Last Updated : 18 Nov, 2018 09:11 AM

 

Published : 18 Nov 2018 09:11 AM
Last Updated : 18 Nov 2018 09:11 AM

அசோகமித்திரன்: எளிமையின் பூரண அழகு

நவீனத் தமிழ் இலக்கியத்தோடும் சிறுபத்திரிகை இயக்கத்தோடுமான என் தொடக்க கால உறவில் அசோகமித்திரனின் எழுத்துகள் மீது உதாசீனம் கொண்டிருந்தேன். கொந்தளிப்புதான் கலை என்ற மனோபாவம் அப்போது என்னை ஆக்கிரமித்திருந்தது. சீராக ஓடும் நதியைவிடவும் சீற்றம் கொண்டோடும் காட்டாறின் மீதே மனம் ஈர்ப்புகொண்டிருந்தது. இதன் காரணமாக, அசோகமித்திரனின் கன கச்சிதமான எழுத்துகள் மீது சலிப்பு இருந்தது. ஆனால், அவருடைய சுபாவமான செய்நேர்த்தியிலும், அடங்கிய தொனி அழகிலும், ஆதுரமும் மென்மையும் கூடிய பரிவான படைப்புக் குரலிலும் என் மனம் காலகதியில் ஈர்ப்புகொண்டது. ஒரு கோலத்தின் நேர்த்தியிலும் தூய வடிவழகிலும் பொலிவது அவருடைய எழுத்து என்பது புலப்பட்டது. அதேசமயம், அக்கோலங்கள் நாம் சட்டென அறிந்துவிட முடியாத மாயச்சுழிப்புகள் கொண்டவை. பெருநகரின் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர மனிதர்களின் அன்றாடப் பாடுகளின் மீது ஆதங்கம் கொண்ட படைப்புலகம் இவருடையது. உறவுகளுக்கிடையேயான சிடுக்குகளுக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இடையே அன்றாடத்தைக் குலைவின்றி நகர்த்த விழையும் எத்தனிப்புகளின் பிரயாசைகளே இவருடைய படைப்புகளின் ஆதார சுருதி.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தொடர் எழுத்தியக்கம் இவருடையது. 272 சிறுகதைகள், 13 குறுநாவல்கள், 9 நாவல்கள், விமர்சனம், அனுபவப் பதிவு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் என்றமைந்தது இவருடைய எழுத்துலகம். அதேசமயம், காலத்தில் சற்றும் மங்காத எழுத்து. தன் கால சமூக, கலாச்சார, அரசியல் பின்புலத்தில் நடுத்தர வர்க்கம் எதிர்கொண்ட அக மற்றும் புற நெருக்கடிகளை மட்டுமே சுற்றிச் சுழன்ற உலகம். எனினும், தன் எழுத்தியக்கத்தில் தரம் குறையா மாயத்தைத் தொடர்ந்து நிகழ்த்தியபடி இருந்தார். அவருடைய மந்திரத் தொடலை அவை ஒருபோதும் இழந்துவிடவில்லை.

‘தண்ணீர்’ நாவலின் இரண்டாம் பதிப்பை ‘க்ரியா’ வெளியிட முடிவெடுத்ததைத் தொடர்ந்து அசோகமித்திரனுடன் எனது முதல் சந்திப்பு நிகழ்ந்தது. (எனினும், மதுரையில் தொடங்கிய என் இலக்கிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில், நகுலனின் ‘குருக்ஷேத்திரம்’ போன்றதொரு தொகுப்பைக் கொண்டுவர முனைந்தபோது அசோகமித்திரனுடன் கடிதத் தொடர்புகொண்டிருந்தேன். அவரும் ஒரு சிறுகதை அனுப்பியிருந்தார்.) ‘தண்ணீர்’ நாவலின் முதல் பதிப்பைப் படித்து சில திருத்தங்களை நான் குறித்துவைத்துக்கொண்ட பின்பு, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், அசோகமித்திரனை ‘க்ரியா’ அலுவலகம் வரவழைத்தார். அசோகமித்திரனும் நானும் பிரச்சினைக்குரிய வாக்கிய அமைப்புகளை முதலில் பார்த்து சரிசெய்தோம். அசோகமித்திரன் வெகுவாக சந்தோஷப்பட்டார். பின்னர், அதன் ஒரு அத்தியாயத்தில் நேர்ந்துவிட்டிருந்த ஒரு தவறைச் சுட்டிக்காட்டினேன். அந்த அத்தியாயத்தில் அக்காவும் தங்கையும் மாறிப்போயிருந்தார்கள். அக்கா பேச வேண்டியதைத் தங்கையும் தங்கை பேச வேண்டியதை அக்காவும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைச் சுட்டிக்காட்டியதும் அசோகமித்திரன் பதறிவிட்டார். “நான் வீட்டுக்குப் போய் இந்த அத்தியாயத்தை நிதானமாகப் படித்துவிட்டு நாளை வருகிறேன். அதன் பிறகு முடிவெடுக்கலாம்” என்றார். மறுநாள் வந்தார். “நீங்கள் சொன்னது சரிதான், எல்லாம் மாறிக்கிடக்கு” என்று சிரித்தபடியே சொன்னார். “இவ்வளவுக்கும் அந்த நாவல் ‘கணையாழி’யில் தொடராக வெளிவந்து, சிஎல்எஸ் புத்தகமாக வெளியிட்டு ஓரளவு பேசப்பட்ட படைப்பு. எப்படி இது நடந்தது? ஏன் யாருக்கும் இதுவரை படவில்லை?” என்று மருகிக்கொண்டே இருந்தார். “திருத்தப்பட்ட பதிப்பு என்று போடலாம்” என்றார். “அதெல்லாம் அவசியமில்லை” என்றேன். “மிகவும் நன்றாக வந்த புத்தகம் என்று இதை இதுவரை நினைத்திருந்தேன். நூறு தப்பாச்சும் இருந்திருக்கும் இல்லையா?” என்றபடி சிரித்தார். எடிட்டிங் எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றியும் மேலைநாடுகளில் அதன் முக்கியத்துவம் பற்றியும் சிலாகித்தார்.

பின்னர் ஒரு சமயம், அசோகமித்திரனும் நானும் இணைந்து ‘கதா’ என்ற அமைப்பின் ஒரு மொழிபெயர்ப்பு நூலாக்கத் திட்டத்தில் பணியாற்றினோம். அவர் அந்த நூலாக்கத்தின் எடிட்டராக இருந்தார்; நான் துணை எடிட்டராக இருந்தேன். அதன் பொருட்டு அவருடனான சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. ‘ஓ.ஹென்றி பரிசுச் சிறுகதைகள்’ என்ற ஒரு புத்தக உருவாக்கத் திட்டம் அது. ஒவ்வொரு மாதமும் வெளிவந்த கதைகளில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் சிறந்த கதைகளாகப் 12 கதைகள் கொண்ட ஒரு தொகுப்பு வெளிவரும் வகையில் அமெரிக்காவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துவரும் முயற்சியே ‘ஓ.ஹென்றி பரிசுச் சிறுகதைகள்’. அதுவரை வெளிவந்த ஓ.ஹென்றி பரிசுச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து ஆண்டுக்கு ஒன்றாக 12 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பணி தொடங்கியது.

ஒரு மொழிபெயர்ப்பாளர் அவருக்கு அளிக்கப்பட்ட கதையை மிகச் சரளமாகத் தன் போக்கில் பேச்சுவழக்கில் மொழிபெயர்த்திருந்தார். அதுபற்றி அசோகமித்திரனிடம் பேசினேன். “மொழிபெயர்க்கப்படுவதில் பல விதங்கள் இருக்கின்றன. இதுவும் ஒருவிதம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்றார். “பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்கிற மாதிரியா?” என்றேன். பலமாகச் சிரித்தார். நினைத்து நினைத்து அட்டகாசமாகச் சிரித்தார். அவருடைய அந்தச் சிரிப்பும் அப்போதைய அவருடைய முகபாவமும் இன்னமும் என் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.

இலக்கியம் சார்ந்த எதைப் பற்றியும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருந்த அதேசமயம், எதையும் அனுசரித்துக்கொள்கிற மனோபாவமும் இயல்பாக இருந்தது. அமெரிக்க எழுத்தாளர்கள் ஒரு சிலரைத் தவிரப் பலரிடமிருந்து உரிமை பெற முடியாமல் போனதில், புத்தகம் அச்சுக்குப்போகத் தயாராக இருந்த நிலையில் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இக்காலகட்டத்தில், அசோகமித்திரன் தனது கட்டுரைகளை வகைப்படுத்தித் தொகுத்துத் தர முடியுமா என்று கேட்டார். “அதைத் தொகுக்க வேண்டும் என்று யோசிக்கும்போதே மலைப்பாக இருக்கிறது” என்றார். பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையப் பணி முடிந்து திரும்பும் இடைவெளியில் செய்து தருவதாகச் சோன்னேன். (இக்காலகட்டத்தில் நான் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் இயங்கிய ‘நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்’தில் பணியாற்றியபடி பாளையங்கோட்டையிலும் சென்னையிலுமாக வசித்துக்கொண்டிருந்தேன்.) ஆனால், அது கூடிவரவில்லை. எனினும், ஏதோ ஒருவகையில் அவருடனான நட்பு நிலைத்துக்கொண்டிருந்தது. அவர் எழுத்துகள் மீதான என் மதிப்பும் கூடிக்கொண்டிருந்தது.

சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x