Published : 05 Apr 2025 06:34 AM
Last Updated : 05 Apr 2025 06:34 AM
பாரதியாரின் முதல் பாடல் (தனிமை இரக்கம்) மதுரையிலிருந்து வெளிவந்த ‘விவேக பானு’ இதழில்தான் வெளிவந்தது. வ.ரா.வின் முதல் மொழிபெயர்ப்பும் மதுரையிலிருந்து வெளிவந்த ‘ஞானபானு’வில்தான் வெளியானது.
இப்படிப்பட்ட தகவல்கள் மதுரையிலிருந்து வெளியான இதழ்களின் இலக்கிய முக்கியத்துவத்தையும் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் காட்டுகின்றன. இதழ்கள் மட்டுமல்ல; புத்தகக்கடைகளும் மதுரையில் மிகுதியாக இயங்கியுள்ளன. காலையில் கறிக்கடையாகவும் மாலையில் புத்தகக் கடையாகவும் ஒரே கடை இரு வேடங்களைப் புனைந்துள்ளது. இதை நடத்தியதும் ஒருவரே.
‘ஸ்லாட்டர் ஹவுஸ் அண்ட் புக் ஹவுஸ்’ என்ற பெயரில் அது புகழும்பெற்றுள்ளது. புத்தகங்கள் மட்டுமல்ல அகராதிகளும் அதிகம் உருவாகியுள்ளன. ‘மதுரைப் பேரகராதி’, (1937), ‘சித்த மருத்துவ அகராதி’ (இ.ராம.குருசாமி கோனார், சதாசிவம் பிள்ளை ஆகியோர் தயாரித்தது) ஆகியவையும் மதுரையில்தான் உருவாகியிருக்கின்றன.
நாராயண ஐயங்கார் என்பவர், தான் பதிப்பித்த எல்லா நூற்பெயர்களுக்கு முன்னும் ஸ்ரீ என்ற முன்னொட்டைத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்ற செய்தி திகைப்பளிக்கிறது. மதுரையில் பெண்களுக்குத் தனிப்பள்ளியைத் தொடங்கியபோது அதற்கு எதிர்வினையும் வந்தது.
‘அடுத்து மாடுகளுக்கும் கல்விப் புகட்டுவார்கள்’ என்பது அந்த ஏளனம் (அவற்றால் படிக்க இயலும் என்றால் அதையும் தான் நாம் செய்ய வேண்டும்). மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு வாயில்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ‘கேட் ஸ்கூல்’ என்று அந்தப் பள்ளிகள் அழைக்கப்பட்டன.
இப்படியான பல அருஞ்செய்திகள் ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ என்கிற பொ.ராஜா எழுதிய நூலில் கிடைக்கின்றன. வழக்கமாகக் கல்வி வரலாறோ வேறு துறை வரலாறோ எழுதுகிறவர்கள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை மையமிட்டே ஆதாரங்களைத் திரட்டுவார்கள். பலவகையிலும் சென்னையே கேந்திர ஸ்தானமாக இருக்கும். அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
ஆவணக் காப்பகம், கன்னிமாரா நூலகம், மறைமலை நூலகம், இப்பொழுது ரோஜா முத்தையா நூலகம் போன்ற ஆதார வளங்கள் சென்னையில் செயல்பட்டு வந்தன/வருகின்றன. யதார்த்தத்தில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களிலும் வரலாற்றுக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
கிறிஸ்துவம் முதலில் திருநெல்வேலியில்தான் காலூன்றிப் பரவியது; ஒப்பிடுகையில் சுதந்திர சமஸ்தானமாகப் புதுக்கோட்டை விளங்கியது; மதுரையில் சங்கங்கள் தோன்றித் தமிழ் வளர்த்தன. இவை வட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுக்குரிய ஆவணங்கள் கிடைக்கும் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால், வட்டாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் பெரும்பாலும் முன்னெடுக்கப்படுவதில்லை. முழுமையை விரும்பும் ஆய்வாளர்கள், பிண்டத்தின் நிலையை ஆய்வதைத் திரஸ்கரித்தே வந்துள்ளனர். அதற்கு மாற்றான முன்னெடுப்பு இந்த ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல், சுவைபட அமைந்திருக்கிறது.
அதனால் இந்நூல் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வுதானா என்கிற சந்தேகத்தைத் தருகிறது. இந்தியர்கள் அச்சகம் வைத்துக் கொள்ளலாம் என்கிற உரிமை 1835இல்தான் கிடைத்தது. ஆகவே அதிலிருந்து இந்தியா குடியரசான 1950 வரையிலான காலப்பகுதியை இந்த ஆய்வாளர் ஆய்வுக்குரிய காலமாக எடுத்துக் கொண்டுள்ளார். அப்பகுதியிலான அச்சுப் பண்பாட்டு அசைவுகளை விரிவாகப் பதிவுசெய்துள்ளார்.
பேராசிரியர் பில்லியோசா தனது மதிப்புரையில் ‘மதுரைப் பேரகராதி ‘பறை’ என்கிற சொல்லுக்குத் தந்திருக்கும் ‘விரும்பிய பொருள்’ என்ற பொருள் சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இல்லை’ என்று கூறியிருக்கிறார். அந்தப் பொருள் திருப்பாவையில் (பாடல் 28) வரும் ‘பறை’ என்பதற்குப் பொருத்தமாக உள்ளது என்றும் சுட்டியிருக்கிறார். இந்தத் தகவலை நூலாசிரியர் மேற்கோளாகக் காட்டுகிறார். ஆனால், சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலும், மு.சண்முகம் பிள்ளை அகராதியிலும் ‘விரும்பிய பொருள்’ என்ற பொருள் தரப்பட்டுள்ளது.
சிவனே சொன்னாலும் ஒரு தடவை சிரமத்தைப் பார்க்காமல் சரி பார்த்துவிடுவது நல்லது. அதுவும் ‘மதுரை மரபு’தான்! ‘சூரிய நாராயண சாஸ்திரியார், கலாவதி நூலை ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதிக்கு உரிமை ஆக்கினார்’ என்று ஒரு குறிப்பை ஆய்வாளர் எழுதியிருக்கிறார்.
இந்த உரிமை உரை என்ற சொற்றொடருக்குக் காணிக்கை, அர்ப்பணம் ( Dedication) என்பனவே பொருள். மற்றபடி அந்த நூலின் பதிப்புரிமை நூலாசிரியரிடமே இருக்கும். அச்சுப்பிழைகள் இல்லாத நூல் இந்தக் காலத்தில் ஒரு நூலா? இத்தகைய வட்டார வளங்களைத் தொகுக்கும் முயற்சிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும். மதுரை வாசகர்கள் மட்டும் வாங்கினால் கூட போதும். பொன்னையா ராஜா பதிப்பித்த பிரதிகள் அனைத்தும் விற்று விடும். செய்வார்களா?
மதுரை பதிப்பு வரலாறு (1835-1950)
பொ.ராஜா
நீலம் பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 6369825175
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment