Published : 03 Jun 2018 09:28 AM
Last Updated : 03 Jun 2018 09:28 AM
கே
ரளாவில் 1975-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடந்த ஒரு அகில இந்தியக் கவிதைப் பட்டறையில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பும் வழியில்தான் முதன்முறையாக சிவராம் மதுரை வந்தார். அவரை ரயில் நிலையத்தில் சந்தித்து, அழைத்துச்சென்று குமாரசாமியின் பெரியநாயகி அச்சகம் மாடி அறையில் தங்கவைத்தேன். அவ்வப்போது பல்கலைக்கழகம் போய் வந்துகொண்டிருந்ததைத் தவிர பிற நேரங்களில் முடிந்தவரை அவருடன்தான் இருந்தேன். மேதமையில் மிளிரும் உடல்மொழியும் பேச்சுமொழியும் கொண்டவர். எடுத்த எடுப்பிலேயே ஒருமையில்தான் உறவாடினார். சுந்தர ராமசாமியை உத்வேகத்தின் உள்ளார்ந்த அமைதி என்று கொண்டால், தருமு சிவராமை உத்வேகத்தின் எக்காளம் என்று கொள்ளலாம். அவருடைய உரையாடல்கள், பெரும்பாலும், அன்றைய சிறுபத்திரிகைச் சூழலின் மொண்ணையான தீட்சண்யமற்ற போக்குகள் பற்றியும், படிந்திருந்த கசடுகள் பற்றியும், ஒரு லட்சியப் பிடிமானத்தோடும் ஆவேசமாகவும் வெளிப்பட்டன. கிண்டலும் கேலியும் நக்கலும் சர்வ அலட்சியமாகத் தெறித்தன.
உலக இலக்கியத்தில் அவரை ஆட்கொண்ட ஆளுமைகள், தத்துவ மேதைகள் பற்றிப் பேசும்போது அவரிடம் வெளிப்படும் கனிவு, நம்மையும் அவர்களிடம் சரணடைய வைக்கும். இவ்வகையில், அவர் வழியாக ஹென்றி மில்லர், விளாதிமிர் நபக்கோவ், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அறிந்துகொண்டேன். நபக்கோவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நெல்மணி என்றார். ஹென்றி மில்லர் நாவல்களின் பல பக்கங்களில் சதைகள் தொங்கும். ஆனால், அதனைக் கடந்து மனித இருப்பின் பிரபஞ்ச கதியை அணுகியவர் என்றார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் டிசம்பர் மாத அடையாறு ஆலமரத்தடி உரையாடல்களின் மகத்துவம் பற்றியும், அவருடைய தோற்றம், வெளிப்பாடு பற்றியெல்லாம் மிகுந்த பரவசத்துடன் சொல்வார். இம்மாதிரியான தருணங்களில், மனிதனின் பிரபஞ்ச இருப்பு பற்றிய சிவராமின் படைப்பு மன ஒளிச் சிதறல்கள் அநாயாசமாகத் தெறிக்கும். உள்ளுணர்வின் சமிக்ஞைகளை, தர்க்கத்தின் பாய்ச்சல்களில் முடிவுகளாக முன்னிறுத்தும் ஓர் அபூர்வ ஆற்றல் அவரிடம் இருந்தது. அவருக்கு இணையான அபூர்வ மூளையை நான் இதுவரை சந்தித்ததில்லை.
அதேசமயம், அவருடைய நடவடிக்கைகளின் சில விசித்திரங்களைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிரமங்களும் சங்கடங்களும் இருந்தன. அவர் பெரியநாயகி அச்சகத்தில் தங்கியிருப்பதை அறிந்து, ஜி.நாகராஜன் ஒருநாள் காலை வந்தார். என்னுடைய 17 வயதில் ஜி.நாகராஜனின் மாணவன் நான். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அன்று அவரைப் பார்த்தபோது, அவர் ஒரு முக்கியமான படைப்பாளி என்பதை அறிந்திருந்தேன். அவரை ஆசிரியராகப் பார்த்த காலத்தில் இருந்த மிடுக்கும் பொலிவும் குன்றி வதங்கியிருந்தார். தற்செயலாக அவரைப் பார்த்ததில் என் மனம் கிளர்ந்தது. ஆனால், சிவராம் அவரோடு முகம் கொடுத்துப் பேசவில்லை என்பதோடு மிக அசட்டையாக அவரைப் புறக்கணித்தார். என்னிடம், ‘வா, கொஞ்சம் வெளியில் போகலாம்’ என்றார். நான் நாகராஜனிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதற்கு முன்பாக சிவராம் வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டார். 1973-ல் சிவராம் ‘ஞானரதம்’ இதழில் எழுதியிருந்த ‘சதுரச் சிறகு’ என்ற சிறுகதைக்கு ஜி.நாகராஜன் அதன் பிந்தைய இதழில் எழுதிய விமர்சனம்தான் அந்தப் புறக்கணிப்புக்கான காரணமாக இருக்கக் கூடும் என்பதைப் பின்னாளில் அறிந்துகொண்டேன். ஆனால், அவரோடு வெளியில் சென்றபோது நாகராஜனின் குடி, ஒழுங்கீனங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இப்படியான ஆட்களை ஆதரிக்கக் கூடாது என்றார்.
மதுரையில் அவருடைய முதல் தங்கலின்போது ஓர் அபூர்வமான நிகழ்வு தற்செயலாக நடந்தேறியது. என்னுடைய அக்காலகட்ட ஆதர்சங்களாக இருந்து என்னை இயக்கிய மூவரில் மற்றொருவரான வெங்கட் சாமிநாதன் அச்சமயத்தில் இரண்டு நாள் விஜயமாக மதுரை வந்தார். ‘மணி பதிப்பகம்’ மணி ஏற்பாட்டில் டவுன் ஹால் ரோடு ராம்சன் லாட்ஜில் தங்கினார். அச்சமயத்தில் சாமிநாதனோடும் எனக்குக் கடிதத் தொடர்பு இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதியச் சாப்பாட்டுக்கு அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்திருந்தேன்.
அம்மாவின் அருமையான ஆட்டுக்கறி சமையல். சிவராமையும் வரச் சொன்னேன். வெங்கட் சாமிநாதனும் சிவராமும் கடும் பிணக்கில் இருந்த காலம். நான் சற்றும் எதிர்பாராதவகையில் சிவராம் கொஞ்சமும் முரண்டாமல் சம்மதித்தார். சாப்பாட்டுக்குப் பின் வீட்டில் என் அறையில் இருவரும் நேரடியாக முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளாமல் என்னை முன்னிறுத்தி சி.சு.செல்லப்பா பற்றி இலக்கிய சர்ச்சை செய்துகொண் டிருந்தனர்.
பின்னர், லாட்ஜிற்கு சாமிநாதன் கிளம்பியபோது சிவராமிடம், ‘நீங்களும் ரெண்டு நாள் சாமிநாதன் அறையிலேயே தங்கிவிடுங்களேன். நானும் அவரோடுதான் இருக்கப்போகிறேன். எனக்கும் அங்கும் இங்குமாக அலைவது மிச்சமாகும்’ என்றேன். சம்மதித்து கூடவே லாட்ஜிற்கு வந்தார். மாலையில் ஓரிரு நண்பர்கள் வந்தார்கள். ஓர் அறைக்குள் இரு சந்திப்புகள் என்பதாக அமைந்தன. எல்லோரும் போன பிறகு, எங்களுக்கிடையே சூழல் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருந்தது. இரவு உணவுக்குப் பின், வெ.சா. ‘வாய்யா, கொஞ்சம் வெளியே போகலாம்’ என்றார். நான் சிவராமிடம் சொல்லிவிட்டு, சாமிநாதனோடு வெளியே போனேன். ‘ஏதாவது சினிமாவுக்குப் போயிட்டு ரூமுக்கு லேட்டா வரலாம்’ என்றார். சாமிநாதனிடம் கேட்டுவிட்டுத்தான் செய்திருந்தேன் என்றாலும் சிவராமை அவருடைய அறைக்கு அழைத்துவந்திருக்கக் கூடாதோ என்று சங்கடமாகிவிட்டது.
காலையில், இருவரும் கட்டிலில் அமர்ந்தபடி சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். தாமதமாக எழுந்த நான் அவர்களைப் பார்த்து மலர்ச்சியுடன் முறுவலித்தபோது அவர்களும் சுபாவமாகச் சிரித்தார்கள். எனக்குப் பெரும் ஆசுவாசமாக இருந்தது. அன்றிரவு சாமிநாதன், மதுரையிலிருந்து தஞ்சாவூர் கிளம்பினார். சிவராம் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் சென்னை கிளம்பினார்.
புது மலர்ச்சியடைந்திருந்த இவர்களின் நட்பு, சாமிநாதனின் கலை இலக்கிய எதிர்ப்புக் குரலின் ஆவேசத்தில் வசீகரமடைந்திருந்த மூன்று இளைஞர்களான மணி, ஜெயபாலன், டேவிட் சந்திரசேகர் ஆகியோருடன் உறவு ஏற்பட சிவராமுக்கு வழிவகுத்தது. ‘மணி பதிப்பகம்’ சிவராமையும் அணைத்துக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, சிவராமின் ‘கைப்பிடியளவு கடல்’ கவிதைத் தொகுப்பு அவர்களால் கொண்டுவரப்பட்டது. இந்த உறவின் நெருக்கத்தில், கொடைக்கானலில் வேளாண் அலுவலராகப் பணியாற்றிய ‘மணி பதிப்பகம்’ ஜெயபாலனுடன் 1976-ல் கொடைக்கானலில் ஒரு மாதம்போலத் தங்கியிருந்த சிவராம், அங்கிருந்து இரண்டாம் முறையாக மதுரை வந்தார். இம்முறை, பல மாதங்கள் மதுரையில் தங்கினார். இக்காலகட்டம் அவரோடு நெருங்கி உறவாட ஏதுவாக அமைந்தது. தகிக்கும் ஓர் அபூர்வ மூளையின் வெம்மையில் என் நாட்களும் தகித்தன.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT