Published : 08 Mar 2018 09:43 AM
Last Updated : 08 Mar 2018 09:43 AM
மரணத்தை ஒரு மிடறு ஷாம்பெயின் குடித்து, புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவர் ரஷ்ய இலக்கிய உலகின் சிறுகதை மன்னன் ஆண்டன் செகாவ்.
செகாவ் எப்பொழுதும் தன்னை நேர்த்தியாக வைத்துக்கொள்ள விரும்பியவர். மிகுந்த அழகியல் உணர்ச்சியுடன் தன்னை அலங்கரித்துக் கொள்பவர். கூர்மையான பார்வையுடன் நம்மைப் பார்க்கும் அவரின் புகைப்படங்கள் உள்ளத்தைக் கவர்பவை.
செகாவ் ஒரு மருத்துவர். ஒரு நோயாளியும்கூட. 24 வயதிலேயே மரணம் செகாவின் கதவுகளைத் தட்டிவிட்டது. பேசிக்கொண்டு இருக்கும்போதே செகாவுக்கு வாயில் இருந்து ரத்தம் ஒழுகத் தொடங்கிவிடும். கடுமையான காசநோய் அவருடைய நுரையீரலை அரிக்கத் தொடங்கியிருந்தது. தன்னுடைய சகோதரன் ஒருவன் காசநோயினால் இறந்தபோது, செகாவ் தன்னுடைய மரணமும் தீர்மானிக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.
எழுத்தில் கரைந்தவர்
மரணத்தை அழகான மேலாடையைப் போல் அணிந்துகொண்டுதான் செகாவ், மிகத் தீவிரமாக எழுதினார். மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். நிறையப் பெண்களைக் காதலித்தார். நான்கைந்துப் பெண்களை மிகத் தீவிரமாகக் காதலித்தார். மரணத்துக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய 40-வது வயதில், ஒல்கா நிப்பர் என்ற நாடக நடிகையைத் திருமணம் செய்துகொண்டார்.
செகாவை நுட்பமாக அணுகிப் பார்த்தால், அவருக்குள் சீராக இயங்கிய இரண்டு ஆளுமைகளை உணர முடியும். ரஷ்யாவின் மீது தீராத காதல் கொண்ட எழுத்தாளர். மனிதர்களை அபரிதமாக நேசித்தவர். தன்னுடைய கதைகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களின் பாத்திரப் படைப்புகளைச் சிற்பியின் கலைநேர்த்தியுடன் எழுதியவர்.
பூக்களின் ரசிகன்
நீதியை போதிப்பது கலையின் வேலையல்ல. நீதிபோதனைகளை வாந்தி எடுப்பதை இலக்கியம் என்று தன்னால் ஒப்புக்கொள்ள முடியாது என்று கறாரான தீவிர இலக்கியவாதியான செகாவ் ஒருபுறம். இந்த செகாவ் இயற்கையின் பேரழகில் தன்னைப் பறிகொடுப்பவர். கீரிப்பிள்ளையை அணைத்துக்கொண்டு அன்பு காட்டுபவர். கட்டாந்தரையை சீர்படுத்தி, வண்ண வண்ணப் பூக்களைப் பயிரிட்டுப் பூத்துக் குலுங்கும் பூக்களை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருப்பவர்.
இன்னொரு செகாவ் இருக்கிறார். மனிதர்கள் எங்கெங்கு துன்பப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சென்று மருத்துவ சேவை செய்ய அஞ்சாத மருத்துவர் செகாவ். ரஷ்யாவின் தண்டனைத் தீவான ஷகலின் தீவுக் கைதிகள் பற்றி ஆய்வுசெய்து அவர்களின் மோசமான நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். விவசாயிகளுக்கும் தொற்று நோய் பாதித்தவர்களுக்கும் எண்ணற்ற சேவை செய்தவர்.
ஸ்டாதாஸ்கோப் பயணம்
1896-ம் ஆண்டு ரஷ்யா முழுக்க காலரா பரவியது. ஏறக்குறைய 5 லட்சம் பேர் அந்த சமயத்தில் இறந்ததாக பின்னர் வந்த செய்திகள் கூறுகின்றன. செகாவ், தானே ஒரு நோயாளி என்பதை மறந்துவிட்டு, நோய் பாதித்த கிராமங்கள்தோறும் உதவியாளர்கள் துணையின்றித் தனியாக மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.
அந்த சமயத்தில் அவர் தன்னுடைய வீடு, உறவினர்கள், நண்பர்கள், காதலிகள் என யாருடைய நினைவுமின்றி, நாள்முழுக்கப் பயணித்து காலரா தாக்கியவர்களைக் காப்பாற்றினார்.
இந்த இரு துருவங்கள்தான் செகாவ். எழுத்து என்று வரும்போது சமாதானத்துக்கு இடமில்லாமல், தீவிர இலக்கியப் போக்கைக் கையாண்ட செகாவ், இன்னொரு புறம் தீவிர களப்பணியாளராக சேவை செய்திருக்கிறார். நிழல்போல் தொடர்ந்த மரணத்தைப் பற்றிய பயமின்றி, நோயின் தாக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் அவர் தீவிரமாக எழுதத் தொடங்கிவிடுவார். பெண் தோழிகளிடம் அடைக்கலம் கொள்வார். அல்லது பயணம் கிளம்பிவிடுவார்.
1904-ம் ஆண்டு செகாவுக்கு நோய் முற்றியது. அடிக்கடி வாயில் இருந்து ரத்தம் ஒழுகத் தொடங்கியது. மாஸ்கோவில் பனிப்பொழிவு அதிகமாகிவிட்டதால், சுக நீருற்றுகள் என்றழைக்கப்படும் வெந்நீர் நீருற்றுகள் அதிகமுள்ள ஜெர்மனியின் பேடன்வீலர் பகுதிக்குச் சென்று ஓய்வெடுக்கும்படி நண்பர்கள் செகாவை வலியுறுத்தினார்கள்.
மாஸ்கோவைவிட்டுப் பிரிவதற்கு மனமே இல்லாத செகாவ், வேறு வழியின்றி, ஜெர்மன் செல்ல ஒப்புக்கொண்டார். தன்னுடைய மனைவி ஒல்கா நிப்பருடன் மாஸ்கோவைவிட்டுக் கிளம்பத் தயாரானார். தான் மாஸ்கோவுக்குத் திரும்பி வரமாட்டோம் என்று செகாவுக்கு உள்மனசில் தோன்றியதோ என்னவோ, கிளம்புவதற்கு முந்தைய வாரம் முழுக்க மாஸ்கோவின் வீதிகளைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
நுரையீரலைத் தின்னும் நோய்
செகாவுடன் சண்டையும் கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், ஒல்கா நிப்பர் செகாவுடன் இறுதி நாட்களில் அவரை அருகிருந்து அன்புடன் கவனித்துக் கொண்டார். பேடன்வீலர் பகுதியில் செகாவும் ஒல்காவும் நண்பர்களின் உதவியுடன் தங்கியிருந்தார்கள். மருத்துவரின் கண்காணிப்பில் செகாவ் முழு ஓய்வில் இருந்தாலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. நீண்ட காலமாக அவரின் நுரையீரலைத் தின்னத் தொடங்கி இருந்த காசநோய், முழுமையாக அவரை விழுங்கக் காத்திருந்தது.
செகாவின் கடைசி நாள் ஒரு காவியத்தின் அழகியல் பக்கங்களைப் போல் விரிகிறது. தன்னுடைய சிறுகதை ஒன்றைப் பற்றி ஒல்காவுடன் பேசி சிரித்துக்கொண்டிருந்த செகாவுக்கு உடல்நிலை மோசமாகிறது. நினைவு தவறுகிறது. அவருடைய வயிற்றின் மீது ஐஸ் கட்டிகளை வைக்கிறார் ஒல்கா. லேசாக நினைவு திரும்பிய செகாவ் அப்போதும், தன்னுடைய வேடிக்கை பேச்சை விடாமல், ‘‘காலியான வயிற்றின்மீது ஏன் ஐஸ் கட்டிகளை வைக்கிறாய்’’ என்கிறார்.
மருத்துவர் ஸ்வோரர் அழைக்கப்படுகிறார். செகாவுக்கு சுவாசம் குறைவதைப் பார்த்த மருத்துவர், ஆக்ஸிஜனைக் கொண்டுவரச் சொல்கிறார். செகாவுக்கு தன்னுடைய மரணம் தன் படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டதை உணர முடிகிறது.
‘‘ஆக்ஸிஜன் வருவதற்குள் நான் இறந்துவிடுவேன். அதற்குத் தேவையே இருக்காது’’ என்று சொல்கிறார். நினைவிழக்கும்போதெல்லாம் செகாவ், ரஷ்யாவுடன் போர்த்தொடுக்கும் ஜப்பான் பற்றியும், கடல் மாலுமிகள் பற்றியும் பேசுகிறார். ரஷ்யா மீது அவருக்கிருந்த தீவிர நேசம், நினைவிலி நிலையிலும் வெளிப்பட்டது.
கடைசிச் சொட்டு
நினைவு திரும்பிய செகாவ், மருத்துவரிடம் ஷாம்பெயின் குடிக்க ஆசையாக இருப்பதாகச் சொன்னார். உடனடியாக மூன்று பேருக்கும் ஷாம்பெயின் கொடுக்கப்பட்டது. ஒரு மிடறு குடித்த செகாவின் முகத்தில் மகிழ்ச்சி.
‘‘நான் ஷாம்பெயின் குடித்து நாளாகிவிட்டது...’’ என்றார். சிரித்துக்கொண்டே ஒல்காவையும் மருத்துவரையும் பார்த்து, ‘‘நான் செத்துக் கொண்டிருக்கிறேன்...’’ என்று சொன்னார்.
‘செத்துக் கொண்டிருக்கிறேன்’ என்ற வார்த்தைகளின் முடிவில் செகாவின் தலை சாய்ந்தது.
தன்னுடைய மரணத்தை விருந்தினரை வரவேற்பதைப் போல் வரவேற்று, ஷாம்பெயின் குடித்து, மகிழ்வுடன் தன்னை ஒப்படைத்த செகாவின் மரணத்தின் கடைசி விநாடிகள், அவர் இறந்து 115 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்றும் கண்ணீர் சிந்த வைப்பவை. அவர் சிரித்துக்கொண்டே இறந்தார். படிப்பவர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
கண்ணீர் வரலாறு
தன்னுடைய 44 ஆண்டுகால வாழ்க்கையில் செகாவ் ரஷ்யாவை மிகவும் நேசித்தார். ஆனால், அவரின் மரணம் ரஷ்யாவில் நிகழவில்லை. இறந்த செகாவின் உடல் ஜெர்மனியில் இருந்து, மீன்களும் கடல் சிப்பிகளும் கொண்டுவரப்பட்ட குளிர்சாதன ரயிலில் கொண்டுவரப்பட்டது.
செகாவின் உடலுக்கு அஞ்சலி செய்ய வழிமுழுக்க ரயில் நிலையங்களில் மக்கள் காத்திருந்தார்கள். மீன் பெட்டிகளோடு செகாவின் உடல் வந்ததைப் பார்த்த டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட ரஷ்யாவின் எழுத்தாளர்கள் துயருற்றார்கள். இறந்து 5 நாட்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் செகாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ரஷ்யப் புரட்சிக்குப் பின், புதிய சோவியத் யூனியன் உருவானபோது, செகாவின் உடல் மீண்டும் வெளியில் எடுக்கப்பட்டு, அவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மரியாதையுடன் மறு அடக்கம் செய்யப்பட்டது.
செகாவின் அழகைப் போலவே அவருடைய மரணமும் கம்பீரமானது.
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT