Published : 04 Nov 2018 12:52 AM
Last Updated : 04 Nov 2018 12:52 AM
க.நா.சு.வின் மகத்தான பங்களிப்புகளில் மிக முக்கியமானது, உலக இலக்கிய வளங்களைத் தமிழுக்குக் கொண்டுவர அவர் அயராது மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி. சிறந்த இலக்கியத்துடனான என் முதல் உறவு, க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் வெளியான நட் ஹாம்சனின் ‘நிலவளம்’ நாவல் வாசிப்பிலிருந்துதான் தொடங்குகிறது. நான் பட்டப்படிப்பு மேற்கொண்ட மதுரை தியாகராசர் கல்லூரி மிகச் சிறந்த நூலகத்தைக் கொண்டிருந்தது. அங்குதான் ‘நிலவளம்’ கிடைத்தது. என் 13 வயதிலேயே நூலகத்துக்குச் சென்று வாசிப்பதென்பது ஏற்பட்டுவிட்டிருந்தது. எனினும், கல்லூரி நாட்களில் இது தீவிரமடைந்தது. மதுரை மைய நூலகத்திலும் மஹால் கிளை நூலகத்திலும் உறுப்பினராக இருந்தேன். மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிக்கும் தீராத வேட்கையை ‘நிலவளம்’ ஏற்படுத்தியது. மொழிபெயர்ப்புப் படைப்புகளில் சகஜமாக இடம்பெறும் பாலியல் நிகழ்வுகள் இளம் வயதுக் கிளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தன. இதுவே அவற்றின் தேடலுக்கான முக்கியக் காரணமாக அன்று அமைந்ததென்றாலும், பின்னர் அதுவே பரந்துவிரிந்த பெறுமதியான ஓர் உலகத்துக்கு அழைத்துச்சென்றது. அன்று நூலக அடுக்குகளில் மொழிபெயர்ப்புப் புனைவுகள் கணிசமாக இருந்தன.
இக்காலகட்டத்தில் படைப்பு, விமர்சனம், சிறுபத்திரிகை இயக்கம் எனப் பல்வேறு தளங்களில் ஆற்றலோடும் அயரா உழைப்போடும் பங்காற்றி, தற்காலத் தமிழிலக்கியச் சூழலை வளப்படுத்திய க.நா.சுப்பிரமணியம் மொழிபெயர்ப்புப் பணியிலும் அர்ப்பணிப்போடு ஓர் இயக்கமெனச் செயல்பட்டார். அவர் குறிப்பிடுகிறார்: “மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகமிக அவசியம். அதை உணர்ந்து இலக்கியத் தொண்டின் ஒரு பகுதியாக, ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஏதாவது ஒரு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தேன்.” உலக இலக்கியத்தின் செழுமையான பகுதிகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் ஓர் இலக்குடன் செயல்பட்ட க.நா.சு.வின் லட்சிய உழைப்பு அபூர்வமானது. நாம் போற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டிய மகத்தான உழைப்பு.
அவருடைய ‘புகழ் பெற்ற நாவல்கள்’ நூலின் பின்னுரையில் க.நா.சு.வின் தீர்க்கமான மனோபாவத்தை வெளிப்படுத்தும் ஒரு பகுதி இது: “உலக நாவல் பாரம்பரியம் பரவலானது, விரிவானது. அந்த நூல்களில் பலவும் தமிழில் நாவல் எழுத விரும்புபவர்களுக்கு முன்னுதாரணமாக மொழிபெயர்ப்பில் வர வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அப்போதுதான் தமிழ் நாவல் வளமும் பெருகும். தமிழில் இருப்பது போதாது என்று சொல்லவில்லை. அது மட்டும் போதாது. உலக இலக்கிய வளம் தெரிய வேண்டும் என்று கட்சியாட இடம் உண்டு. மொழிபெயர்ப்புகள் அதிகமாகத் தமிழில் பாராட்டப்படுவதில்லை, பரிபாலிக்கப்படுவதில்லை என்பதனால், சுருக்கமாகவேனும் நாவல்களைத் தமிழர்களுக்குத் தந்து, நாவல்கள் படிக்கும் பழக்கத்தை, பலதரப்பட்ட நாவல் களங்களை, பல இலக்கியத்தர தளங்களைத் தமிழ் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையுடன் ‘புகழ் பெற்ற நாவல்கள்’ என்ற இந்நூலின் முதல் தொகுதியைத் தமிழ் வாசகர்கள் கவனத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்.”
‘உலகத்துச் சிறந்த நாவல்கள்’ என்ற நூலில் பதினைந்து முக்கியமான நாவல்களைக் கதைச் சுருக்கத்தோடும், அவற்றின் சிறப்பு குறித்த அறிமுகத்தோடும், படைப்பாசிரியர் குறிப்போடும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘புகழ் பெற்ற நாவல்கள்’ என்ற தலைப்பில் இரு நூல்களைத் தந்திருக்கிறார். முதல் தொகுதியில் 33 நாவல்களும், இரண்டாவது தொகுதியில் 25 நாவல்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘ஐரோப்பியச் சிறுகதைகள்’ என்ற நூலில் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளோடு 18 சிறுகதைகளைத் தந்திருக்கிறார். அவர் அளிக்கும் தகவல்களும் குறிப்புகளும் நம்மைப் புதிய திசைகளுக்கு இட்டுச்செல்லக் கூடியவை.
இவை போன்ற தொகுப்பு நூல்களைத் தவிர,
க.நா.சு. 20 நாவல்களை முழுமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். உலக மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய ஆற்றல்மிக்க படைப்பாளுமைகளின் மகத்தான படைப்புகளைத் தமிழுக்கு அளித்திருக்கிறார். நட் ஹாம்சனின் ‘நிலவளம்’ (நார்வே), செல்மா லாகர்லெவ்வின் ‘மதகுரு’ (ஸ்வீடன்), பெர்லாகர் குவிஸ்ட்டின் ‘பாரபாஸ்’ எனும் ‘அன்பு வழி’ (ஸ்வீடன்), ஹெர்மென் மெல்வில்லின் ‘மோபி டிக்’ எனும் ‘திமிங்கல வேட்டை’ (அமெரிக்கா), தாமஸ் மன்னின் ‘மாறிய தலைகள்’ (ஜெர்மன்), ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ மற்றும் ‘1984’ (இங்கிலாந்து) போன்றவை இவற்றுள் மிக முக்கியமானவை.
ஒரு மொழிபெயர்ப்பாளரின் தேர்வில் அவருடைய நோக்கமும் அக்கறையும் வெளிப்படுகிறது. இவ்வகையில், க.நா.சு. ஸ்காண்டிநேவியப் படைப்புகளை அதிகமாகக் கவனத்தில் கொண்டது மிகவும் முக்கியமானது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இலக்கிய உலகில் நவீன ஐரோப்பியப் படைப்பாளிகளின் புதிய சிந்தனைகள் இழையோடிய தத்துவார்த்த ஒளி கூடிய படைப்புகளின் புதிய வெளிச்சம் சுடர்விட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளிப்பட்ட இத்தகைய நவீனத்துவ மைய நீரோட்டத்துக்கு எதிராக, ஐரோப்பாவில் உள்ளடங்கிய ஸ்காண்டிநேவியப் பிரதேசங்களான ஸ்வீடனும் நார்வேயும் ஓர் எழுச்சிமிக்க மாற்றுப் போக்கை இலக்கிய ஆக்கங்களாகக் கொண்டிருந்தன. அன்பு, காதல், ஆன்மா, வாழ்வின் அர்த்தம், அது குறித்த மனிதனின் தேடல் என்றான வாழ்வின் நித்திய உண்மைகள் இழையோடிய நவீன செவ்வியல் படைப்புகளை உருவாக்கிய ஸ்வீடனின் ஸெல்மா லாகர் லாவ், பெர்லாகர் குவிஸ்ட், நார்வேயின் நட் ஹாம்சன் போன்ற படைப்பாளுமைகள் இவருடைய தேர்வில் பிரதானமாக அமைந்தனர். நம் கீழைத் தேயப் படைப்பு மனங்களுக்கு இந்தப் படைப்புகள் உத்வேகமாக அமையும் என்று அவர் கருதியிருப்பார்.
க.நா.சு.வின் மொழியாக்க முறை மிகவும் கச்சிதமோ துல்லியமோ கொண்டதல்ல. மூலப் படைப்பாளியின் படைப்பு மொழியில் சலனிக்கும் வார்த்தைகளின் தொனி, சாயை, இழையாடல் ஆகிய பெறுமதியான தன்மைகளை அவர் கவனத்தில் கொள்வதில்லை. மாறாக, அந்தப் படைப்புலகின் ஜீவனைச் சுதந்திரமான மொழிபெயர்ப்பில் வசப்படுத்திவிடுவதிலேயே அவருடைய கவனக்குவிப்பு இருந்திருக்கிறது. மொழி நுட்பங்களில் அல்ல; கதைக்களன்களிலேயே அவர் கவனம் மேலோங்கியிருந்தது. துரிதகதியில் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்த உணர்வே அவருடைய மொழிபெயர்ப்பு முறையைத் தீர்மானித்தது. ஒரு மொழியின் படைப்பாக்க எழுச்சிக்கு, அதற்கு உதவக்கூடிய, தம் காலத்தின் பிரக்ஞை கொண்ட பிற மொழிப் படைப்பாளிகளின் ஆதிக்கம் அவசியம். நம்முடைய வளத்துக்கு உலக வளங்களின் சேர்மானம் அத்தியாவசியம் என்ற மேலான புரிதலுடன் பெரும் கனவுகளோடும் லட்சிய வேட்கையோடும் செயல்பட்டவர். நம் காலத்தின் மகத்தான இலக்கிய ஆகிருதி க.நா.சு.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT