Last Updated : 30 Aug, 2014 12:00 AM

 

Published : 30 Aug 2014 12:00 AM
Last Updated : 30 Aug 2014 12:00 AM

மகத்தான கதை சொல்லி

மைசூர் ராஜ்ஜியத்தில் 1932-ல் பிறந்த அனந்தமூர்த்தி, ஒரு பிராமணச் சிறுவனாக கர்நாடக வனப்பகுதி ஒன்றின் நடுவில் சற்றும் மாசுபடாத இயற்கைச் சூழலில் வளர்ந்தவர். எல்லாமே புனிதமாக இருந்த உலகத்தில் அவர் வாழ்ந்தார் என்கிறார் சமூகவியலாளர் சிவ்.விஸ்வநாதன்.

அனந்தமூர்த்தி தனது வைதிகப் பின்னணி சார்ந்த மரபுகள் மற்றும் நினைவுகளின் செழுமையான அறிவு சேகரமாக இருந்தவர். அதேவேளையில் பிராமணியத்தின் பத்தாம்பசலித்தனத்தையும் கடுமையாகக் கண்டித்தவர்.

கிராமத்து சமஸ்கிருதப் பள்ளிக்குச் சென்று ஆரம்பக்கல்வி கற்ற அவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். பின்னர் காமன்வெல்த் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ‘1930-ல் எழுதப்பட்ட புனைவு களில் அரசியல்’ என்பதுதான் அவரது ஆராய்ச்சிப் பொருள்.

கன்னட இலக்கிய உலகில் ‘நவ்ய’ என்று அழைக்கப்படும் நவீன இலக்கிய இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவர் அனந்தமூர்த்தி. 1965-ல் அவர் எழுதிய ‘சம்ஸ்காரா’ நாவல் பிராமணியத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளை விமர்சித்துப் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

நவீன காலகட்டத்தில் கர்நாடக பிராமணக் குடும்பங்கள் சந்திக்கும் சவால்கள், மாற்றங்களைக் கடுமை யான விமர்சனத் தொனியுடன் எழுதிய வர் அனந்தமூர்த்தி. சம்பிரதாய இந்து சமூகத்தில் மாறும் விழுமியங்களுக்குள் சிக்கிய தந்தை-மகன், கணவன்-மனைவி, தந்தை-மகள் உறவுகளையும் நேசத்தோடு பதிவுசெய்திருக்கிறார்.

1978-ல் அவர் எழுதிய ‘அவஸ்தை’ நாவல், லட்சியக் கனவுகளுடன் அரசியலில் ஈடுபடும் இளைஞன் கிருஷ்ணப்ப கௌடாவின் வளர்ச்சி யையும், அதிகாரம் கிடைக்கும்போது அவன் செய்யும் சமரசங்களையும், அவனது ஆளுமை கொள்ளும் சிக்கல்களையும் அழகாகச் சொல்லும் படைப்பு. லட்சியவாதமும், ஊழலும் எதிரெதிர் புள்ளிகளில் இல்லை என்பதை உணர்த்தும் படைப்பு அது.

இந்திய சமூகத்தில் பெரும் லட்சியக் கனவுகளுடன் மாற்றத்தைக் கனவுகண்ட இளைஞர்கள் பொது வாழ்வில் குதித்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் அது. கிருஷ்ணப்ப கௌடாவைப் போல நாம் இன்று பார்க்கும் எத்தனையோ சமரச அரசியல்வாதிகள் அந்த லட்சியவாத காலகட்டத்தின் முளைகள்தான்.

சம்ஸ்காரா, பாரதிபுரா, அவஸ்தே, பவா, திவ்யா என ஐந்து நாவல்களையும் எட்டு சிறுகதை நூல்களையும் படைத்திருக்கிறார். இத்துடன் ஒரு நாடகம் மற்றும் கவிதை, கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரது இதழியல் கட்டுரைகள் கன்னட வாசக சமூகத்தால் விரும்பி வாசிக்கப்பட்டவை.

அரசியல்ரீதியாக அனந்தமூர்த்தி ஒரு சோஷலிஸவாதி. நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கிறார். இந்தியாவில் வளர்ந்துவரும் இந்து வகுப்புவாத அரசியலைத் தொடர்ந்து கண்டிப்பவராக இருந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமர் ஆனால் நாட்டை விட்டே வெளியேறிவிடுவதாகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். மோடி அதிகாரத்துக்கு வந்தால் நமது நாகரிகத்திலேயே பெரிய மாற்றம் வரும் என்றும் எச்சரித்தார்.

இந்திய அளவில் மதிக்கப்படும் அறிவுஜீவியாகத் திகழ்ந்த யு.ஆர்.அனந்தமூர்த்தியின் எழுத்துகள் அவர் வாழும் காலத்திலேயே கர்நாடகத்தில் ஒவ்வொரு வீட்டிலும், கல்லூரியிலும் விவாதிக்கப்பட்டன.

கர்நாடகாவில் உருவான தலித் இலக்கிய, அறிவுச்செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்தவராகவும் அனந்தமூர்த்தி செயல்பட்டார். கர்நாடக தலித் இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த மறைந்த டி.ஆர்.நாகராஜ் மற்றும் கவிஞர் சித்தலிங்கய்யா ஆகியோருடன் தொடர்ந்து விவாதித்தார். டி.ஆர்.நாகராஜ், அனந்தமூர்த்தியை தனது துரோணராகக் கருதியவர். அவர் தனது 40 வயதுகளில் இறந்தபோது, அஞ்சலிக் குறிப்பு எழுதிய அனந்த மூர்த்தி, எனக்கு சிஷ்யனாகவும், குருவாகவும் இருந்தவரை இழந்து விட்டேன் என்று எழுதினார். வாழ்நாள் முழுவதும் கற்பதில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு கலைஞனின் வெளிப்பாடு இது.

1994-ல் ஞானபீட விருதுபெற்ற யு.ஆர். அனந்தமூர்த்தி, மேன் புக்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றவர். கன்னடத்திலிருந்து நேரடியாக இவரது படைப்புகளான சம்ஸ்காரா, அவஸ்தை, பிறப்பு, பாரதிபுரா போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x