Published : 29 Jul 2018 09:37 AM
Last Updated : 29 Jul 2018 09:37 AM
சிவப்பு என்றால் புரட்சி, வெள்ளை என்றால் சமாதானம் என்று ஒவ்வொரு நிறத்துக்கும் அரசியல் அர்த்தம் சொல்பவர்கள், நீல நிறத்தை ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலோடு பொருத்துகிறார்கள். அரசியல் களத்தில் அதுதான் அர்த்தம். ஆனால், அகத் திணையில் அது காதலின் நிறம். கூடலும் கூடல் நிமித்தமும் குறிக்கும் குறிஞ்சியின் நிறம் நீலம். குறிஞ்சி என்பது முதலில் கூடலைத்தான் சொன்னது. பின்னரே, அது நிலத்துக்கு உரிப்பொருளாயிற்று என்று வாதிட்ட தமிழறிஞர்களும் உண்டு.
மலரே குறிஞ்சி மலரே என்று தலைவியையே மலராக்கியவர்கள் நமது திரைக்கவிஞர்கள். தலைவன் சூட நீ மலர்ந்தாய், பிறவிப்பயனை அடைந்தாய் என்ற அடுத்தடுத்த வரிகள் பெண்ணுரிமைப் போராளிகளைச் சினஞ்கொள்ளச் செய்யலாம். மணம் முடித்த பின்னரே பெண்கள் மலரணிவது பழந்தமிழர் வழக்கம். தலைவன் தலைவியின் கூந்தலில் மலர் சூட்டுதல் மணச்சடங்காயிருந்தது. அதையெல்லாம் சொல்லி அந்தத் திரைப்பாடலின் பல்லவி மலரைப் பார்த்து பாடியதுதான் என்றும் மலர்கள் மங்கையரின் கூந்தலேறிய பிறகே பிறவிப்பயனை அடைகின்றன என்றும் பொருள்விளக்கம் கொடுக்கலாம்தான். ஆனால், இறைவனடி சேர்வதே பிறவியின் பெரும்பயனும் பேரின்பமும் என்ற இடைக்கால பக்திநெறிக்கு மாற்றாக, தனது பாடல்களில் காதலையே பேரின்பமாகப் பாடி பரவசமடைந்த வாலிக்கு அது துரோகமாகிவிடும்.
2006-க்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து, வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நீலக்குறிஞ்சி மலர்களால் பூத்துக்குலுங்கப்போகிறது மேற்குத் தொடர்ச்சி மலை. நீலம் பரவட்டும்!
- செல்வ புவியரசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT