Published : 30 Aug 2014 12:00 AM
Last Updated : 30 Aug 2014 12:00 AM
இந்திய மெய்யியலுக்கும், மார்க்சியத்துக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருபவர் பேராசிரியர் ந. முத்துமோகன். அவரின் ஆசிரியர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனை ஒன்பது நேர்காணல்களின் வழி இந்நூலில் பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் நேர்காணல்கள் சுய வெளிப்பாடாக அமைந்துவிடுவதுண்டு. மாறாக இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மதிப்பிடுகிறது. எதிர்காலச் செல்நெறிக்கு கட்டியங்கூறு கிறது.
இந்த உரையாடல்கள் மார்க்சியத்தின் பன்முகப் பயன்பாட்டை உறுதிசெய்கின்றன. இந்தியச் சூழல்களில் மார்க்சியம் எதிர்கொண்டச் சிக்கல்களையும் விவாதிக்கின்றது. திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகியன குறித்து ஆரோக்கியமான மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்துத்துவத்துக்கு எதிரான கருத்தியல், நாட்டுப்புற கிறித்தவம், கிறித்தவத்தில் சாதிமுறை, அடித்தள இஸ்லாம், தர்ஹா வழிபாடு ஆகியன குறித்தும் காத்திரமான ஆய்வுகள் நிகழ்த்தியதன் மூலம் உண்மை யான சமயச் சார்பற்ற தன்மை ஆய்வு களில் புலப்பட்ட விதமும் முன்வைக்கப்படு கின்றது.
மக்கள் சார்ந்த, சகல ஆதிக்கங்களுக்கும் எதிரான, அதிகார எதிர்ப்புடன் கூடிய நடைமுறை சார்ந்த யதார்த்த ஆய்வை, எழுத்தைத் தான் தேடிக் கண்டடைந்ததை ஆ. சிவசுப்பிரமணியன் இவ்வுரையாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
“அடிப்படை / மேற்கட்டுமானம், பண்பாட்டு அரசியல், ஃபிராய்டியமும் மார்க்சியமும், நனவிலி மனமும் நனவு மனமும், பொருளாதாரப் பிரச்சினைகளும் பண்பாட்டுப் பிரச்சினைகளும், வர்க்கமும் சாதியும், மார்க்சியமும் தலித்தியமும், மார்க்சியமும் பெண்ணியமும், வடிவமைக்கப்பட்டப் போராட்டங்களும் தன்னிச்சையான எழுச்சிகளும், ஒன்றிணைந்த போராட்டங்களும் உதிரியான எழுச்சிகளும் இப்படிப் பல வகையான பிரச்சினைகளைப் பேராசிரியர் சிவம் தனது கட்டுரைகளிலும் நூல்களிலும் கையாண்டுள்ளார்” எனப் பின்னுரையில் ந. முத்துமோகன் குறிப்பிடுவது உரையாடல்களில் விரிவாக்கம் பெறுகிறது.
மார்க்ஸ், அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் முதலிய அறிஞர்களின் கருத்தியல் ஒன்றிணைவு குறித்த அக்கறை வெளிப்படுகின்றது. எல்லா நிலையிலும் சனநாயகமும், பன்மைத்துவமும் வலியுறுத்தப்படுகின்றன. இருபெரும் அறிஞர்கள் தேநீர்க் கடைகளில் உரையாடும் விவசாயிகளின் குரலில், மொழியில், ஆக பெரிய விஷயங்களை விவாதப்புள்ளிகளாக்கி யுள்ளார்கள்.
உரையாடல் என்ற வடிவமே சனநாயகப் பண்பு கொண்டது. இந்த உரையாடலைப் பதில் உரையாடல்களால் நிரப்புவது தமிழ் அறிவுலகின் கடமை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT