Last Updated : 21 Oct, 2018 09:24 AM

 

Published : 21 Oct 2018 09:24 AM
Last Updated : 21 Oct 2018 09:24 AM

தமிழில் எழுத்தாளர் ஆங்கிலத்தில் பத்திரிகையாளர்!

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இயக்க சக்தி க.நா.சுப்ரமண்யம். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, படைப்பிலக்கிய அறிமுகம், கதைச் சுருக்கம், படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள், மொழிபெயர்ப்பு, சிறுபத்திரிகை இயக்கம் என்று அமைந்த முழு நேர இலக்கிய வாழ்வு இவருடையது. நாம் போற்றிப் பெருமிதப்பட வேண்டிய மகத்தான இலக்கிய இயக்கம். எந்தவொரு வகைமைக்குள்ளும் குறுக்கிக்கொள்ளாமல் இலக்கியத்தின் எல்லா திசைகளிலும் தன் வாழ்வைக் கட்டமைத்துக்கொண்டவர். அதன் மூலம், நவீனத் தமிழ் இலக்கியப் பிராந்தியத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய சக்தி. தார்மீக உந்துதலோடும், மேன்மையான அக்கறைகளோடும், சலிக்காத செயல் வேகத்தோடும், உலக இலக்கிய வளங்கள் குறித்த மெய்ஞானத்தோடும் இயங்கியவர். இத்தகைய அர்ப்பணிப்புகளின் வழியாக, நவீனத் தமிழ் இலக்கியச் சூழலின் இருபது ஆண்டுகளை (1945-65) நிர்மாணித்தவர். இலக்கிய வாழ்வைக் கடும் தவமென மேற்கொண்ட மேதை.

க.நா.சு.வின் படைப்பாளுமை மிக முக்கியமானதென்றபோதிலும், தன் படைப்புகளின் உருவாக்கத்துக்கு அப்பால் சூழல் குறித்த பிரக்ஞையோடு அவர் ஆற்றிய அளப்பரிய பணிகள் அதி முக்கியத்துவமானவை. பிரமிப்பூட்டக்கூடியவை. க.நா.சு.வின் எண்ணமும் சிந்தனையும், அக்கறையும் உத்வேகமும், நோக்கமும் கலை நம்பிக்கையும் எவ்வளவு மேலானதாகச் செயல்பட்டிருக்கின்றன என்பதற்கு அவருடைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் மட்டுமே போதுமானவை. உலக இலக்கியத்தின் செழுமையைக் கணிசமான மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்ததிலும், வாசகத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சூழலில் ஓர் எழுச்சியைத் தோற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பெறுமதியான நவீனத் தமிழ்ப் படைப்புகளை மட்டுமல்லாது இந்திய, உலக இலக்கியப் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துவதில் அயராது காட்டிய முனைப்பிலும் க.நா.சு.வின் பங்களிப்பு தனித்துவமானது.

க.நா.சு., எழுத்தாளராகவே தன் வாழ்வை அமைத்துக்கொள்ள இளம் வயதிலேயே தீர்மானித்துவிட்டவர். 1928-34 வரையான ஆறு ஆண்டுகள் (16-லிருந்து 22 வயது வரை) ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற சிந்தனை இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியதாக க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பின்னாளில் மனைவி, ஒரே மகள் என்ற தன் சிறு குடும்பத்தின் வாழ்க்கைப்பாட்டுக்கான வருமானத்தை ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலமே அடைந்திருக்கிறார். முழுநேர இலக்கியப் பணி சார்ந்த வாழ்வு என்பது இன்றும்கூட உகந்ததில்லை என்ற நிலையில் அன்றைய சூழலில் எவ்வளவு சிரமமானதாக இருந்திருக்கும் என்பதை எளிதில் உணர முடியும். இதை ஈடுசெய்வதற்கான அவருடைய இன்னொரு பரிமாணமாக ஆங்கில இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது அமைந்திருந்தது. ‘தமிழில் நான் எழுத்தாளன். ஆங்கிலத்தில் பத்திரிகையாளன்’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். தன் படைப்புகளை எழுதுவது, மொழிபெயர்ப்பது, ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவது, வாசிப்பது என எல்லா தளங்களிலும் நாள்தோறும் விடாது செயல்பட்டிருக்கிறார். அவருடைய ஒருநாள் என்பது எப்போதும் சீராக அமைந்திருந்ததை நினைத்துப்பார்த்தால் பிரமிப்பாகத்தானிருக்கிறது. அவருள்ளிருந்து அவரை இயக்கிய சக்தி மகத்தானது.

இலக்கியப் பிரவேசத்தின் ஆரம்பக் காலத்தில் ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’ சிற்றிதழ்களை நடத்தியபோதிலும், சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழின் எழுத்து முறையில் அதிருப்தி அடைந்து, அவர் நடத்திய ‘இலக்கிய வட்டம்’, சிற்றிதழ் மரபில் ஒரு புத்தெழுச்சியாக அமைந்தது. எனினும், 1965-ல் க.நா.சு. தன்னுடைய 53-வது வயதில் தன் குடியிருப்பை டெல்லிக்கு மாற்றினார். கடும் தவமென முனைப்புடன் செயலாற்றியும் தமிழில் வணிகச் சூழலின் செல்வாக்கு செழித்தோங்கியதிலும், வாசகத்தளம் எவ்வித மாற்றத்துக்கும் ஆட்படாததிலும் விரக்தியடைந்து அவர் இந்த மாற்றத்தை மேற்கொண்டதாகத் தெரிகிறது. டெல்லி வாழ்க்கையில் வாழ்க்கைப்பாட்டுக்காக ஆங்கிலத்தில் எழுதுவதைத் தீவிரமாக மேற்கொண்டார். இது, இந்தியப்பரப்பிலும் உலகப்பரப்பிலும் குறிப்பிடத்தகுந்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அவரது பல்லாயிரக்கணக்கான ஆங்கிலப் பக்கங்களிலிருந்து சிறு தொகுதிகூட வெளிவராமல்போனது துரதிர்ஷ்டம். அதற்கான எவ்விதப் பிரயாசையும் அவர் எடுத்ததாகத் தெரியவில்லை. இக்காலகட்டத்தில் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சில நாவல்களை மொழிபெயர்த்தார். நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ இரண்டும் ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமும் ஆகின. ஆனால், க.நா.சு. விருப்பத்துடன் மெற்கொண்ட, அவர் பெரிதும் போற்றிய ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டி சுட்டது’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கடைசிவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பின் அவர் தன் குடியிருப்பை மீண்டும் சென்னைக்கு மாற்றியபோது முதுபெரும் எழுத்தாளருக்கான அங்கீகாரமும் கெளரவமும் தேடிவந்தன. 1988-ன் மத்தியில் மீண்டும் டெல்லி சென்ற க.நா.சு. அவ்வாண்டின் இறுதியில் தன் வாழ்வியக்கத்தை முடித்துக்கொண்டார்.

நான் சென்னைக்குக் குடியேறிய சில மாதங்களில் க.நா.சு.வைச் சந்திக்கும் முதல் வாய்ப்பு அமைந்தது. 1983-ன் இறுதியில் அல்லது 84-ன் தொடக்கத்தில் கூடியது. ஏதோ ஒரு காரியமாக சென்னை வந்து, ஏ.கே.கோபாலனின் சகோதரர் அ.கி.ஜெயராமனின் ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி வீட்டு மாடியில் க.நா.சு. தங்கியிருந்தார். 1950-களில் ஏ.கே.கோபாலன், அ.கி.ஜெயராமன், க.நா.சு. மூவரும் இணைந்து உலக இலக்கிய வளங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து ஒரு பொற்காலத்தை வடிவமைத்தார்கள். சென்னைக்குக் குடியேறிய தொடக்ககாலத்தில் நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரும், நவீனக் கலை இலக்கிய ஞானமும் நவீன ஓவிய, சிறுபத்திரிகை இயக்கப் படைப்பாளிகளுடன் நெருக்கமான நட்பும் கொண்டிருந்த நண்பர் கி.ஆ.சச்சிதானந்தம் ஒருநாள் மாலை அங்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார். ஏ.கே.கோபாலனும் அவருடைய அண்ணன் அ.கி.ஜெயராமனும் இப்போது பக்தி நூல்கள் வெளியிட்டு அமோகமாக இருப்பதாகக் க.நா.சு. சிரித்தபடி சொன்னார். 1980 வாக்கில் அவர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணிபுரிந்ததைப் பற்றி பேச்சு வந்தபோது, “எழுபதாவது வயதில் முதல் முறையாக மாதச் சம்பளம் வாங்கினேன்” என்று புன்முறுவலுடன் குறிப்பிட்டார்.

க.நா.சு. மீண்டும் தன் மனைவியுடன் 1985-ல் சென்னைக்குக் குடிவந்தார். அவருடைய 1985-88 வரையான பிற்காலச் சென்னை வாழ்க்கையில் அவர் குடியிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி நான் குடிபெயரும்படி அமைந்தது, வாழ்வு என்மீது காட்டிய அதிர்ஷ்டங்களில் ஒன்று.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.coம்m

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x