Published : 07 Jul 2018 10:02 AM
Last Updated : 07 Jul 2018 10:02 AM
உ
லகப் புகழ்பெற்ற ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின் தொடக்க வரி ‘அம்மா இன்று இறந்துவிட்டாள்’ என்றால், காமெல் தாவுத் எழுதிய ‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவலின் தொடக்க வரியோ ‘அம்மா இன்னும் உயிரோடு இருக்கிறாள்’!
ஒரு செவ்வியல் படைப்பை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, அதன் கதையைப் புதிய முறையில் எடுத்துரைப்பதோ, அதன் கதாபாத்திரங்களில் வேறொன்றைத் தேர்ந்தெடுத்து அதன் கண்ணோட்டத்திலிருந்து கதையைக் கூறுவதோ பல புனைகதையாசிரியர்கள் கையாள்கிற உத்திகள். ஆனால், தாவுதின் நாவல் இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. இது, ‘அந்நியன்’ நாவலின் எதிரொலி; அதனுடன் நடத்தப்படும் தீவிரமான உரையாடல்.
சரி, தாவுதின் நாவலுக்குள் போவோம். காம்யுவின் நாவலில் அதன் நாயகன் மெர்சோவால் கொல்லப்படுகிறான் அல்லவா, அடையாளமற்ற ஓர் ‘அராபியன்’. அவனுக்கு அடையாளம் தந்து அவனுக்கான அரசியல்களைப் பேசும் நாவல் இது.
இந்த நாவலின் நாயகனாக வரும் ஹரூன், காம்யுவின் ‘அந்நியன்’ நாவலைச் சுருக்கமாகக் கூறும் இந்தப் பகுதி தாவுத் நாவலின் மையத்தைச் சொல்லிவிடும். ஹரூன் கூறுகிறான்: “ஆளற்ற கடற்கரையில் படுத்திருக்கும் ஒரு அராபியனை பிரெஞ்சுக்காரன் ஒருவன் கொன்றுவிடுகிறான். அப்போது பகல் இரண்டு மணி, 1942. ஐந்து துப்பாக்கிக் குண்டு வெடிகளும் அதைத் தொடர்ந்து ஒரு விசாரணையும். கொலைசெய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – தன் தாயாரின் சவ அடக்கத்தில் சரிவர நடந்துகொள்ளாததாலும், அவளைப் பற்றி மிக அலட்சியமான தொனியில் பேசியதாலும். பார்க்கப்போனால், கொலைக்குக் காரணம் வெயில், வெறும் சோம்பேறித்தனமும்தான். வேசி ஒருத்தியிடம் கோபத்தில் இருந்த ரேமோன் என்ற காட்டிக்கொடுப்பவன் கேட்டுக்கொண்டான் என்பதற்காக உன்னுடைய கதாநாயகன் மிரட்டல் கடிதம் ஒன்று எழுதுகிறான். இந்த விவகாரம் மோசமடைந்து ஒரு கொலையில் முடிகிறது. அந்த வேசிக்காக அராபியன் பழிவாங்கப்போகிறான் என்று கொலையாளி எண்ணியதோ, அந்த அராபியன் திமிர்பிடித்து பகல் உறக்கம்போடத் துணிந்தான் என்பதோதான் கொலைக்குக் காரணம். அதுதான் அப்பட்டமான உண்மை. மீதியெல்லாம் நகாசு வேலை. உன்னுடைய எழுத்தாளனின் மேதமை. அதன் பிறகு, அந்த அராபியனைப் பற்றியோ, அவன் குடும்பத்தைப் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. அந்தக் கொலையாளி சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தான் எப்படி இறைவனையும், பாதிரியாரையும், அபத்தத்தையும் எதிர்கொண்டான் என்று விவரித்து அதன் மூலம் பிரபலமடையும் புத்தகம் ஒன்றை எழுதுகிறான். இந்தப் புத்தகத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நியாயப்படுத்த முடியவில்லை. கொலைக் குற்றத்தைப் பற்றிய கதை இது. ஆனால், கதையின் இரண்டாவது முக்கியப் பாத்திரம் அராபியன். ஆனால், அவனுக்கென ஒரு பெயரோ, முகமோ, சொற்களோ இல்லை.”
எனினும், ஹரூனால் காம்யுவின் அற்புதமான மொழிநடையை சிலாகிக்காமல் இருக்க முடிவதில்லை: “...இரக்கமில்லாமல் செதுக்கப்பட்ட பாறைகளைப் போன்ற சொற்கள். கிரேக்க ஞானி யூக்லிடின் வடிவக் கணிதத்தைப் போல அலங்காரங்கள் எதுவுமற்ற மொழி. இவற்றின் கணத்தை அவன் அடைந்துவிட்டிருந்தான். பார்க்கப்போனால், முடிவில் ஒரு உன்னத மொழிநடை என்பது அதுதான்; உன் வாழ்க்கை உன் மீது சுமத்தும் இறுதிக் கணங்களைப் பற்றித் துறவுநிலைத் துல்லியத்துடன் பேசுவது… தன் சுவாசத்தின் சிக்கனத்துடன் சொற்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதைப் போல உலகத்தை விவரிக்கிறான். உண்மையில் அவன் யோகி”.
காம்யுவின் நாவல் வெளிவந்த 1942-ம் ஆண்டு காலனிய ஆட்சியின் மீதும் காலனியப் பார்வை மீதும் உக்கிரமான, கூரிய, கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது இந்த நாவல். அதேபோல, காலனியத்துக்குப் பிந்திய, சுதந்திரமடைந்த பின் படிப்படியாக ராணுவ ஆட்சிக்கும் மத அடிப்படைவாதிகளின் மேலாதிக்கத்துக்கும் உட்பட்ட அல்ஜீரியா மீதும் உக்கிரமான, கூரிய, கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம். அந்த வகையில், இந்த நாவலின் நாயகன் ஹரூனும் இங்கு ஓர் ‘அந்நியன்’ ஆகிவிடுகிறான்.
வெ.ஸ்ரீராமின் அற்புதமான தமிழாக்கத்தில் ‘க்ரியா’வால் நேர்த்தியாக வெளியிடப்பட்டிருக்கும் தாவுதின் நாவலில் காம்யுவின் பிற படைப்புகளைப் பற்றிய மறைகுறிப்புகள் (ஹரூனின் உரையாடல்களில்) காணப்படுகின்றன. காலனியப் பார்வையுடைய மானுடவியலாளர் லெவி-ஸ்டராஸும்கூட விட்டுவைக்கப்படவில்லை. அது மட்டுமல்ல; காம்யுவின் தாயைப் போலவே ஹரூனின் தாயும் வீட்டு வேலைபார்த்து பிழைத்துவந்தவளாகக் காட்டப்படுகிறாள்! இந்த நாவலின் கட்டமைப்பு பற்றி வெ.ஸ்ரீராம் எழுதியுள்ள பின்னுரைக்கு மட்டும் தனியாக ஒரு விலை தரலாம்.
- எஸ்.வி.ராஜதுரை,
மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர்.
தொடர்புக்கு: sagumano@gmail.com
மெர்சோ:
மறுவிசாரணை
காமெல் தாவுத்
தமிழில்: வெ.ஸ்ரீராம்
க்ரியா பதிப்பகம்
திருவான்மியூர்,
சென்னை - 600 041
தொடர்புக்கு:
72999 05950
விலை: ரூ.195
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT