Last Updated : 02 Aug, 2014 12:00 AM

 

Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

அடிமைப்பட்டவர்களின் மொழியில் எழுதுகிறேன்: குமாரசெல்வா நேர்காணல்

குமராசெல்வா, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதி வட்டார வழக்கைத் தனது எழுத்தின் மூலம் பரவலான கவனத்திற்கு எடுத்துச் சென்றவர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் இவர், மார்த்தாண்டம் நேசமணி நினைவுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்...

சொந்த ஊர் மார்த்தாண்டம். குடும்பத்தில் பெரிதாகப் படித்தவர்கள் யாரும் கிடையாது. எண்ணெய் வியாபாரி, பந்தல் ஒப்பந்தகாரர் என அப்பா பல தொழில்கள் செய்தார். நான் ஏழாவது படிக்கும்போது திடீரென இறந்துவிட்டார்.

எங்கள் அம்மாதான் என்னையும் என் தம்பியையும் வளர்த்தார். நேசமணி நினைவுக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் படித்தேன்.

எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?

சிறிய வயதிலேயே கதைகள் எழுதத் தொடங்கி விட்டேன். ஊரில் ஒரு கடையில் வேலை பார்த்த ஒரு சின்னப் பையனுக்கு நேர்ந்த சம்பவத்தைப் பரீட்சைத் தாளில் கதையாக எழுதிவைத்தேன்.

அதைப் படித்துப் பார்த்து வாத்தியார் அடிப்பார் என நினைத்தேன். மாறாக அவர் அதைப் பாராட்டினார். ஏன் கதைகள் எழுதினேன், எனக்கு இந்தப் பாதிப்பு எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

இலக்கிய வாசிப்பு எப்போது கூர்மையடைந்தது?

கேரளப் பல்கலைக்கழகம் வழியாகத்தான். மலையாள இலக்கியங்களை வாசித்தேன். அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் இயங்கிய ஒரு இடதுசாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது.

அதன் வாயிலாக பாலஸ்தீன, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை வாசித்தேன். 1981-ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். அவர் மூலமாக அன்றைக்குள்ள தமிழ் இலக்கியங்கள் எனக்கு அறிமுகமாயின.

உங்கள் கதைகள் பிரசுரமானது எப்போது?

என் முதல் கதையான ‘ஈஸ்டர் கோழி’ தி. பாக்கியமுத்து நடத்திய ‘நண்பர் வட்டம்’ பத்திரிகையில் 1988-ல் வெளிவந்தது. ஆனால் அந்தக் கதையை நான் 1985-லேயே எழுதிவிட்டேன். இந்தக் கதைக்குப் பெரிய கவனம் கிடைத்தது.

ஆனால் சிறுகதையின் நுட்பங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சுந்தர ராமசாமிதான், ‘சம்பவங்களைக் கோவையாகச் சொல்வது மட்டும் சிறுகதை கிடையாது’ எனச் சிறுகதைகளின் நுட்பங்கள் குறித்து என்னிடம் சொன்னார்.

அதன் பிறகு என்னுடைய பல கதைகளை நானே எடிட்செய்து பார்த்தேன். அதற்குப் பிறகு அதற்கான வரவேற்பு தனியானதாக இருந்தது.

இவ்வளவு இறுக்கமான வட்டார வழக்கை ஏன் கதை சொல்ல எடுத்துக்கொண்டீர்கள்?

பொதுவாகக் கன்னியாகுமரி எனச் சொன்னால் நாஞ்சில்நாடு எனச் சொல்வார்கள். ஆனால் இதற்குள் பல நாடுகள் உள்ளன. முதலில் சேர நாடாக இருந்த இப்பகுதி வடக்கங்கூர், தெக்கங்கூர், வேணாடு, புறத்தாயநாடு எனப் பல பகுதிகளாகப் பிரிந்தது.

இதில் வேணாட்டின் ஒரு துண்டுப் பகுதிதான் விளவங்கோடு. இந்த விளவங்கோடு வட்டார மொழியில் சங்க இலக்கியத்தில் உள்ள பல சொற்கள் உள்ளன. ஆனால் பலரும் எனக்கு மலையாளத் தாக்கம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

உதாரணமாக ‘படிஞாயிறு’ என்ற ஒரு மலையாளச் சொல் உண்டு. இதன் அர்த்தம் ஞாயிறு படிகின்ற இடம். அதாவது மேற்கு திசை. இந்தச் சொல் சங்க இலக்கியத்தில் உள்ளது. இப்போது இது தமிழா, மலையாளமா?

அணங்கு என்ற தமிழ்ச் சொல் உண்டு. அதை வடமொழிச் சொல் என்கிறார்கள். ஆனால் அணங்கு (வருத்துகின்ற தெய்வம்), சங்க இலக்கியச் சொல். எங்கள் பகுதியில் உள்ள அரிப்புச் செடிக்கு ‘சொறி அணங்கு’ என்ற பெயர் உண்டு.

ஆக இம்மாதிரியான பழந்தமிழ்ச் சொற்கள் எங்கள் பகுதியில்தான் உயிர்ப்புடன் உள்ளன. நாங்கள் பேசுகின்ற தமிழ் செந்தமிழ் அல்ல; கொடுந்தமிழ். அந்தக் கொடுந்தமிழில்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மேலும் மற்ற ஊர்களில் வழங்கப்படும் மொழி ஒரு தொடர்பு ஊடகமாகத்தான் இருக்கும். எங்கள் மொழி, மொழிக்குள் ஒரு மொழியை வைத்துள்ளது.

விளக்கமாகச் சொல்லுங்கள்...

அதாவது எங்கள் ஊரைப் பொறுத்தவரை பொதுவான வட்டார வழக்கிற்கு உள்ளே அடிமைப்பட்ட மக்களுக்கு எனத் தனி மொழி உள்ளது. நான் அந்த அடிமைப்பட்டவர்களின் மறுக்கப்பட்ட மொழியில் எழுதுகிறேன்.

எங்கள் முன்னோர்கள், ‘வெற்றிலை’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது; ‘பழுத்திலை’ என்றுதான் சொல்ல வேண்டும். அதுபோல, ‘காலை உணவைச் சாப்பிட்டேன்; உண்டேன்’ எனச் சொல்லக் கூடாது. ‘இளங்குடி குடிச்சேன்’ என்றுதான் சொல்ல வேண்டும். மதிய சாப்பாட்டிற்கு ‘உச்சக் குடி’. இன்னொரு விஷயம் பார்த்தோமானால் இரவுச் சாப் பாட்டைக் குறிக்கும் சொல்லே அவர்களுக்கு இல்லை.

ஆக அவன் இரவு சாப்பிட்டிருக்கவே மாட்டான். நாவிதர், சேரமார், பண்டாரம், பறையர், நாடார் போன்ற சாதியினர் எவரும் இம்மாதிரியான சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் இருந்தன.

நாஞ்சில் நாட்டிலிருந்து விளவங்கோட்டை எந்த அடிப்படையில் தனித்துப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள்?

மொழி மட்டுமில்லாமல் எங்கள் பகுதிக்குத் தனித்த அரசியல், பண்பாட்டுப் பின்புலம் உண்டு. உதாரணமாகக் கேரளத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டப் பகுதியைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க நடந்த போராட்டம் நாஞ்சில்நாட்டைவிட எங்கள் பகுதியில்தான் ஏ. நேசமணி தலைமையில் தீவிரமாக நடந்தது.

ஆனால் தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் இந்த அளவுக்குப் போராட்டம் நடைபெறவில்லை. ஈழத்தில் தந்தை செல்வா போராட்டத்தை முன்னெடுத்த அதே காலகட்டத்தில் இங்கே நேசமணி தலைமையில் தமிழ்த் தனி மாகாணம் கேட்டுப் போராடினோம்.

ஏன் உங்கள் பகுதில் இந்தப் போராட்டம் தீவிரமாக இருந்தது?

கேரளாவிற்கு உணவுப் பொருள்கள் வழங்கும் பகுதி இதுதான். இப்போதும் களியக்காவிளை சந்தையில் ஸ்டிரைக் என்றால் அடுத்தநாள் திருவனந்தபுரத்தில் தக்காளி நூறு ரூபாய் ஆகிவிடும்.

இது மட்டுமில்லாமல் செங்கல், மணல், கற்கள் எல்லாம் இங்கு இருந்துதான் போகின்றன. அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திலேயே உழைப்பாளிகள் நிறைந்த பகுதி இதுதான். இவ்வளவு வளமான பகுதியைத் தங்கள் வசமாக்க அவர்கள் நினைத்தார்கள்.

நாங்கள் அதை எதிர்த்துப் போராடினோம். அதுபோல நெய்யாறு இடதுகரை சானல் இந்த மாவட்டத்தின் வளத்தைக்கொண்டு கட்டப்பட்டது. ஆனால் அந்தத் தண்ணீரை இந்தப் பகுதிக்குத் தர மறுக்கிறார்கள். இதைப் பற்றிப் பேச ஆள் இல்லை. ஆனால் அன்றைக்கு நேசமணி இந்தப் பிரச்சினைக்காகக் கேரள மந்திரி சபையை ஒரு முறை கலைத்துப் போட்டார்.

உங்களுடைய ‘உக்கிலு’ கதையில் ஒரு பொது வாசகன் வாசிப்பதற்கான எளிமை இல்லையே?

எங்கள் ஊர் சந்தையில் சுமை தூக்கக்கூடிய ஒரு பெண் தொழிலாளியின் வாழ்க்கையைச் சொல்கிறேன். அந்த வாழ்க்கையைத் தரப்படுத்தப்பட்ட மொழியில் நான் எப்படி எழுத முடியும்? என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.

பனங்கிழங்கு விற்ற ஒரு பெண்ணுக்கு டிடிஆர் ‘Fine' அடித்திருக்கிறார். அதற்கு, “வாங்கித் தின்ன நன்னியைக் காட்டுங்கோ” எனப் பதில் சொல்கிறாள். இதை ‘வாங்கித் தின்ற நன்றியைக் காட்டுங்கள் துரைமார்களே’ என எழுத முடியுமா? குறைந்தபட்சம் அவள் சொற்களையாவது பதிவுசெய்கிறேன். அவள் குரலைப் பதிவுசெய்ய முடியவில்லை என்று வருத்தமும் எனக்கு உண்டு.

உரையாடல் இல்லாமல் கதை விவரிப்புக்குக்கூட வட்டார வழக்கைப் பயன்படுத்துகிறீர்கள்...

பெரும்பாலும் அப்படி இல்லை. சமயங்களில் என்னை அறியாமல் வெளிப்பட்டுவிடுகிறது. நான் வட்டார வழக்கிற்குப் பிரயத்தனப்படவில்லை. அது இயல்பாக வந்துவிடுகிறது.

உங்கள் கதைகளில் கிறித்துவ மதத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறீர்கள்...

கிறித்துவம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. ஜாதிக் கட்டுகளிலிருந்து விடுவித்த மதமே மக்களை மதக் கட்டுகளுக்குள் கொண்டுபோய்விட்டது.

கிறித்துவ மதம் ஓர் அதிகார மையமாகிவிட்டது. மதக் கட்டுப்பாடுகளை எதிர்க்கக் கூடிய சிந்தனை இங்கு உருவாகியது. அதை என் கதைகளில் ஆதரிக்கிறேன்.

இப்போது என்ன எழுதிவருகிறீர்கள்?

மூக்கு என்ற ஒரு நாவலை எழுதி முடித்திருக்கிறேன். அதிகாரமையங்களின் மூக்கை உடைப்பதுதான் இந்த நாவல். மேலும் விளவங்கோட்டு வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்து வருகிறேன்.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x