Published : 21 Mar 2025 06:33 AM
Last Updated : 21 Mar 2025 06:33 AM
‘இந்த நாடகத்தில் வரும் சில நிகழ்ச்சிகள், பொதுவாக நம் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து கற்பனையுடன் சேர்த்து எழுதப்பட்டது. யாரையும், எந்த தரப்பினரையும், அமைப்புகளையும் குறிப்பிடுபவை அல்ல என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்’ - என்ற பொறுப்பு துறப்பு வரும்போதே நிமிர்ந்து உட்கார வைக்கிறது நாடகம்.
ஆன்மிக சொற்பொழிவாளர் சுந்தரராஜ பாகவதரிடம் நீண்டகாலமாக இருக்கும் ஒரு கண்ணன் பொம்மை, அரசியல்வாதியான பாண்டியனின் வீட்டுக்கு வந்துவிடுகிறது.
அதன்பிறகு, பாண்டியனின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. நாத்திகரான பாண்டியனுக்கு கடவுள் நம்பிக்கை வந்ததா? திருமணமாகி குழந்தைப் பேறுக்காக பல காலம் காத்திருக்கும் இவர்களுக்கு மழலை செல்வம் கிடைத்ததா? எனும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது நாடகம்.
கட்சி மாறும் அரசியல்வாதி மூலமாக, புதிய கட்சிகளையும்கூட கலாய்க்கிறார் நாடகத்தை எழுதி, இயக்கியுள்ள குடந்தை மாலி. போலி பகுத்தறிவுவாதம், போலி பக்தி, ஆன்மிக அரசியல் ஆகியவற்றை தனக்கே உரிய தைரியத்தோடு விமர்சிக்கும் 90 வயது இளைஞரான அவரது தீரத்தை பாராட்டியே ஆகவேண்டும்.
பகுத்தறிவு கட்சியை சேர்ந்த பாண்டியனும் (கணேஷ்.ஜி), அவரது மனைவி கயல்விழியும் (நாஞ்சில் ரேவதி) மொத்த நாடகத்தையும் தாங்கிப் பிடிக்கின்றனர். உறுத்தாத ஒளி, ஒலியை வழங்குகிறார் கலைவாணர் கிச்சா. அரங்க அமைப்பும், நாடகத்தில் இடம்பெறும் பாடல்களும் ரசனை. ‘அரசியல்வாதிகளே இப்படித்தான்’ என்பதுபோலவே நாடகம் முழுவதும் காட்டுவதும், டாக்டராக வருபவர் திடீரென சுந்தரராஜ பாகவதராக மாறி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவதும் நெருடல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...