Last Updated : 26 Aug, 2018 09:33 AM

1  

Published : 26 Aug 2018 09:33 AM
Last Updated : 26 Aug 2018 09:33 AM

தேரையும் தேரையர்களும்: சில தமிழ் மரபுகளின் குறிப்புகள்

தவளை இனத்தின் வகையான தேரை, நிலத்திலும் நீரிலும் வாழ்ந்தாலும்கூட நீரிலே முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கக் கூடியது. தேரை மோந்த தேங்காய் என்று ஒரு தென்னை நோய்க்குப் பெயர் உண்டு. இதனால், ‘தேரையார் தெங்கிளநீர் உண்ணாப் பழி சுமப்பர்’ என்ற பழமொழியும் உண்டாயிற்று. முத்தொள்ளாயிரத்தில் ‘அன்னையுங் கோல்கொண்..’ என்ற பாடல் இதை விளக்குகிறது.

டி.வி.சாம்பசிவம் பிள்ளை தனது மருத்துவ அகராதியில் தேரை குறித்து ஏராளமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார். இது குழந்தைகள் மேல் பட்டால் தோஷம் தாங்கி இளைத்துப்போவார்கள் என்ற நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார். தேரையை ஆடி மாதத்தில் பிடித்துவந்து தலையை அறுத்து, குடலை நீக்கி, நிழலில் உலர்த்தி, மைபோல இடித்துத் தயாரிக்கும் பொடி ஒன்றை ‘தேரைச்சூரணம்’ எனும் மருந்தாகக் குறிப்பிடுகிறார். உடம்பு உலர்ந்து, வற்றி வெளுத்து, கண்பொடித்து, கைகால் வற்றி, மேல் மூச்சு வாங்கி, நெரிகுரல் பட்டுத் தேரையைப் போல சுருங்கி குழந்தைகளுக்கு வரும் ஒருவகை நோயைத் ‘தேரை தோஷம்’ என்கிறார். இது குழந்தைகளின் மேல் தேரை விழுந்து பீய்ச்சுவதனால் ஏற்படும் தோஷம். தேரை தோஷத்தினால் உடம்பு இளைப்பதற்கு ‘தேரை பாய்தல்’ என்று பெயர். ‘தேரை விழுந்த பிள்ளை’ என்பது தேரை தோஷத்தால் பீடிக்கப்பட்டு இளைத்த குழந்தையைக் குறிக்கும். கருவுற்ற பெண்களின் மீது தேரை பாய்ந்தால் தேரைப்பிள்ளை பிறக்கும் என்றொரு நம்பிக்கையும் உண்டு.

இவ்வாறு இருக்க, ‘தேரையர்’ எனும் பெயரில் தமிழில் புலவர்களும் சித்தர்களும் இருக்கிறார்கள். புறநானூறு 362-ம் பாடலை எழுதிய சிறுவெண்தேரையாரும், அதற்கு அடுத்த பாடலை எழுதிய ஐயாதிச் சிறுவெண்தேரையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரையும் வேறானவர்களாய்க் கொள்கிறார் அவ்வை துரைசாமிப் பிள்ளை. உ.வே.சாமிநாதையரோ இருவரையும் ஒருவர் என்கிறார். சங்ககாலத்துக்குப் பிறகு தேரையர் என்னும் பெயரில் ஒரு சித்தர் வாழ்ந்துள்ளார்.

தேரையர் குறித்துப் பல கதைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு:

1) “இவர் தருமசௌமியர் மாணாக்கர்; இவரை அகத்தியர் மாணாக்கர் என்று சிலர் கூறுவர். இவர் ஒருவருக்குத் தலைநோயிருந்த காலத்து அதைத் தீர்க்க அகத்தியருடன் செல்ல, அகத்தியர் கபாலத்தை நீக்கிப் பார்க்கையில் தேரையிருக்க அதையெடுக்கச் செல்கையில் இவர் தடுத்துத் தாம்பாளத்தில் நீர் காட்டின் அது குதித்து விழும் என அவ்வகைக் காட்ட அது குதித்து நீரில் விழுந்தது. இவ்வகைக் குறிப்பாகக் கூறியபடியால் தேரையர் எனப் பெயர் உண்டாயிற்று என்பர்” (ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி).

2) “அகஸ்தியரிடத்தில் தமிழ் வைத்தியங் கற்றுக்கொண்ட மாணாக்கருள் ஒருவர். இவர் ஒரு தெய்வ வைத்தியர். இந்திரன் தீரா தலைவலியால் பீடிக்கப்பட்டபோது இவர் அதன் காரணத்தை ஒருவாறு கண்டு தேர்ந்து, கபாலவோட்டைத் தறித்து உள்ளே தேரையைக் கண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு அருகிற்காட்ட தேரை அதில் துள்ளிவிழ மறுபடியும் கபாலத்தை மூடி நோயைத் தீர்த்ததினால் இவருக்குத் தேரையரென இக்காரணப்பெயர் அமைந்ததென்றும் சொல்வதுண்டு” (டி.வி.சாம்பசிவம் பிள்ளை, மருத்துவ அகராதி).

இந்த இரண்டு கதைகளிலுமே ஒரு ரணசிகிச்சையின் மூலம் கபாலத்திலிருந்து தேரையொன்றை வெளியே எடுப்பதாய்க் குறிப்பிடப்படுகிறது. கபாலத்தினுள் தவளை புகுந்ததெப்படி? முற்காலத்தில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஜலநேத்தி என்ற பயிற்சியைப் பலரும் மேற்கொண்டனர். க.அருணாசலம் கூறுவதுபோல, “சுத்தமான குளிர்ந்த நீரையோ இளஞ்சூடான நீரையோ மூக்குத் துவாரங்களின் வழியே உறிஞ்ச வேண்டும். ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு, மற்றொரு துவாரத்தின் வழியாக நீரை உறிஞ்சி மூடிய துவாரத்தைத் திறந்து மற்றொரு துவாரத்தை மூடுவதன் மூலமாக வெளியேற்றலாம். மூக்கின் அடிப்பகுதியைக் கழுவுவதற்குத் தண்ணீரை வாய்வழியாக வெளியே கொண்டுவரலாம். அல்லது விழுங்கியும்விடலாம். இப்படி உறிஞ்சுவதை ஒவ்வொரு மூக்குத் துவாரம் வழியாகவும் மாறி மாறி இரு தடவைகள் செய்யலாம். சளி அல்லது வேறு மூக்கு நோயுள்ளவர்கள் இப்பயிற்சியை ஒரு நாளில் இரண்டு மூன்று தடவைகள் செய்யலாம். ஜலநேத்திக்குப் பின் ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு மற்றொரு மூக்கைச் சிந்தி அதில் எஞ்சியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும். இப்படியே மற்ற மூக்குத் துவாரத்திலுள்ள நீரையும் வெளிக் கொண்டுவந்துவிடுவது நல்லது.” (உடல் தூய்மைக்கு உதவும் ஆறு வழிகள்).

முட்டை வடிவில் மூக்கினுள்ளும் பின் கபாலத்தினுள்ளும் தேரை புகுந்திருக்க வேண்டும் என்பது மேற்படி கதைகளின் எடுகோள். அறிவியலில் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனச் சிலர் வாதிக்கவும் கூடும்.

தமிழ் மரபில் அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர். அவருக்குத் தமிழ் கற்பித்தவர். ஆனால், பௌத்த மரபிலோ அகத்தியருக்கு அவலோகீதேஸ்வரர் என்கிற போதிசத்துவர் தமிழ் கற்பித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் பௌத்த இலக்கண நூலான வீரசோழியத்தின் பாயிரத்தில் வரும் ‘ஆயுங் குணத்தவ லோகிதன்’ என்ற பாடல் இதை விளக்குகிறது.

அவலோகீதேஸ்வரர் ஒரு போதிசத்துவர். போதிசத்துவர்கள் நிர்வாண நிலையை அடையும் நிலையில் இருந்தாலும் மொத்த சமூகமும் சமூகமுக்தி அடையும் வரையிலும் காத்திருப்பவர்கள். எல்லா உயிரினங்களின் மீதும் அன்பும், பரிவும், அருளும் கொண்ட அருளாளர்கள். அவலோகீதேஸ்வரர் அகத்தியருக்குத் தமிழ் கற்பித்தார் என்கிற தொன்மம் தமிழ் பௌத்தத்துக்கே உரிய சிறப்பான தொன்மங்களில் ஒன்று. அவலோகீதேஸ்வரரும் அகத்தியரும் இடம்பெறும் தொன்மங்களில் தேரையர் என்கிற மருத்துவச் சித்தரும் இடம்பெறுவது நினைவில் கொள்ளத்தக்கது; ஆய்வுக்கும் உரியது.

- சுந்தர் காளி, பேராசிரியர்.

தொடர்புக்கு: sundarkali@yahoo.co.in சுந்தர் காளி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x