Published : 05 Aug 2018 08:58 AM
Last Updated : 05 Aug 2018 08:58 AM
எந்த ஒரு மொழியும் தன்னுடைய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. காலம், சற்று தாமதமாகவேனும் தன் பெறுமதிகளைச் சேகரித்துக்கொள்ளத் தவறுவதில்லை. அதேசமயம், ஆரவாரப் பொக்குகள் வெகு சீக்கிரமாகவே தூசுகளாக மறைந்துவிடுகின்றன. ப.சிங்காரம் என்ற கலைஞனை நான் கண்டடைந்து வெளிப்படுத்தியதன் மூலமே அவர் படைப்புகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன என்றொரு பேச்சு நிலவுகிறது. நிச்சயமாக அப்படியில்லை. அவை வெளிப்பட சற்று தாமதப்பட்டிருக்கலாம். அவ்வளவே. ப.சிங்காரத்திடமும் என்னால்தான் அவர் அறியப்பட்டுக்கொண்டிருப்பதான எண்ணம் வலுவாகப் பதிந்திருந்தது. ‘புயலிலே ஒரு தோணி’ பற்றி நான் எழுதியது, உரையாடியதன் தொடர்ச்சியாகவே அது தனக்கான இடத்தைப் பெற்றது என்று அவரைச் சந்தித்த ஒவ்வொருமுறையும் சொல்லத் தவறியதில்லை.
1987-ல் வெளிவந்த ‘புதுயுகம் பிறக்கிறது’ முதல் இதழில் தமிழின் சிறந்த மூன்று நாவல்களில் ஒன்றாகப் ‘புயலிலே ஒரு தோணி’யை நான் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்தே ப.சிங்காரம் குறித்தும் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் குறித்தும் கவனக்குவிப்பு ஏற்பட்டது. ‘புதிய பார்வை’ இதழில் நான் ‘நடைவழிக் குறிப்புகள்’ எழுதத் தொடங்கியபோது ப.சிங்காரம் பற்றி எழுதிய குறிப்பிலிருந்துதான் அந்தத் தொடரே, உரிய அங்கீகாரம் பெற்றிராத தமிழ் ஆளுமைகள் பற்றியதாகத் திட்டமான வடிவம் பெற்றது. அவருடைய நாவல்களைப் படித்துவிட்டு இலக்கிய ஆர்வலர்கள் அவரைப் பார்க்கப் பரவசத்துடன் வந்ததில் அவர் உற்சாகமும் சந்தோஷமும் அடைந்திருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்ற ஒவ்வொருமுறையும் யார் யார் வந்து போனார்கள் என்று சொல்வார். அவர்கள் யாரென்று கேட்பார். எனினும், நவீனத் தமிழ் இலக்கியச் சூழலோடு உறவுகொள்ள அவர் விருப்பமோ முனைப்போ கொண்டிருக்கவில்லை.
ஒருமுறை கோணங்கியும் மார்க்ஸும் வந்திருந்ததாகவும் அவருடைய நாவல்களை வெளியிட மார்க்ஸ் அனுமதி கேட்டதாகவும் சொன்னார். பலரும் தன் நாவல்கள் மீது அக்கறை கொள்ளத் தொடங்கியிருப்பது குறித்த மகிழ்ச்சி அவரிடம் இருந்தது. அதேசமயம் எந்த மாற்று முயற்சிகள் எடுக்கவும் அவருக்கு நாட்டமிருக்கவில்லை. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில்தான் முதன்முறையாக அவரிடம், “உங்கள் நாவல்களின் காப்புரிமையைத் தரக்கூடிய வகையில் நெருங்கிய சொந்தம் யாரும் இருக்கிறார்களா” என்று கேட்டேன். “சென்னையில் அக்கா பையன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு வேண்டுமானால் கொடுத்துவிடலாம்” என்றார். தன் உறவு பற்றி அவர் பேசியது அந்த ஒரே ஒருமுறை மட்டும்தான்.
1996 இறுதியில் நான் உடல்நலமிழந்து உறவுகளின் பராமரிப்பில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் மதுரை சென்றிருந்த சமயம். சிங்காரம் உடல்நலமின்றி இருப்பதாக அறிந்து, என் உடல்நலம் சற்று தேறிய நிலையில் அவரைப் பார்க்கச் சென்றேன். அதுதான் அவருடனான என் கடைசி சந்திப்பாகவும் அமைந்துவிட்டது. அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். நான் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததும் அவருக்குத் தெரிந்திருந்தது. மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு.
மதியம் பக்கத்திலிருந்த ஒரு அசைவ மெஸ்ஸுக்கு மிகுந்த விருப்பத்துடன் கூட்டிச்சென்றார். அவர் ஒருவரைச் சாப்பிடக் கூட்டிச்செல்வது அவருடைய தீவு வாழ்க்கையில் அதுதான் முதன்முறையாக இருக்கும் என்பது என் அனுமானம். இருவருக்கும் இலைகள் போடப்பட்டன. எனக்கு அப்போது ஏற்பட்டிருந்த உடல்நலக் குறைபாடென்பது, பாலி-நியுராஸிஸ் என்ற நரம்பு மண்டல பாதிப்பு நோய். என் கை விரல்களுக்கிடையே எவ்வித ஒத்திசைவும் இல்லை. நோய் வசப்பட்டதிலிருந்து தட்டில் ஸ்பூனால்தான் சாப்பிட்டுவந்தேன். சரி முயன்றுபார்க்கலாம் என்று எதுவும் சொல்லவில்லை. ஆனால், விரல்களை இணைத்து சாதத்தை எடுக்க முடியவில்லை. ஓரிரு பருக்கைகளே விரல்களில் ஒட்டிக்கொண்டுவந்தன. சிங்காரம் என் நிலை பார்த்துப் பரிதவித்துப்போய்விட்டார். “எப்படி சாப்பிடுவீர்கள்” என்றார். “தட்டு, ஸ்பூனில்” என்றேன். அவர் அந்த மெஸ்ஸின் நெடுங்கால வாடிக்கையாளர் என்பது நன்கு தெரிந்தது. பரிமாறுபவரிடம் தட்டு கொண்டுவரச் சொன்னார். அவர் அங்கும் இங்குமாகப் போய்விட்டு, “இல்லை” என்றார். பக்கத்துப் பாத்திரக்கடைக்குப் போய் வாங்கிவரச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் புது எவர்சில்வர் தட்டு வந்தது. ஸ்பூன் இல்லை. சிங்காரம் மெல்லிய கோபத்துடன் உரிமையாளரிடம் சலித்துக்கொண்டார். ஒருவழியாக, ஊறுகாய்க் கிண்ணத்திலிருந்த ஸ்பூனைக் கழுவித் தந்தார்கள். நாங்களும் ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்து அறை திரும்பினோம்.
50 ஆண்டு கால அந்த அறை வாசம் பற்றியும் இப்போது நிர்வாகம் அவரைக் காலி பண்ணச் சொல்லி நெருக்கடி கொடுப்பதையும் சொன்னார். அறையின் மூலையிலிருந்த டிரங்க் பெட்டியிலிருந்து சில புத்தகங்களை எடுத்து, வைத்துக்கொள்ளுங்கள் என்றார். எல்லாமே பழந்தமிழ் இலக்கியங்கள். என்னால் அதிக கனத்தை சுமந்துசெல்ல முடியாதென்பதால் மறுமுறை வரும்போது எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி நான்கைந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டேன். அவற்றில் ஒன்று, ‘சங்கத் தமிழ் இலக்கியச் சொல்லகராதி’. ஒருமுறை, கோணங்கி அதை ஆசையாகக் கேட்டார். கொடுத்துவிட்டேன்.
பழந்தமிழ் இலக்கியங்களின் மீது சிங்காரத்துக்கு ஈடுபாடும் வாசிப்பும் இருந்திருக்கிறது. அவருடைய இரு நாவல்களுமே அதன் வலுவான தடங்களைக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், பண்டைத் தமிழர் வாழ்வு, இலக்கியம், பண்பாடு, வீரம் பற்றிய பெருமிதங்களின் மீதான கூரிய விமர்சனக் குரலும் நாவல்களில் வலுவாகவே ஒலிக்கிறது. இரு நாவல்களிலுமே பழந்தமிழ் நூல்களிலிருந்து பல விசயங்கள் அலசி ஆராயப்படுகின்றன. தமிழ்ப் பேரவை அமைத்து விவாதங்கள் நடைபெறுகின்றன. மண்ணுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் என்ற லட்சியக் கனவோடுதான் ‘கடலுக்கு அப்பால்’ செல்லையாவும், ‘புயலிலே ஒரு தோணி’ பாண்டியனும், பல தமிழ் இளைஞர்களும் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர். எனினும், மனம் சோர்வடையும்போதும், குழம்பித் தடுமாறும்போதும், வெறுமை பீடிக்கும்போதும் செல்லையாவையும் பாண்டியனையும் ‘அரசியின் மனம் கவர்ந்த அறிவழகரான’ தாயுமானவரின் வரிகளே பின்தொடர்கின்றன. ‘எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும்’ என்பதும், ‘ஒன்றை விட்டொன்று பற்றிப் பாசக் கடற்குள்ளே வீழாமல்’ என்பதும் அடிநாதமாய் இவ்விரு நாவல்களிலும் இசைத்துக்கொண்டே இருக்கின்றன. ப.சிங்காரத்தின் இருப்பையும் வாழ்வையும் தீர்மானித்த வரிகளும் இவையென்றே தோன்றுகிறது.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.comசி.மோகன்ப.சிங்காரம்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT