Last Updated : 13 Jul, 2018 10:50 AM

 

Published : 13 Jul 2018 10:50 AM
Last Updated : 13 Jul 2018 10:50 AM

பக்தியைக் கடத்திய கலைகள்

சுவாமி வேதாந்த தேசிகனின்  750-வது  திருநட்சத்திரத்தை முன்னிட்டு ‘தேசிக பக்தி ஸாம்ராஜ்யம்’ என்ற 3 நாள் விழா சென்னை வாணி மகாலில் கொண்டாடப்பட்டது. இதை கலாச்சாரக் கலை விழாவாகவே நடத்தி, அந்த மகானின் நினைவில் பக்தர்களை மூழ்கவைத்தார் பக்தி உபன்யாசத்தில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் உ.வே.அனந்த பத்மநாபாச்சார்யார்.

சமஸ்கிருதம், தமிழ், மணிப்பிரவாளங்களில் நூற்றுக்கணக்கான கிரந்தங்களைப் படைத்தவர் சுவாமி வேதாந்த தேசிகன். அவரது படைப்புகளைக் கருவாகக் கொண்டும், பிரபந்தப் பாடல்கள், ராமானுஜரின் படைப்புகளைக் கொண்டும் வித்தியாசமான கலைநிகழ்ச்சிகளை நடத்தி, சாதாரண மாலைப் பொழுதை, இனிய பொன்மாலைப் பொழுதாக மாற்றினர் பங்கெடுத்த கலைஞர்கள்.

இயல், இசை, நாட்டியம், கருத்தரங்கம், கவியரங்கம், நூல் வெளியீடு எனப் பல கலை வடிவங்களிலும் சுவாமி தேசிகனின் திவ்ய சரிதம் மற்றும் அவரது நல்உபதேசங்களும், அவரது நூல்களின் பெருமையும் பிரதிபலித்தன.

ஹம்ச சந்தேசம்

காளிதாசரின் ‘மேக சந்தேசம்’ படைப்பால் கவரப்பட்டு, சுவாமி வேதாந்த தேசிகன் ‘ஹம்ச சந்தேசம்’ எனும் நூலைப் படைத்தார்.ராமன், சீதையிடம் தூது போக அன்னப் பறவையை அனுப்புவதுதான் ‘ஹம்ச சந்தேசம்’.இந்தநூல் பக்தி ரசத்தை மையப்படுத்தியதா, சிருங்கார ரசத்தை மையப்படுத்தியதா? என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கெடுத்த கருத்தரங்கம் நடந்தது.

திவ்யப் பிரபந்தப் பாடல்களை அடியொட்டி, வழக்கமாக ஆலயங்களில் மட்டுமே அரையர் சேவை அரங்கேறும்.  முதன்முதலாக, தேசிக பிரபந்தப் பாடல்களுக்கு பெங்களூருவில் இருந்து வந்திருந்த வெங்கடேசன், அரையர் சேவையை மேடையில் நிகழ்த்தினார்.

இவர்கள் சந்தித்தால்

‘இவர்கள் சந்தித்தால்?’ எனும் தலைப்பில் கூரத்தாழ்வானின் மனைவி ஆண்டாளும், சுவாமி தேசிகனின் மனைவி திருமங்கையும் சந்திக்கும் கற்பனை நிகழ்ச்சி

அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இதில் கல்லூரி மாணவியான பவித்ரா, ஆண்டாளாக நடித்து, கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் ஆஷா, திருமங்கையாக நடித்தும் சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்தினர்.

நமது உயர்ந்த கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் விழாக் குழுவினரின் நோக்கம் மேடையில் அரங்கேறியதை கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.பெங்களூரு வெங்கடேசனின் அரையர் சேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x