Last Updated : 14 Oct, 2018 01:14 AM

 

Published : 14 Oct 2018 01:14 AM
Last Updated : 14 Oct 2018 01:14 AM

கருணாமிர்தசாகரம் இணையதளம்

நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இசை நூல் ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்தசாகரம்’. இந்நூல் பதிப்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில், கருணாமிர்தசாகரம் (http://karunamirthasagaram.org/) இணையதளத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தது ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை. சமீபத்தில், இந்த இணையதளம் முறையாகத் தொடங்கப்பட்டது. இணையதளத்தை நெறிப்படுத்தும் பணியில் குட்டி ரேவதி, ஆர்.ஆர்.சீனிவாசன், எம்.ஆர்.சரவணக்குமார், தி.முரளி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இணையதளம் குறித்து ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான குட்டி ரேவதி, “கருணாமிர்தசாகரம் நூலின் நூற்றாண்டைக் கொண்டாடுவது குறித்து யோசிக்கும்போது இளைய தலைமுறை  விரும்பும் இணைய ஊடகத்தை முன்னிறுத்தும் யோசனையை ஏ.ஆர்.ரஹ்மான் முன்வைத்தார். அதன் விளைவே கருணாமிர்தசாகரம் இணையதளம். ஏறக்குறைய மூன்றாயிரம் ஆண்டு பழமையான இசைத்தமிழ் எப்படியெல்லாம் பயணப்பட்டிருக்கிறது என்பதை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் முயற்சி இது. தமிழிசை எப்படி சங்க காலம், சங்கம் மருவிய காலம் தொடங்கி இன்றைய திரையிசை, கானா வரை அதன் தாக்கம் இருக்கிறது, இன்றைக்கும் தன் வீரியத்தை எப்படித் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறோம். கடல் போன்ற இந்தப் பணியில் துளித்துளியாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நமது பாரம்பரியத் தமிழிசை குறித்த தெளிவை அளிக்கும் கருணாமிர்தசாகரத்தைக் கொண்டுசேர்க்கும் விதமாக ஆங்கிலத்திலும் இணையதளத்தை வடிவமைக்கவிருக்கிறோம்” என்றார்.

இந்த ஆவணத்தில், ஆபிரகாம் பண்டிதரின் குடும்பத்திலிருந்து சில பேர் ஆபிரகாம் பண்டிதரின் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களை அபூபக்கர் பாடியிருக்கிறார். ஓதுவார் ஒருவர் தேவாரம் பாடியிருக்கிறார். “பல்வேறு இசை பாணிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செலுத்திவரும் எளிய மனிதர்களின் ஆவணமாக இது இருக்க வேண்டும். இதற்குக் கலைஞர்கள், ரசிகர்கள் எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியம்” என்கிறார் குட்டி ரேவதி.

- வா.ரவிக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x