Published : 25 Nov 2018 11:48 AM
Last Updated : 25 Nov 2018 11:48 AM
அசோகமித்திரன் தன் வாழ்வின் பெரும்பகுதியை முழுநேர எழுத்துப்பணிக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். அதேசமயம், அந்தத் தேர்வும் அது அளித்த சிரமங்கள் குறித்தும் எவ்விதப் புகார்களுமற்றவர். அவருடைய எழுத்தும் வாழ்க்கையும், எளிமையும் இசைவும் இழையோடியது.
அசோகமித்திரனின் நுண்ணுணர்வும், சூட்சும தொனியும், செய்நேர்த்தியும், பரிவான குரலும், மெல்லிய அதேசமயம் கூர்மையான கிண்டலும் அவருடைய பிரத்தியேக அம்சங்களாக எழுத்திலும் வாழ்விலும் அமைந்திருந்தன. இந்த வாழ்க்கையை வாழ நேர்ந்துவிட்ட எளிய மனிதர்களின் மீதான அவருடைய பரிவு எழுத்தில் மட்டுமல்லாது வாழ்விலும் வெளிப்பட்டபடி இருந்தது.
மனிதர்களிடம் மட்டுமல்ல, கலைப் பொருட்கள் மீதுகூட அவர் அலாதியான பரிவுகொண்டிருந்ததை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வு என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதைப் பற்றி நண்பர்களிடம் வியந்து வியந்து பேசியிருக்கிறேன். அந்த நிகழ்வு இதுதான்: ‘நற்றிணை’ பதிப்பகத்தில் நான் சில மாதங்கள் பணியாற்றிய காலகட்டத்தில் ‘க.நா.சு. விருது’ என ஒரு படைப்பாளுமைக்கு விருது வழங்க ‘நற்றிணை’ முடிவெடுத்தது.
அதன் முதல் ஆண்டில் அந்த விருது, 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசோகமித்திரனுக்கு அளிக்கப்பட்டது. ‘நற்றிணை’ யுகன், யூமா வாசுகி, நான் மூவரும் தேர்வுக் குழுவினராகச் செயல்பட்டோம். அசோகமித்திரனை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தோம். அந்த விழாவுக்கு என் நெருங்கிய நண்பரான ஓவியர் சி.டக்ளஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். டக்ளஸ் பொதுவெளியில் தன்னை இருத்திக்கொள்வதில் கூச்சசுபாவி. “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
“அசோகமித்திரனுக்கு உங்களுடைய ஓவியம் ஒன்றைப் பரிசளியுங்களேன்” என்றேன். அழகாகச் சட்டமிடப்பட்ட ஓர் அருமையான ஓவியத்தை டக்ளஸ் பரிசளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு ஓவியத்தைப் பார்த்த அசோகமித்திரன், “நான் சரியாகப் பார்க்கிறேனா?” என்று டக்ளஸிடம் கேட்டார். “அப்படியில்லை, இப்படி” என்று அவர் பிடித்திருந்த பக்கத்தை டக்ளஸ் மாற்றிக் காண்பித்தார்.
ஏற்புரையில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய அசோகமித்திரன், “ஒரு முக்கியமான ஓவியர் இந்த விழாவில் கலந்துகொண்டு ஒரு ஓவியத்தைப் பரிசளிக்கிறார். ஆனால், அதை எப்படிப் பார்ப்பதென்றுகூட நமக்குத் தெரியவில்லை. நம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று சங்கடப்பட்டார். இந்த எளிமையும் சத்தியமும்தான் அசோகமித்திரன்.
மறுநாள் காலை டக்ளஸ் பற்றித் தொலைபேசியில் விசாரித்தார் அசோகமித்திரன். நவீன ஓவிய உலகோடு அசோகமித்திரன் ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்தவர் என்றாலும், டக்ளஸ் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை.
இந்தியக் கலைவெளியில் டக்ளஸ் பெற்றுவரும் முக்கியத்துவம் பற்றிச் சொன்னேன். ஓரிரு வருடங்களுக்குப் பிறகு, அசோகமித்திரனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அவர் அப்போது வேளச்சேரியில் தங்கியிருந்த மகன் வீட்டிலிருந்து தி.நகரில் வசிக்கும் மகன் வீட்டுக்கு மாறப்போவதாகத் தெரிவித்தார். அதற்காக எல்லாவற்றையும் கட்டிவைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, “நீங்கள் தந்த ஓவியத்தையும் ‘பேக்’ செய்திருக்கிறேன்” என்றார்.
“அது டக்ளஸ் தந்தது” என்றேன். “அது சரி. ஆனா, அந்த வீட்டில் அதை எங்க வைக்கன்னு தெரியலை. அதோட மதிப்பும் யாருக்கும் தெரியாது. அதனால, தப்பா எடுத்துக்காதீங்க. அது உங்ககிட்டயே இருக்கட்டும். அதுதான் சரியா இருக்கும்” என்றார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் தன் நிலைப்பாட்டை சங்கடத்துடன் முன்வைத்தபடி இருந்தார். அது பத்திரமா இருக்கணும் என்பதுதான் அவருடைய ஒரே கரிசனமாக இருந்தது.
அதன்பொருட்டு, நண்பரும் எழுத்தாளருமான ஜான் பாபு ராஜ், மகேஷ் இருவரும் சென்று அதைப் பெற்று வந்ததோடு பேக்கிங்கில் அவருக்குக் கொஞ்சம் ஒத்தாசையும் செய்திருக்கிறார்கள். “காலி பண்ணும்போது சொல்லுங்க சார், வர்றோம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். பின்னர், அதைத் தொலைபேசியில் என்னிடம் சொன்னபோது, “காலி பண்ணும்போது அவசியம் கூப்பிடுங்க. உங்க மேல மதிப்பும் பிரியமும் உள்ளவங்கதான்” என்றேன். “அது அவங்க கண்ணுலயே தெரிஞ்சது” என்றார்.
டக்ளஸ் அவருக்குப் பரிசளித்த ஓவியத்தின் சந்தை மதிப்பு அறிந்திருந்தும், அந்தக் கலைப் படைப்பு பத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் அவரிடம் வெளிப்பட்ட பதற்றமும் அதன் மீது அவர் கொண்டிருந்த அலாதியான பரிவும் பிரமிப்பூட்டக் கூடியது. அவருடைய வாழ்வும் எழுத்தும் இந்தப் பத்திரத்தையும் பரிவையுமே நித்திய வேட்கைகளாகக் கொண்டிருந்தன.
கடைசிக் காலங்களில் வயதின் தளர்ச்சியோடு அவர் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களிலும் மனிதர்கள் நோய்களின் உபாதைகளோ வலியோ இன்றி நிம்மதியாக வாழவும் இறக்கவும் வேண்டுமென்பதே அவருடைய ஆதங்கமாகவும் எளிய வேண்டுதலாகவும் இருந்தது.
ஜி.நாகராஜனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தவர் அசோகமித்திரன். நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2010-ல் பெங்குவின் வெளியிட்டபோது மொழி, கலை இலக்கியக் கலாசாரத் தளங்களில் செயலாற்றிவரும் பேராசிரியர் டேவிட் ஷுல்மனோடு அசோகமித்திரனும் நானும் கலந்துகொண்டு உரையாற்றினோம். அன்று அசோகமித்திரன், ஜி.நாகராஜனுடனான தன் உறவை மிகவும் நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினார்.
நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் முன்னவராக புதுமைப்பித்தனும் சமகாலத்தவராக அசோகமித்திரனும் ஜி.நாகராஜனுக்குப் பிடித்தமானவர்கள். ஜி.நாகராஜன் பற்றி சாகித்ய அகாடமிக்காக நான் ஒரு நூல் எழுதினேன். ஜி.நாகராஜனின் மரணத்துக்குப் பின் ஜி.நாகராஜனை மையப் பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட ஐந்து கதைகளைப் பற்றிய பகுதிக்காக - உலக இலக்கியப் போக்கில் இது ஒரு அபூர்வ நிகழ்வு என்பதால் - ஜி.நாகராஜன் பற்றிய அவருடைய ‘விரல்’ கதை பற்றி அறியும்பொருட்டு அசோகமித்திரனைத் தொடர்புகொண்டேன். அவர் பிறர் எழுதிய கதைகளைப் பற்றிக் கேட்டார்.
சொன்னேன். “பிரபஞ்சனும் எழுதியிருக்கிறாரா? தெரியாதே. அது என்ன கதை?” என்றார். “ஒரு நாள் காலை ஜி.நாகராஜன் பாண்டிச்சேரி போய் இறங்கி பிரபஞ்சனைப் பார்த்திருக்கிறார். அந்த நாள்தான் கதை” என்றேன். சிரித்தபடி, “அது போதுமே” என்றார். தொடர்ந்து, “கொஞ்ச காலம்தான் வாழ்ந்தாலும் மனுஷன் நல்லா கூத்தடிச்சுட்டுத்தான் போயிருக்கிறார்” என்றபடி மலர்ந்து சிரித்தார். ஜி.நாகராஜன் பற்றி அவருடன் பழகிய பலருடனும் பேசியிருக்கிறேன்.
எல்லோருமே வேதனைகளோடும் புகார்களோடும் நீதிமான்களாகவே தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜி.நாகராஜன் அளித்த எல்லா சங்கடங்களையும் மீறி அவரைப் பரிவோடு ஏற்றுக்கொண்டவராக அசோகமித்திரன் மட்டுமே தெரிந்தார்.
மனிதர்கள் மீதான அசோகமித்திரனின் இயல்பான பரிவுதான் அவருடைய எழுத்துலகமாகவும் புனைவுக் கோலம் கொண்டது.
- சி.மோகன், எழுத்தாளர்
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT