Published : 14 Jul 2018 08:54 AM
Last Updated : 14 Jul 2018 08:54 AM
மா
ணவப் பருவத்திலேயே பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர். மிக இளம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான வாசகர்களைத் தன்வசப்படுத்தியவர். மாணவர்களை ஊக்குவிப்பவராகவும், இதழியல் நடவடிக்கைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துபவராகவும் இருந்தார். பட்டுக்கோட்டை என்றாலே கல்யாணசுந்தரமும் அழகிரியும் நினைவுக்குவரும் வேளையில், தன் பெயரையும் அதோடு இணைத்துக்கொண்டவர்.
ஏன் எழுதுகிறீர்கள்?
எழுத வருகிறது. எழுதப் பிடிக்கிறது. என் எழுத்து பலருக்கும் பிடிக்கிறது. எழுதினால் பாராட்டுகிறார்கள். அந்தப் பாராட்டு பிடிக்கிறது. எழுதினால் பணம் கிடைக்கிறது. எல்லோருக்கும்போல பணம் எனக்கும் தேவையாக இருக்கிறது. இதனாலெல்லாம்தான் எழுதுகிறேன்.
எந்த நேரம் எழுதுவதற்கு உகந்ததாக இருக்கிறது?
பொதுவாக, நான் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை எழுதுகிறேன். இந்த நேரம் எனக்கு உகந்த தாக இருக்கிறது. ஆனால் அவசியம், நேர நெருக்கடி காரணமாக மாலையிலும் நள்ளிரவிலும்கூட எழுதுகிறேன்.
உங்கள் எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது என்று நினைக்கிறீர்கள்?
எனது எழுத்து வாழ்க்கை என்பது இன்னும் இருப்பதால் எப்படி இதற்குப் பதில் சொல்ல முடியும்? ‘இதுவரை எழுதியதில்’ என்று கேள்வியை மாற்றி அமைத்துக்கொண்டால்... ‘பூர்த்தி’ என்பதை ‘அதிக திருப்தி’ என்றும் மாற்றியமைத்துக்கொண்டால்... ‘நீ மட்டும் நிழலாடு’, ‘கனவுகள் இலவசம்’, ‘தொட்டால் தொடரும்’,‘ஆகாயத்தில் ஆரம்பம்’, ‘பிருந்தாவனமும் நொந்த குமாரனும்’, ‘இரண்டு வரிக் காவியம்’ போன்றவற்றைச் சொல்லலாம்.
எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?
தொடர்கதை எழுதும்போது திடீரென்று குறுக்கிடும் அவசரப் பயணங்களும், வீட்டில் நிகழும் சம்பவங்களும் சேர்ந்து அந்த வாரத்துக்கான அத்தியாயத்தை எழுத இயலாத மனநிலையை ஏற்படுத்திவிடும். ஆனால், பத்திரிகையின் காலக்கெடு உந்தித்தள்ள, மனம் முழுக்க சோகம், குழப்பம், பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ஆனால், அந்தக் கதையின் போக்கில் எந்தத் தொய்வும் விழாமல் கதைக்குள் வலுக்கட்டாயமாக மனதை ஈடுபடுத்திக்கொண்டு எழுதித் தரும்போது மனச்சோர்வை உணர்வதுண்டு.
எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அறிவுரை எது?
எழுத்தாளரும் ஆசிரியருமான சாவி அவர்களும், விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களும் நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் கடிதங்களின் மூலமும், நேரிலும் தொடர்ந்து ஊக்கப்படுத்தியும், அறிவுரைகளும் சொல்லிவந்திருக்கிறார்கள். எழுத்தாளர்களில் சுஜாதாவும், பாலகுமாரனும் பல டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், ஓவியம், சினிமா... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?
எழுத்தாளனாக ஆவதற்கு முன்பிருந்தே நான் சினிமா ரசிகன். கல்லூரிக் காலங்களில் நூற்றுக்கணக்கான சினிமாக்கள் பார்த்தவன். சிறந்த புதிய படங்களைத் திரையரங்குக்குச் சென்று பார்ப்பதும், எனக்குப் பிடித்த படங்களை வீட்டில் பார்ப்பதும் இன்றும் தொடரும் விஷயம்.
இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என்று நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?
ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் வாங்கிவரும் புத்தகங்களில் உடனடியாகப் படிக்கப்பட்ட புத்தகங்கள் தவிர்த்து, இதைப் பிறகு படிக்கலாம் என்று தனியாகப் பிரித்து வைத்திருக்கும் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.
இன்னும் படிக்காமல் இருக்கிறோமே என்று எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சியையே ஏற்படுத்திக்கொண்டிருக்கும் படைப்பு பாலகுமாரனின் ‘உடையார்’.
இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?
இது வாசகருக்கு வாசகர் மாறுபடுகிறது. சிலர் இலக்கியத்தை ரசிக்க மட்டுமே படிக்கிறார்கள். சிலர் பொழுதைக் கடத்த மட்டுமே படிக்கிறார்கள். சிலர் கதைகளில் சொல்லப்படும் பிரச்சினைகளின் தீர்வு கள் தங்கள் வாழ்வின் பிரச்சினைகளுக்கும் பொருந்துவதாகக் கருதினால் ஒரு ரெசிபி மாதிரி அதை எடுத்துக்கொள்கிறார்கள்.
சோர்வான மனநிலையில் படிக்கப்படும் தன்னம்பிக்கை தரும் கதைகளும், கட்டுரைகளும் கண்டிப்பாக மனோதைரியத்தை அதிகப் படுத்தி நம்பிக்கையை வளர்க்கின்றன. இலக்கியத் தில் பொதிந்திருக்கும் நல்ல விஷயங்களைச் சரியாக அடையாளம் கண்டு தம்மைச் செதுக்கிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால், இந்தக் கூட்டம் குறைவே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT