிழில் புதுமைப்பித்தன். தனிப்பட்ட வகையில் என்னை உருவாக்கியவர்கள் கவிஞர் தேவதச்சனும் எஸ்.ஏ.பெருமாளும் என்பதால் நான் எப்போதும் அவர்களின் மாணவன் என்றே சொல்லிக்கொள்வேன்.
இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு நம்பிக்கை தருபவர்கள் யார்? அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நிறைய பேர் நம்பிக்கை தருகிறார்கள். அவர்களில் ஒருவர் பேரைச் சொல்லி இன்னொருவர் பேரை என்னால் விட முடியாது என்பதால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல நான் விரும்பவில்லை. ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் இதைச் சொல்வேன். எந்த அளவுக்கு தமிழில் பின்னாடியே போகிறீர்களோ அந்த அளவுக்கு வைரக்கற்களைக் கண்டடைவீர்கள். நீங்கள் ஒருபோதும் தமிழ் எழுத்தாளராகத் தனிநபர் இல்லை. உங்கள் முன்னோடிகளின் தொடர்ச்சிதான். பாரதி, புதுமைப்பித்தன், கபிலர், பரணர் என்று எல்லாருடனும் எனக்குச் சொந்தம் இருக்கிறது. தாத்தா சட்டைப் பையிலிருந்து காசை எடுத்துப் பேரன்கள் செலவுசெய்வதுபோல் அவர்களின் தமிழை நாம் எடுத்துக்கொள்ளலாம்!
- ஆசை
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
படங்கள்: புதுவை இளவேனில்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT