Published : 27 Mar 2025 05:01 PM
Last Updated : 27 Mar 2025 05:01 PM
பாரம்பரிய முறையில் உருவான நாடக நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல் சற்று வேறுபட்டது வீதி நாடகம். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் எனப் பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்களில் வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்த நாடகங்களைக் காண மக்கள் ஓர் இடத்தைத் தேடிச் செல்லத் தேவையில்லை. சமூகப் பொறுப்போடும் விழிப்புணர்வு ஊட்டும் நோக்கத்தோடும் செயல்படும் வீதி நாடகங்கள், அப்போது முதல் இப்போது வரை மக்களைத் தேடிச் செல்கின்றன.
விடுதலைக்காக... - இந்தியாவில் இப்படி மக்களைத் தேடிச் சென்று நாடகம் போடுவது புதிதல்ல என்றாலும், வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்படாமல், சமூகப் பிரச்சினைகளைப் பேசியதாலும், விழிப்புணர்வு ஊட்டியதாலும் வீதி நாடகங்கள் தனித்துவம் பெற்றன. 1940களின் ஆரம்ப காலக்கட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் முனைப்பில் நாடு முழுவதும் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது.
தேச விடுதலைக்காகவும், சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தீவிரப்படுத்தவும், களத்தில் மக்களை ஒன்றிணைக்கவும் நாடகங்கள் உருவாக்கப்பட்டன. இதில், இந்திய விடுதலைக்காக வீதி நாடகங்கள் உருவாக்கியதில் ஐபிடிஏ அமைப்பு (Indian people’s Theatre Association) பெரும் பங்காற்றியது. முதலில் மும்பையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்பு, இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்டு நாடகக் கலைஞர்களுக்காகவும், நாடகங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இயங்கிவருகின்றன.
விடுதலைப் போராட்டத்தில் எப்படி வீதி நாடகங்களின் பங்கு இருந்ததோ அதேபோல எய்ட்ஸ் நோய் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு போன்று மருத்துவம், சுகாதாரம் தொடர்பாகவும், மது ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளைக் களைவதிலும் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம், பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு 1950 முதல் 2000ஆம் ஆண்டுவரை பெரும்பாலான இல்லங்களில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் வீதி நாடகங்களே சமூக அக்கறையோடு மக்களைச் சென்றடைந்தன.
சிறப்பு என்ன? - பாரம்பரிய நாடகங்கள், திரைப்படங்களைப் போல பல மணி நேரம் பிடிக்கக்கூடிய நிகழ்ச்சியாக இல்லாமல், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வீதி நாடகக் கலைஞர்கள் கைத்தேந்தவர்களாக இருப்பர். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழிநடை வீதி நாடகங்களில் பின்பற்றப்படும்.
ஒரு விஷயத்தை எடுத்துரைக்கும்போது வெறும் ஆலோசனையாக மட்டும் அல்லாமல், பேசப்படும் கருத்துகள் ஒருவரைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது வீதி நாடகங்களுக்கே உண்டான தனிச்சிறப்பு. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைக்காட்சி, கைபேசி போன்று மின்னணு சாதனங்களின் சந்தை பரவலாக்கப் பட்டுவிட்டது. இதனால் முன்பு இருந்ததைப் போன்று வீதி நாடகங்களின் மீதான வெளிச்சம் குறைந்துவிட்டாலும் வீதி நாடகங்கள் கடந்து வந்திருக்கும் பாதை மிக நீண்டது. - ராகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment