Published : 30 Aug 2014 12:00 AM
Last Updated : 30 Aug 2014 12:00 AM
குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒரு இனக்குழு மக்கள் எப்படி வாழ்ந்தனர்? அவர்கள் வாழ்வதற்குரிய ஆதாரங்களாகப் பின்பற்றிய அறநெறிப் பண்புகள், நீதிநெறிகள், சமூக ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், தொழிற்கருவிகள், பேணிய உறவுமுறைகள், திருமண முறைகள், சடங்குகள், சமூக செயல்பாடுகள், நடவடிக்கைகளை ஒவ்வொரு தலைமுறையினரும் அழியாத சாட்சியங்களின் வழியே விட்டு செல்கின்றனர். முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கைதான் அடுத்தடுத்த தலைமுறையினருக்கான வரலாறு-வாழ்க்கை கல்வி. அப்படியான ஒரு கல்வி முறையை உருவாக்க “வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்” என்ற நூலின் வழியே பொ.இராஜேந்திரனும், சொ.சாந்தலிங்கமும் முயன்றுள்ளனர்.
எந்தெந்தக் கோவில்கள் எந்தெந்தக் காலத்தில், எந்தெந்த மன்னர்களால் கட்டப்பட்டது, யார், யாரால் பராமரிக்கப்பட்டது, எந்தெந்தக் கோவில்களில் தேவதாசிகள் இருந்தனர், அவர்களுக்கான நிலக்கொடைகள் எப்படி வழங்கப்பட்டது போன்ற விபரமும் நூலில் இருக்கிறது.
விருதுநகர் மாவட்ட நிலப்பரப்பில் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகள் எந்தெந்த மன்னர்களால், எந்தெந்த காலத்தில் வெட்டப்பட்டது பற்றியெல்லாம் நூலாசிரியர்கள்-கல்வெட்டு, செப்பேடு, இலக்கிய ஆதாரங்களின் வழியே நிருவிக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக, நின்ற நாராயணப் பேரேரி, பெருங்குளம், தேவேந்திர வல்லபப்பேரேரி, முடந்தை ஆறு, நின்ற நாராயாண பாலாறு, பிச்சன் வாய்க்கால்-போன்றவை குறித்து விபரமாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுமார் 86 ஊர்களுக்கான பெயர்கள் எப்படி வந்தன? திருவில்லிப்புத்தூருக்கு-எப்படி பெயர் வந்தது, சுனைக்குடி என்ற ஊரின் பெயர் எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மாறாமல் அப்படியே இருக்கிறது? மல்லன் யார், அவன் வெட்டிய கிணறு எது? மல்லனும் கிணறும் எப்படி-மல்லன்கிணறு ஆயிற்று. மல்லன்கிணறு பிறகு எப்படி மல்லாங்கிணறு ஆனது. இந்தப் பெயர் மாற்றங்களுக்கானச் சமூக, அரசியல், பண்பாட்டுக் காரணங்கள் என்னென்ன என்பதையும் இந்நூல் ஆராய்ந்துள்ளது.
கற்காலத்தில், பெரும் கற்காலத்தில், முற்பாண்டியர் காலத்தில், சோழர் காலத்தில், பிற்பாண்டியர் காலத்தில், நாயக்கர்கள் காலத்தில்-ஒவ்வொரு காலத்திலும் விருதுநகர் மாவட்ட மக்கள் எப்படி வாழ்ந்தனர்? வணிகத் தொடர்புகள் எப்படியிருந்தன, கிழக்கு இலங்கைக்கும் விருதுநகர் மாவட்டத்திற்குமான தொடர்புகள், ஐந்தாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் எப்படி விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தன என்பது குறித்தெல்லாம் உரிய ஆதாரங்களோடு விளக்கப்பட்டுள்ளது.
இந்நூல் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளைத் தொகுக்க வேண்டியதின் அவசியத்தை உருவாக்கியுள்ளது. அதோடு இந்நூல் நாம் வாழும் வெளியின் வரலாற்றைத் தேடச்சொல்கிறது. வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்-என்ற நூலை பொ.இராஜேந்திரனும், சொ.சாந்தலிங்கமும் சரியான ஆதாரங்களுடன், சரியான முறையில் எழுதியிருக்கிறார்கள்.
வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்
பொ. இராஜேந்திரன், சொ. சாந்தலிங்கம் வெளியீடு: பாண்டிய நாட்டு வரவாற்று ஆய்வு மையம், மதுரை
தொடர்புக்கு - 9894687358, விலை: ரூ. 250
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT